tamilnadu

img

கடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் வங்கிகளில் தாமதமின்றி கடன் வழங்குக...

சென்னை:
விவசாய கடன் அட்டை (KCC) இல்லாததால் பெரும்பகுதியான விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேகடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தாமதமின்றி கடன் கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுக்க வேண்டும்என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பாசனத்திற்காக 8 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதிதிறக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையும் துவங்கியுள்ளது. விவசாய பணிகளில் ஈடுபட விவசாயிகள் தயாராகிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்அனைத்தும் விவசாய கடன் அட்டை (KCC)வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்று மத்திய அரசின் வழிகாட்டுதல்  அடிப்படையில் கூட்டுறவுத்துறை மாநில பதிவாளர் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.ஆனால், தமிழ்நாட்டிலுள்ள மொத்தவிவசாயிகளில் 25 சதவீதம் விவசாயிகளுக்குத்தான் இதுவரை விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பகுதியான விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் கடன் அட்டை வழங்கிட அரசு முயற்சிஎடுத்தாலும் இந்தப் பருவ வேளாண்மைக்கு கடன் பெற அது உதவாது. தேவையற்ற காலதாமதம் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, கடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தாமதமின்றி கடன் கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. இல்லையென்றால் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டும் கடன் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதை சுட்டிக்காட்டுகிறோம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதற்குரிய மனுக்களை மட்டுமே பெறும் என்றும், கடன்களை அனுமதிப்பது மற்றும் கடன் தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துவது அனைத்தும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால், காலப்போக்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூடப்படும் நிலை உருவாகும். கடன் பெறுவதில் ஏதாவது பிரச்சனையென்றால் கிராமத்திலிருந்து விவசாயிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைபாடு என்ன என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;