articles

img

‘அகத்தின் ஒளி’ யோ. ஜெயப்பிரகாஷ்

நூறு சதவீதம் பார்வை இல்லாத - ரயில்களில் யாசகம் பெறாமல்,  கடலை மிட்டாய் விற்றவர்,  கைக்குட்டை  விற்றவர் என்று தங்களது உழைப்பை யும்  கைத்தடியையும் நம்பியே பயணித்த வர்களுக்கு நாம் ஒரு உதவி செய்தால் என்ன என்ற அடிப்படையில் பார்வை குறை பாடு உள்ள மாற்றுத்திறனாளிகள்  மேம்பாட்டுக்காக செயல்படும் ஒரு அமைப்பினரை சென்று சந்தித்தோம். அங்கு சென்று அந்த இளைஞர்களை சந்தித்தபோதுதான் ஒரு மிகப்பெரிய விஷயத்தை உணர முடிந்தது.  

அவர் களது ஒருங்கிணைப்பில் ஏராளமான பட்ட தாரிகள், பி.எட் படித்தவர்கள், பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், கணினியில் விற்பன்னர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. லேப்டாப் எடுத்துச் சென்று அவர்களை இயக்குமாறு சொன்ன போது நாம் எப்படி இயக்குவோமோ அதைவிட உற்சாகமாகவும் ஊக்கமாகவும் பலரும் கணினியை இயக்கியது ஆச்சரியமாக இருந்தது.  அது மட்டும் இல்லாமல் பல்வேறு கணினி தொழில்நுட்பங்களையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.  

அவர்களுக்கான சிறப்பு செயலிகளை பயன்படுத்தி வெகு சிறப்பாக கணினியை இயக்கி சாதனை படைக்கிறார்கள் என்பதை நேரடியாக அறிய முடிந்தது. அவர்களிடம் பேசும் போது அவர்கள் சொன்ன மிக கசப்பான விஷயம் மனதை உறுத்தியது: “எங்கு சென்றாலும் நாங்கள் திறம்படவே செயல்படுகிறோம்.  கவனச் சிதறல் இல்லாமலேயே  செயல்படுகிறோம். ஆனால் எல்லா கம்பெனிகளிலும் எங்களுக்கு நல்ல  திறமை இருப்பினும்  ஒரு கட்டத்திற்கு மேல் எங்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.

நேர்முகத் தேர்வுக்கு சென்றால் எவ்வளவு திறமைகளை நிரூபித்து நேர்முகத் தேர்வில் பேசினாலும், அடுத்து அழைக்கிறோம்; கூப்பிடுகிறோம் என்று சொல்வார்கள். அவர்களது அழைப்பிற்காக காத்திருந்தது தான் மிச்சம். அப்படியே ஒரு சிலர் பணி  கொடுத்தாலும்  ஒரு கட்டத்தில் உங்களது ‘ப்ரடக்டிவிட்டி’ சரியில்லை என்பதை சொல்லாமல் சொல்லி  சற்று ஓய்வு கொடுக்கிறோம் என்ற ரீதியில் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.  திருப்பி அழைப் பதே இல்லை” என்று கூறியதோடு, பல்வேறு சிரமங்களையும் பகிர்ந்து கொண்டது எங்களது மனங்களில் ஏதேதோ செய்தது.

 எங்களது தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, மிகப்பெரிய பெண் ஆளுமை என்பதால் இப்பிரச்சனையை  உணர்வுப்பூர்வமாக அணுகி அதற்கான ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று  சொன்னார். அவர்கள் அனுப்பிய மூன்று  பேர் அடங்கிய குழுவில் நானும் இடம்  பெற்று இருந்தேன். பார்வைக் குறைபாடுள்ள இளைஞர்களை  (ஆண் - பெண்  இருபாலரையும்)  நேரில் சந்தித்து  பேசினோம். முதலில் நாங்கள் அவர்களுக்கு வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை.

பலமுறை அங்கு சென்று  திரும்பத் திரும்ப அந்த இளைஞர்களுடன் பேசினோம். நிச்சய மாக அகக் கண்களோடு தான் அவர்களிடம்  பேச முடிந்தது என்று சொன்னால் மிகை இல்லை.  அவர்களது ஒவ்வொரு அசைவையும்  கடந்த மாத காலமாக நான் பார்த்து  வருகிறேன். அவர்களது பயண ஏற்பாடுகள், அடிப்படைத் தேவைகளுக்காக அவர்களது முயற்சிகள் ஆகியவற்றை நேரடியாகக் காணும் போது எனக்கும் பார்வை போய் விட்டால் தான் என்ன என்ற  உணர்வு  ஏற்பட்டது.  

எங்கள் தலைமைக்கு ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தோம். எங்கும் வேலைக்கு அனுப்ப வேண்டாம்; நாமே இவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று  அவர்களுக்கு என்று தனியாக ஒரு முடிவு செய்தோம். பார்வை மாற்றுத் திறனாளி களுக்காகவே  பிரத்யேகமாக ஒரு ‘டெலி  காலிங்  மையத்தை’ ஆரம்பிக்க பரிந்துரை செய்தோம்.  கணினியில் நன்கு பரிச்சயம் பெற்ற   10 பேரை  ஒருங்கிணைத்து ஒரு மையத்தை  துவக்கினோம். அவர்களுக்கான மடிக் கணினி, சிறப்பு வடிவிலான ஹெட் போன்,  பட்டன் போன், கணினி இயக்க தேவை யான சிறப்பு செயலிகளை அவர்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாக பதிவிறக்கம் செய்து தந்தோம். இந்த மையத்தை துவக்குவதற்கு தனி யாக வாடகை வீடு பிடிக்க பல உரிமை யாளர்களிடம் பேசினோம்.  

அந்தப் பகுதியில் யாரும்  பார்வை குறைபாடு உடையவர் களுக்கு வீடு தர தயாராக இல்லை என்பது வேதனையான செய்தி . இந்த இளை ஞர்களை ஒருங்கிணைத்த பார்வையற்ற இளைஞர், நானே எனது வீட்டை தரு கிறேன் என்று அவரது வீட்டின் வராண்டா வில் இந்த மையத்தை ஆரம்பிக்கச் சொன்னார்.  ஒரு ‘டெலி’ சென்டரை அங்கேயே அமைத்தோம். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். எங்களது நிறு வன தலைமை இயக்குனர் தனது குடும்பத்தாருடன் வந்து இந்த  மையத்தை துவக்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் மிக நெகிழ்ந்து பேசியது மறக்க முடியாத தருணம்.  சேவை உள்ளம் கொண்ட சிலரையும் அழைத்தோம். பார்வை மாற்றுத் திற னாளிகள்   அங்கேயே தங்கி  ‘டெலி சென்டர்’ பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். அவர்கள் தங்கினால் அதற்கான செலவு, உணவு செலவுகளையும் சில புரவலர்கள் மூலமாக பெற முடிந்தது.   மாற்றுத்திறனாளி இளைஞர்கள் அனைவருக்கும் ‘டெலி’ சென்டரில் பணியாற்ற  தேவையான உபகர ணங்கள் வழங்கியதோடு ஒவ்வொரு வருக்கும் மாதம் ரூபாய்  10000 ஊக்கத் தொகை ஊதியமாக கொடுக்க எங்களது தலைமை முடிவு செய்தது.  பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு கௌரவமான ஒரு வேலைவாய்ப்பை  வழங்கி இருக்கிறோம்.

திறமை வாய்ந்த முற்றிலும் பார்வையில்லாத ஆண் - பெண் பட்டதாரிகள்  லோக்கல் ட்ரெயி னில், பேருந்து நிலையத்தில் கடும் வெயி லில் அலைந்து திரிந்தவர்கள்  நாங்கள் அமைத்துக் கொடுத்த ஒரு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு அறையில் அமர்ந்து  கொண்டு வேலை செய்யத் துவங்கி யிருக்கிறார்கள். ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு இணையாக அங்கீகாரம் பெற்று இவர்கள் பணி செய்து வருகிறார்கள்.  கண் பார்வை இல்லாத இந்த இளை ஞர்கள்  பொதுமக்களுடன் தொலைபேசி வழியாக உரையாடி வருகிறார்கள். மக்கள்  நலம் சார்ந்த திட்டங்களுக்காக இவர்களது உரையாடல் துவங்கி உள்ளது. உள்ள படியே ஒரு புதிய நம்பிக்கையையும் புதிய வெளிச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கட்டுரையாளர் : ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் துணை பொது மேலாளர்

;