tamilnadu

img

தொழிலதிபர்களின் வராக்கடன் பட்டியலை வெளியிடக் கோரியவருக்கு நீதிமன்றம் அபராதம்

மதுரை:
பெரிய தொழிலதிபர்களின் வராக்கடன்கள் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன் ரூ. 55 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யவேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் .

அதில், “நமது நாட்டில் பெரிய தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மத்திய- மாநில அரசுகள் கடன்களை வாரி வழங்கியுள்ளன.கடந்த 2005-ஆம் ஆண்டு வரை  பெரிய தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனாக உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளன. அது தற்போது ரூ.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை அரசியல் மற்றும் அதிகாரம் போன்றவற்றின் காரணங்களால் வசூல் செய்வதில் வங்கி நிர்வாகங்கள்,  அரசுகள் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட்டதில், வெறும் ரூ.55 ஆயிரம் கோடி மட்டுமே நிலுவையாக உள்ளன.ஆனால் இந்தக் கடன்களை வாங்கியவர்கள் சாதாரண மக்கள் என்பதால், இந்தக் கடன் தொகை பெற்றவர்களிடம் மட்டும் சட்ட விதிமுறைகளை மீறி கடன் தொகையை வசூல் செய்வதில் வங்கி நிர்வாகங்கள் கடுமை காட்டி வருகின்றன.

எனவே, மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்காக வழங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.  பெரிய மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்காக கடன் பெற்றுமீண்டும் திருப்பி செலுத்தாத பெரிய நிறு வனங்களின் பட்டியலை, தொலைக்காட்சி,  பத்திரிகைகளில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று  மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி. ரவீந்திரன் அமர்வு முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது,இதனை விசாரித்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரபட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். அபராதத்தை தலைமை நீதிபதியின் நிவாரண நிதியில் ஒரு வார காலத்திற்குள் செலுத்த உத்தரவிட்டனர்.

;