tamilnadu

img

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க சட்டவிரோத தடைகளை நீக்கிடுக... செப்.16-ல் மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

சென்னை:
சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகளை கடுமையாக்கியதைக் கண்டித்தும் சட்ட விரோத தடைகளை நீக்கக் கோரியும் செப்டம்பர் 16 அன்றுமாநிலம் தழுவிய அளவில் மாற்றுத்திறனாளிகள்  முற்றுகைப் போராட்டத்தை நடத்துகின்றனர்.இதுகுறித்து மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்தில் தனித்துறை இயங்கி வருகிறது. அலைக்கழிப்பை தடுக்கும் வகையில், மாதாந்திர உதவித்தொகையை இந்த ஒரே துறை மூலம் வழங்கிடச் சொல்லி மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நிர்வாகக் காரணங்களைக் காட்டி, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கும் வகையில் சமூகப்பாதுகாப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
வருவாய்த்துறை மூலம் பட்டுவாடா செய்வதில் சட்ட விதி மீறல்களும், லஞ்ச முறைகேடுகளும் கட்டுப்படுத்த முடியாத வகையில் நீடித்து வருகிறது.  அதிகாரிகளின் முறைகேடுகளை தடுத்து, மூப்பு அடிப்படையில் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி பல கட்ட பேச்சுவார்த்தை வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பேசிய அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது.  ஆன்லைன் முறையை எளிமையாக்கி அமல்படுத்தாமல், போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் விதத்தில் சட்ட விரோதமாக கடுமையாக்கி தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.இதனை கண்டிப்பதோடு, கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி செப்டம்பர் 16 அன்று சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்(எழிலகம்)திலும், மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களிலும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்.

சமூகநலத்துறை அரசாணை எண்.41-ன்படி40 சதவீத ஊனம் மற்றும் ஆண்டு வருமானம்ரூ.3.00 லட்சத்துக்கு கீழுள்ள 2016 ஊனமுற்றோர் சட்டப்படி மனநோய் பாதித்தோர் உள்ளிட்ட21 வகையினருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.  வயது வரம்பு, வறுமைக்கோடு, ஆதார், ரேசன் கார்டு,விஏஓ விசாரணை உள்ளிட்டசட்ட விரோத விதிமுறைகளை நீக்க வேண்டும்.75 சதவீத பார்வை, செவித்திறன் பாதித்தோர் உள்ளிட்ட அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடும் ஊனமுற்றோர் உதவித்தொகை ரூ.1,500 வழங்க வேண்டும்.  மூன்று மாதங்களுக்குள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ள பயனாளியின் எந்த ஒரு வங்கி கணக்கையும் ஏற்க வேண்டும். ஏடிஎம் வசதியை உத்தரவாதப்படுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் இணையத்தில் நேரடியாக  விண்ணப்பிக்க வசதி செய்ய வேண்டும்.  இ-சேவை மையங்கள் தடையற்ற சூழலுடன்  உருவாக்குவதும், அனைத்து மையங்களிலும் விண்ணப்பிக்க வசதியும் செய்யவேண்டும். அலைக்கழிப்பை தடுக்க வேண்டும்.விரைவில் மாற்றுத்திறனாளிகள் துறை மூலமே பட்டுவாடா செய்வதையும், தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;