tamilnadu

img

விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக எளமரம் கரீம் எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்

திருவனந்தபுரம்:
 திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் தவறான அறிக்கை அளித்ததற்காக மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எதிராக சிபிஎம் மாநிலங்களவை தலைவர் எளமரம் கரீம் எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அவையின் விதி 187ன் கீழ் மாநிலங்களவை பொதுச்செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஏலம் விடும் செயல்முறை நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு வருவதால் இந்த விவகாரம் குறித்து மத்தியஅரசு இறுதி முடிவு எடுக்க வில்லை என்று எலமரம் கரீமின் கேள்விக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருந்தார். ஆனால், விமான நிலையம் மற்றும் அதனுடன் தொடர் புடைய நிலங்களை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு  ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.குத்தகை அனுமதி தொடர்பான பிரச்சனைகள் கேரள உயர்நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படுவதாகவும், எனவே அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் மார்ச் 11, 2020 அன்று, சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மாநிலங்களவையில் கேள்வி எண் 1936 க்கு பதிலளித்தார். உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் பின்னரே இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று இந்த அறிக்கையின் மூலம் நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் அரசின் உறுதிமொழியாக அமைச்சர் கூறினார்.தற்போதைய இந்த உறுதிமொழிக்கு நேர்மாறானமுடிவு மேற்கொள்ளப்பட்டுள் ளது. வேறு வார்த்தை களில் கூறுவதானால், நாடாளு மன்றத்தை தவறாக வழிநடத்த அமைச்சர் வேண்டுமென்றே தவறான தகவல்களை வழங்கினார். இந்த பதில் சரியானது என்று வாதிட்டால், அமைச்சரும் அரசாங்கமும் சபையில் அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கை மீறப்பட்டுள்ளது. எந்த வகையிலும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளை அப்பட்டமாக மீறினார்.

அவை விதிகளின்படி, ஹர்தீப் சிங் பூரியின் செயல் உரிமை மீறல். அரசாங்கத்தின் முடிவு நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே, நோட்டீஸில், மாநிலங்களவை நடைமுறையின் 187 முதல் 203 விதிகளின்படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எளமரம் கரீம் கேட்டுக் கொண்டுள்ளார்.

;