tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி... குப்பைமேடுகள் அகற்றம், தெருவிளக்குகள் ஒளிர்ந்தன... தீக்கதிருக்கு நன்றி தெரிவித்த நாவல்காடு மக்கள்

நாகர்கோவில்:
தீக்கதிர் நாளிதழில் வெள்ளி யன்று வெளியான நாவல்காடு கிராமத்தின் அவலநிலை குறித்த நேரடி செய்தியின் எதிரொலியாக அதிகாரிகள் தலையிட்டு உடனடி தீர்வு காண முனைந்துள்ளனர். குப்பை மேடுகளை அகற்றி, தெருவிளக்குகள் பொருத்துப்பட்டுள்ளன.

குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் ஈசாந்தி மங்கலம் ஊராட்சியில் உள்ள நாவல்காடு கிராமத்தில் சுகாதாரக்கேடு, தெருவிளக்குகள் இல்லாதது பாதுகாப்பற்ற குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளன. இதுகுறித்து தீக்கதிரில் வெளியான செய்தித் தொகுப்பு மக்கள் பிரச்சனைகளை அம்பலப்படுத்தியது. உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால் தலையிட்டு ஜேசிபி மற்றும் லாரி அனுப்பி குப்பைகளை அகற்றவும், தெருவிளக்குகளை பொருத்தவும் ஏற்பாடு செய்தார்.

இதர பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக பிடிஓ தெரிவித்தார். பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அடுத்த வாரத்தில் அகற்றப்பட்டு ஒரு மாதத்தில் புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சாக்கடையால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க ஒரு வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கி குழி அமைப்பதற்கான திட்டம் உள்ளது. யார் வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.நீண்ட நாள் பிரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண உதவிய தீக்கதிருக்கும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பிடிஓவுக்கும், பாதிப்புக்குள்ளான மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் நாவல்காடு மக்கள் நன்றி தெரிவித்தனர்.            (ந.நி.)

;