tamilnadu

எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதா? பாஜக அரசுக்கு மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நியாயமாக நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும்  உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான  தில்லி காவல்துறைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதியான போராட்டத்தை ஒட்டி திட்டமிட்ட முறையில் வன்முறை நிகழ்ச்சிகள் நடந்தேறின. இதன் பின்னணியில் சங்பரிவார் கும்பல் இருந்தது என்ற குற்றச்சாட்டு‌‌ எழுந்தது. இது குறித்து முறையான விசாரணையை மத்திய அரசு நடத்தவில்லை.

தற்போது அமித்ஷா தலைமையின் கீழ் இயங்கி வரும் தில்லி காவல்துறை தில்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பிரபல பொருளாதார நிபுணர்  ஜெயதி கோஷ், சுயாட்சி அதிகார கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், ஆவணப்படத் தயாரிப்பாளர் ராகுல் ராய் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது வன்முறையை தூண்டிவிட்டதாக  தில்லி காவல்துறை வழக்கை பதிவு செய்ய முயற்சிக்கிறது.
 மத்திய அரசின் இத்தகைய கேடுகெட்ட ,பாரபட்சமான வஞ்சம் தீர்க்கும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தன்னை ஜனநாயக ரீதியாக எதிர்ப்பவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமான, பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகளும் தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும் ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து பாசிச தன்மையிலான ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக வலுவான கண்டனக் குரலை எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;