tamilnadu

img

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்க!

புதுதில்லி:
எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் கருத்துவேறுபாடு உடையவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் எட்டு எதிர்க்கட்சித் தலை வர்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.இந்த கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட்கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, லோக் தந்ரிக் ஜனதா தளம் பொதுச் செயலாளர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆகியோர் கையொப்ப மிட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவருக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடும் நாட்டு மக்களும் போராடிக்கொண்டிருக்கிற சமயத்தில், நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களும், மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும் அரக்கத்தன மான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எங்களின் ஆழ்ந்த கவலையையும் கண்ட னத்தையும் தெரிவித்துக் கொள்வதற்காக இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதியிருக்கிறோம்.உலகம் முழுவதும் இன்றைய தினம் தங்கள் நலன் மற்றும் தங்களை நேசிப்பவர் களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயமும், நிச்சயமற்ற தன்மையையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது, மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவி, கொரோனா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் சமாளிப்பதில் மட்டுமே கவனம்செலுத்துவதாக இருந்திட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் கோடானுகோடிமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வா தாரங்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் “உங்கள் அரசாங்கத்தின்” முன்னுரிமை அவர்களின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு உதவுவதாக இருந்திட வேண்டும்.  புலம் பெயர் தொழிலாளர்களில் பலர் தங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் இழந்து, பசி-பஞ்சம்-பட்டினியுடன் சோர் வடைந்து பல ஆயிரம் மைல்கள் நடந்தே தங்கள் இல்லங்களை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணம் மற்றும் ரேசன் பொருள்களை அளித்திட அநேகமாக எதுவும் செய்யவில்லை.

மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை
உலகில் பல நாடுகள் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவாமல்தடுப்பதற்காக, சிறைகளில் அடைக்கப்பட்டி ருந்தவர்களை விடுவித்திருக்கின்றன. இந்தியாவிலும்கூட, உச்சநீதிமன்றம் சிறையிலிருப்பவர்களை பிணையிலோ அல்லது தண்டனைக் காலத்தைக் குறைத்தோ சிறைகளிலிருந்து விடுவித்து, சிறைகளில் கூட்டத்தைக் குறைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மும்பையில் ஆர்தர் ரோடு சிறையின் நிலைமை இத்தகைய ஆபத்துகளுக்கு ஒரு சாட்சியமாக இருக்கிறது. டாக்டர் ஜி.என்.சாய்பாபா போன்ற மிகவும் மோசமான மருத்துவ நிலைமைகளில் இருக்கக்கூடிய ஊனமுற்றவர்களும் மற்றவர்களும் முறையான மருத்துவ சிகிச்சைக் காக அனுமதிக்கப்படவில்லை. இத்தகையசூழ்நிலையில் இந்த அரசு மேலும்கல்வியாளர்களையும், செயற்பாட்டாளர் களையும், பெண்களையும், மாணவர்களையும் சிறையில் அடைத்து அவர்களின் உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அளவில் இடர்மிகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

தில்லி காவல்துறையின் அத்துமீறல்  - அராஜகம்
தில்லியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிடும்காவல்துறை, முழுமையாக அமைதியான முறையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட இயக்கத்தில் பங்கேற்றவ ர்களை, பெண்கள் உட்பட முக்கியமான செயற்பாட்டாளர்களை, அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துகொண்டிருக்கிறது. அவர்களை, தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறைச் சம்பவங்களுடன் இணைத்து பொய்க்குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது ஜோடித்துக் கொண்டிருக்கிறது.  இத்துடன், விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரி, எண்ணற்ற மாணவர்களை, சிறப்புப் பிரிவு காவல்துறை அழைத்து, மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 ஜேஎன்யுவில் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை வெறியாட்டங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்களையே குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட வெளியார் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் ஆளும் கட்சியின் முக்கியமான தலைவர்கள் உட்பட மதவெறி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகபல்வேறு வீடியோ பதிவுகள் நிறுவப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அனைவரும் சுதந்திர மாக உலாவரும் அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பின்மை அதிகரிப்பு
வடகிழக்கு தில்லியின் நடைபெற்ற மத வெறி வன்முறை வெறியாட்டங்களின்போது, காவல்துறையினர் உடந்தையாக இருந்து,குண்டர் கும்பல் முஸ்லிம் சிறுபான்மையினர் பகுதிகளைத் தாக்கியது குறித்து வீடியோ காட்சிகள் தெளிவாக உள்ள நிலையிலும்கூட, தில்லிக் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்துகொண்டிருப்பதும், சிறு பான்மை சமூகத்தினரை மட்டும் விசாரணை செய்து கொண்டிருப்பதும், அவர்கள் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

காலில் மிதிபடும் குடிமையுரிமை
ஆனந்த் டெல்டும்டே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ்மற்றும் பலர் எவ்விதமான சாட்சியமு மின்றி சிறையில் தொடர்ந்து அடைக்கப் பட்டிருப்பதும், நாட்டில் எப்படியெல்லாம் குடிமை உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு மற்று மோர் அதிர்ச்சியளிக்கும் உதாரணமாகும்.காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் மற்றும் பலரும் அடைப்புக்காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அதேபோன்று காஷ்மீரிகள் பலர் காஷ்மீரிலிருந்து வேறு பல மாநிலங்களில் பல்வேறு சிறைகளில்அடைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்க தாகும்.  

பழிவாங்கும் அணுகுமுறை
லல்லு பிரசாத் யாதவ், மிகவும் உடல்நலி வுற்றுள்ள நிலையிலும், அவரை சிறையில் மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் அடைத்து வைத்திருப்பதைத் தொடரும் இந்த அரசாங்கத்தின் பழிவாங்கும் அணுகுமுறையும் கண்டிக்கத்தக்கதாகும்.கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று க்கு எதிராக நாடும் நாட்டு மக்களும் ஒன்றுபட்டு நின்று செயல்பட வேண்டிய இத்தருணத்தில்  இந்த அரசாங்கம் கிளர்ச்சி யாளர்கள் மற்றும் அரசியல் கருத்துவேறுபாடு உடையவர்களுக்கு எதிராகபழிவாங்கும் போக்கைப் பின்பற்றுவதை நிறுத்திக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்வதன் மூலம் இந்த அரசாங்கம் தன் போக்கை மாற்றிக்கொள்ள நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று  அவர்கள் தங்கள் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
 (ந.நி.)

;