tamilnadu

img

கொரோனா மரணங்களில் முரண்பாடு: அரசு மீது இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை:
கொரோனா மரணங்கள் தொடர்பாக, அரசு வெளியிட்டு வரும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் முரண்பாடு உள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. ஒரே நாளில் 1,927 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் மட்டும் 1,392 பேரைப் பாதித்துள்ளது. இந்த தகவல் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதாகும்.ஆனால், இதைவிட நோய்த் தொற்று அதிகம் என்றும், பலியானவர்கள் எண்ணிக்கை அரசு அறிவிப்பதைவிட அதிகம் என்றும் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது.சென்னையில் உயிரிழந் தோரின், உயிரிழப்புக்குரிய காரணத்தைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வரும் அறிக்கைகளில் முரண்பாடு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.ஊரடங்கு மார்ச் முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாகக் குறைவற்கு மாறாக நாள்தோறும் அதிகரித்து, மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் குறித்த பரிசோதனையை அதிகப்படுத்தி குறிப்பாக சென்னை மாநகரில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, அரசே நேரடியாக மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.மக்களிடத்தில் காணப்படும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்”.இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

;