tamilnadu

கொரோனா : பள்ளி - கல்லூரி மையங்களை இடம் மாற்ற உத்தரவு

சென்னை:
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:

கொரோனா பரவாமல் இருக்க முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியுடன் நடந்து கொள்வதையும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவது அவசியம் ஆகும்.இந்த நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் அக்டோபர் மாதம் கொரோனா நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு இடம் கொடுக்காத வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். மக்களிடையே சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.கொரோனா தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு உள்ள இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக நிறுவனங்கள், மீன் மார்க்கெட்டுகள், உணவகங்கள், மளிகை கடைகள் ஆகிய இடங்களில் இன்னும் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேலை பார்க்கும் இடங்களில் தேநீர் மற்றும் உணவு  இடைவெளியின் போது கூட்டம் சேருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

கொரோனா நோய் தொற்று பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல், சிகிச்சை மேற்கொள் வது போன்றவை மக்களின் முடிவை பொறுத்து உள்ளது. எனவே ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற வலியுறுத்த வேண்டும்.நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அக்டோபர் மாதம் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக செயல் பட்டு வருகிறது.விரைவில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங் களை இடம் மாற்றம் செய்ய வேண்டும். இன்னும் 2, 3 மாதங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.இதற்காக உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையுடன் இணைந்து அபராதங்கள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

;