tamilnadu

img

தில்லியில் புதிய குறைந்தபட்ச ஊதியம் அமல்... தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் வெற்றி

புதுதில்லி:
தில்லி மாநில அரசில் பணியாற்றும் சாதாரண (unskilled) தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத  ஊதியமாக ரூ.14,842 நிர்ணயித்து ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசாங்கம் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு வரவேற்றுள்ளது.

மேலும் ஓரளவு தொழில்திறன் கொண்ட (semi-skilled) மற்றும் திறன்படைத்த (skilled) தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி அறிவித்திருப்பதையும் கட்சி வரவேற்றுள்ளது.தில்லியில் இயங்குகின்ற இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் தில்லித் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களும், அத்துடன் சட்டரீதியாகவும் தில்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் போராடியதும் இவ்வெற்றிக்குக்  காரணங்களாகும்.  இந்த வெற்றிக்காக தில்லி தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெஞ்சார வாழ்த்துவதாக தில்லி மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.மத்திய பாஜக  அரசாங்கம் நாளொன்றுக்கு 178 ரூபாய் வீதம் மாதத்திற்கு வெறும் 4,628 ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் என்று கொண்டுவந்துள்ள ‘2019 ஊதிய விதிகள் சட்டத்தின்(Code on Wages Bill, 2019)’ ஒரு பகுதியாக அது அறிவித்திருப்பதற்கு முற்றிலும் மாறாக, தில்லி மாநில அரசாங்கம் 14,842 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது.வெறும் 4,628 ரூபாய் என்று அறிவித்ததில், பாஜக மற்றும் மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் குணம் அப்பட்டமாகத் தெரிகிறது.

இந்நிலையில் தில்லி அரசின் புதிய குறைந்தபட்ச ஊதிய அறிவிக்கையை வரவேற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதே சமயத்தில், தில்லி தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் குறைந்தபட்ச ஊதியம் பெறவில்லை என்கிற உண்மையையும் அடிக்கோடிட்டுத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. தில்லி அரசாங்கம் தொழிலாளர் நலத்துறை சார்பில் மேற்கொண்ட ஆய்விலிருந்து தில்லியில் பணியாற்றும் தொழிலாளர்களில் 98 சதவீதத்தினர் குறைந்தபட்ச ஊதியம் பெறவில்லை என்பதை  கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.தொழிலாளர்நலத்துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தில்லியில் 31 தொழிற்சாலைப் பகுதிகள் உள்ளன. ஆனால் தொழிலாளர் நலனை அமலாக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையோ 15 மட்டுமேயாகும். ஒரு தொழிற்சாலைப் பகுதிக்கு ஒரு அலுவலராவது நியமனம் செய்திட வேண்டும் என்று கோருகிறோம். தொழிலாளர் துறையில் புரையோடிப்போயிருக்கும் ஊழலைஒழித்துக்கட்டுவதற்கும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந-நி.)

;