tamilnadu

img

பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடி கம்யூனிஸ்டுகள் வெற்றிபெறுவர்... ஏ.விஜயராகவன் முழக்கம்

மதுரை:
ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி, பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் என்று விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான  ஏ. விஜயராகவன் கூறினார்.

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்புபேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில்திங்களன்று நடைபெற்றது. இதில் விவசாயதொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும் கேரள இடது ஜனநாயக முன்னணியின் தலைவருமான ஏ.விஜயராகவன் சிறப்புரை யாற்றினார். அவர் பேசியதாவது: 

கம்யூனிஸ்ட் பேரியக்கம் கடந்த நூறாண்டுவரலாற்றில் தேச நலனை பாதுகாப்பதில் மகத்தான தியாகங்களை செய்துள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்களில் அடக்குமுறைகளை செங்கொடி இயக்கம் சந்தித்தது.சுதந்திரம் அடைந்த பிறகு ஆளும் வர்க்கம்பெரும் முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக் களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், தொழிலாளர்கள் நலனை முன்னிறுத்திப் போராடியது. 

கேரளத்தில் 1957இல் பதவியேற்ற  இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான அரசு உழுபவருக்கே நிலத்தை சொந்தமாக்கும் அரசாணையை பிறப்பித்தது.  நில வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தியது. இந்திய அரசியல் வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாகும். கம்யூனிஸ்ட்டுகளின் கையில் அதிகாரம் கிடைத்தால் அதை விவசாயிகள், தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க பயன்படுத்தும். இதை கேரளத்தில் செயல்படும் இடதுஜனநாயக முன்னணி அரசு ஏழை, எளிய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் முன்னுரிமை காட்டுகிறது.  ஆதிவாசி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பதில் முக்கியம் கவனம் செலுத்துகிறது. கல்வி, சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமை தருகிறது. அரசு பள்ளிகளைநவீனமயமாக்கி வருகிறது. இதன்மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தி வருகிறது.  அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறை கட்டுவதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் 25 ஆயிரம் ரூபாய் செலவில் கிடைக்கும் கல்வியை கேரளா அரசு மாணவர்களுக்கு இலவசமாக தருகிறது.

மருத்துவச் சேவையில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முக்கிய கவனம் செலுத்திவருகிறது. கொரோனா பாதித்த நோயாளி களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. மருத்துவச் சேவையில் மருத்துவர்கள், ஊழியர்கள் அர்ப்பணிப்பு டன் செயல்பட்டு வருகிறார்கள். 

அம்பானி, அதானிக்கேதேசத்தின் சொத்துக்கள்
கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.  ஆனால்கேரளத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பவில்லை. கேரளமே  எங்களுக்கு பாது காப்பு என்று இங்கேயே தங்கி விட்டார்கள். மாநில அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்குவதில்லை. சட்டப்படி தர வேண்டிய நிதியையும் தராமல் மறுத்து வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தை கொண்டு மக்களுக்கு சேவை புரிந்து வருகிறது. மத்திய அரசோ அதிகார மமதையில் தேசத்தின் சொத்துக்களை அம்பானி, அதானி கூட்டத்திற்கு விலைபேசி விற்று வருகிறது. விமான நிலையம், ரயில்வே துறை, துறைமுகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது.

நாட்டை நாசப்படுத்தும் பாஜக அரசு
பெரும்பான்மை மதத்திற்கு தாங்கள்  பாதுகாவலர்கள் என்று பசப்பிக்கொண்டு பாஜக ஆட்சியாளர்கள் நாட்டை நாசப்படுத்தி வருகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாட்டை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி பாசிச சித்தாந்தத்தை படிப்படியாக அரங்கேற்றி வருகிறார்கள். மதச்சார்பின்மை, ஜனநாயகம் நசுக்கப்படுகிறது. தொழிலாளர் நலன்கள் பறிக்கப்படுகிறது. போராடும் மக்கள் மீது கொடிய அடக்குமுறை ஏவப்படுகிறது. கேரளத்திலும் மற்ற மாநிலங்களிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வளர்ந்து வந்தகம்யூனிஸ்ட் கட்சி, பாசிச சக்திகளை எதிர்த்துப்போராடி வெற்றிபெறும் .ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை திரட்டுவதில் செங்கொடி மேலும்உயர்ந்து நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.பேரவைக்கு கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன்,  மாநிலச்செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர்  பங்கேற்றனர். விஜயராகவனின் மலையாள உரையை தீக்கதிர் ஆசிரியர் குழு ஆலோசகர் வி.பரமேசு வரன் தமிழில் மொழிபெயர்த்தார். (ந.நி.)

;