tamilnadu

img

போலீஸ் கொடூரத்தாக்குதலில் தென்காசி வாலிபர் மரணம்...

திருநெல்வேலி:
போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் தென்காசி வீ.கே.புதூர் வாலிபர்  மரணமடை ந்துள்ளார். இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன் ( வயது 25).குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்சனை சம்பந்தமான புகாரின் பேரில்கடந்த மே 8 அன்று போலீசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பி விட்டார். மீண்டும் மே 10 அன்று விசாரணைக்கு குமரேசனை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர்மற்றும் குமார் என்கிற போலீசும் சேர்ந்து மிகக்கொடூரமாக தாக்கியுள்ளனர். பூட்ஸ் காலால் வயிறு , முதுகு பகுதியில் மிதித்துள்ளனர். இரு
கால்களையும் நீட்டச் சொல்லி அதன் மீதுஇருவரும் பூட்ஸ் காலால் ஏறி நின்றுள்ளனர். முதுகில் கையால் மாறி மாறி குத்தியுள்ளார். லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும்,  சொன்னால் குண்டர் சட்டத்தில் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.உன் அப்பனையும் அடிப்போம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன குமரேசன் சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை.

 ஜூன் 10 அன்று குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். சுரண்டையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 12 அன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனை மருத்துவர் கேட்ட பிறகு தான் குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகளை சொல்லியுள்ளார். கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர், குமரேசனின் தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக எஸ்பி தெரிவித்தார். 

உரிய இழப்பீடு-விசாரணை வேண்டும்
இந்நிலையில் 16 நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் நேற்று (சனிக்கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையின் கடும் சித்ரவதையால் சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குமரேசனின் மரணமும் காவல்துறையின் மிருகத்தனமும் அம்பலத்துக்கு வந்துள்ளது.காவல்துறையின் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நெல்லை - தென்காசி மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. குமரேசன் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வேண்டும். குமரேசன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும். குமரேசன் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடும் வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;