tamilnadu

img

7.5 சத உள் ஒதுக்கீடு வழங்குக... மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.க்கள் கடிதம்....

சென்னை;
மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா
விற்கு தமிழக ஆளுநர்  43 நாட்களுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை மதித்து, இந்தச் சட்டமசோதாவிற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவிற்கு திமுக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். 

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர்.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர்  டி.ஆர்.பாலு எம்.பி மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் , நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான “மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020”, 15.09.2020 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு, இந்தக் கல்வியாண்டைப் பொறுத்தவரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகி விடும்.எனவே மருத்துவத்துறையை தங்கள் தொழிலாக அமைத்துக் கொள்ளும் அரசுப்பள்ளி மாணவர்களின் கனவினை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றும்படியாக “மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைவழங்கும் தமிழ்நாடு மசோதா 2020”-க்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு  கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;