articles

img

ரிசர்வ் வங்கியின் விபரீத விளையாட்டு - அறிவுக்கடல்

கடந்த வாரத்தில் 3 நாட்களுக்குள் வெளியாகி யுள்ள 3 தனித்தனி செய்திகளை ஒருங் கிணைத்துப் பார்ப்பது அவசியமாக இருக் கிறது. 

1. ஏப்ரல் 24 அன்று, கோட்டக் மகிந்த்ரா வங்கியின் மீது சில தடைகளை விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

2. ஏப்ரல் 25 அன்று, டாக்சார்ஜ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வாலட்டில் நிதி திரட்டுவதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்கு மாறும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

3. ஏப்ரல் 26இல், சிறுநிதி வங்கிகள் விருப்பப் பட்டால் முழுமையான (ஷெட்யூல்ட்) வங்கிகளாக மாறிக்கொள்ளலாம் என்று அதே ரிசர்வ் வங்கி அறி வித்திருக்கிறது. 

4. அதே நாளில், அமெரிக்காவில் ரிபப்ளிக் ஃபர்ஸ்ட்  பேங்க் கார்ப் என்ற வங்கியின் நிலை மோசமாக இருப்பதால், வேறு ஏதாவது ஒரு வங்கியிடம் விற்க, அமெரிக்க நிதித்துறை முயற்சித்துக்கொண்டிருக்கிற செய்தி வெளியானது. கடந்த ஆண்டில் திவாலான சிலிக்கன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி ஆகியவற்றுக்குப்பின் இது மிகப்பெரிய திவாலாக இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன. சில மாதங்களுக்கு முன்தான் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின்மீது தடைகள் விதிக்கப்பட்டு, அதன் செயல் பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டன என்ற பின்னணி யுடன் சேர்த்து, கோட்டக் வங்கியின்மீதான தடைகளை கவனிக்க வேண்டியுள்ளது. கோட்டக் வங்கி ஏராளமான விதி மீறல்களில் ஈடுபட்டதாகவும், 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பலமுறை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டி யும், அவ்வங்கி சரிசெய்யவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கூறுகிறது. 

திவாலான வங்கிகள்

இந்தியாவில் 1913இலிருந்து 1934 வரை 350 வங்கி களும், 1935இலிருந்து 1947 வரையான காலத்தில் சுமார் 900 வங்கிகளும் திவாலாயின. விடுதலைக்குப் பின் 1951இல் இந்தியாவிலிருந்த 566 வங்கிகளில், ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் இணைக்கப் படும் ஷெட்யூல்ட் வங்கி என்பதற்குத் தகுதியில்லாத நிலையில்தான் 474 வங்கிகள் இருந்தன. 1947இலிருந்து, 1969 வரையான காலத்தில் மேலும் 665 வங்கிகள் திவாலாகியிருந்த பின்னணியில்தான் வங்கிகள் தேசியமய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1969இல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நிலை யில், 1980இல் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டன. அதன்பின் இந்திய வங்கித்துறை என்பது, எப்போது வேண்டுமானாலும் வங்கி திவாலாகிவிடும் என்று அஞ்சுகிற நிலைமை மறைந்து, நம்பிக்கைக்கு ரியதாக மாறியது. ‘உங்க கிட்ட இருந்தா பேங்குல இருக்கிற மாதிரி’ என்ற சொலவடை, தேசியமயமாக் கப்பட்ட இந்திய வங்கித்துறை உருவாக்கிய நம்பகத் தன்மைக்குச் சான்று. ஆனால், 1990களில் தாராளமயம் அனுமதிக்கப் பட்ட பின்னணியில், 10 புதிய தனியார் வங்கிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவற்றில் டைம்ஸ் வங்கி என்பது 2000இல் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக்கப் பட்டுவிட்டது. பேங்க் ஆஃப் பஞ்சாப், செஞ்சுரியன் வங்கி ஆகியவை 2005இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, பின்னர் 2008இல் எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக் கப்பட்டன. குளோபல் ட்ரஸ்ட் வங்கியின் நெருக்கடியை நாம் மறந்திருக்க முடியாது. 2004இல் ஓரிண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்-சுடன் இணைத்து அதன் வாடிக்கையா ளர்களைக் காப்பாற்றியது ரிசர்வ் வங்கி.

சிறுசேமிப்பு பணத்திற்கு ஆபத்து

பாஜகவின் முந்தைய ஆட்சியில், 2003இல் இரண்டு வங்கிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவை யெஸ் வங்கியும், கோட்டக் மகிந்த்ரா வங்கியும். இதில் யெஸ் வங்கி ஏற்கெனவே 2020இல் திவால் நிலைக்குச் சென்று, பின்னர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடம் நிதி பெற்று காப்பாற்றப்பட்டதை மறந்திருக்க முடியாது. இப்போது கோட்டக் வங்கியின் முறை. இந்தச் செய்திகள் சுட்டிக்காட்டுவது ஒன்றைத்தான்.  இவ்வாறு புதிதாக அனுமதிக்கப்பட்ட வங்கிகள் சட்டங்க ளுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தயாராக இல்லை, அவை தவறிழைக்கும்போது, அந்தத் தவறுகளுக்கான தண்டனை அவற்றின் வாடிக்கையாளர்களாகிய பொது மக்களுக்குத்தான் கிடைக்கிறது என்பதுதான் அது. ‘வங்கிகளில் மக்கள் செய்துள்ள சிறிய சேமிப்புகள் பாது காப்பற்றவையாக இருக்கின்றன. வங்கிகள் திவாலாகும் போது அவற்றைக் காப்பாற்றுகிற பணியைச் செய்யத் தான் ரிசர்வ் வங்கி இருக்கிறதே தவிர, மக்களின் சேமிப்பைக் காப்பாற்ற அல்ல என்று தோன்றுகிறது’ என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் 1950இல் அன்றைய பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதியதாக ரிசர்வ் வங்கியின் வரலாறு குறிப்பிடுகிறது. பிஎம்சி வங்கி தொடங்கி தற்போது பேடிஎம் வங்கி வரை, தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் தவிக்கிற மக்க ளைப் பார்க்கும்போது, இந்த நிலை இன்றுவரை மாற வில்லை என்றே தோன்றுகிறது.  அதுசரி, மக்கள் கையிலிருக்கிற பணத்தையே செல விட முடியாமல், செல்லாததாக்கி, மக்களைத் தவிக்க விட்ட ஓர் அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? 

ரிசர்வ் வங்கியின் நோக்கம்தான் என்ன?

மோடி அரசு வந்தவுடன் சிறு நிதி வங்கிகள், பேமெண்ட்ஸ் வங்கிகள் என்ற இரு புதிய வங்கி வடிவங்களுக்கு அனு மதியளித்தது. அந்த பேமெண்ட்ஸ் வங்கிகள் என்று அனுமதிக்கப்பட்டவை அஞ்சல் துறையையும் சேர்த்து 11. கடைசியாக நடவடிக்கைக்கு ஆளான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியும் அப்படி அனுமதிக்கப்பட்டது தான். அப்படி 6 வங்கிகள் செயல்பட முடியாமல் போய் விட்டன. கடன் கொடுப்பது என்ற அடிப்படை வங்கிச் சேவை அனுமதிக்கப்படாததாலேயே பேமெண்ட்ஸ் வங்கிகள் மூடப்பட்ட நிலையில், சிறு கடன்கள் மட்டும் அளிக்க அனுமதிக்கப்பட்ட 12 சிறுநிதி வங்கிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தான், போதிய மூலதனம் இடத் தயாராக இருந்தால், முழுமையான, அதாவது, ரிசர்வ் வங்கியின் இரண்டா வது அட்டவணையில் இணைக்கப்படும் ஷெட்யூல்ட் வங்கித் தகுதியைப் பெறும் வங்கிகளாக மாறிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. சிறு கடன்களைப் பெரிய வங்கிகளில் பெறுவதில் உள்ள சிரமங்களைக் களைவதற்காகவே சிறுநிதி வங்கிகள் தொடங்குவதாகக் கூறிவிட்டு, அவற்றையும் முழுமையான வங்கிகளாக மாற்றுவது என்பது, ரிசர்வ் வங்கியின் நோக்கத்திலேயே தெளிவின்மை இருப்பதை வெளிப்படுத்துகிறது.

குறிப்பிட வேண்டிய மற்றொரு செய்தி என்னவென் றால், மேலும் புதிய வங்கிகள் தேவை என்று ரிசர்வ்  வங்கி கருதும்போது, அறிவிப்பு வெளியிட்டு, விண் ணப்பிப்பவர்களில் தகுதியான நிறுவனங்களைத் தேர்ந் தெடுக்கிற நடைமுறையையும் 2019இல் கைவிட்டது. அதற்கு பதிலாக ‘ஆன் டேப்’ - அதாவது வேண்டும் போது குழாயைத் திறந்து நீர் பெறுவதைப் போல - நிறு வனங்கள் விரும்பியபோது விண்ணப்பித்து, வங்கி தொடங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இவை அனைத்தையுமே, அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவைகளை எடுத்துச் செல்லும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் என்ற நோக்கத்திற்காகவே செய்வதாகக் கூறப்படுகிறது. 

பாதுகாப்பா? போட்டியா?

நாட்டின் மிகச்சிறிய கிராமங்கள்வரை பொதுத்துறை வங்கிகளின் கிளைகள் செயல்படுகிற நிலையில், வங்கிச் சேவைகளைத் தருவதற்காகப் புதிய வங்கிகள் என்ற கூற்றில் எவ்விதப் பொருளும் இல்லை. மக்க ளின் சேமிப்பைத் திரட்டிக் கையாளப் போகிற நிறுவ னங்களில் தேவை பாதுகாப்புத்தானே தவிர போட்டி அல்ல. அப்படிப் போட்டிதான் சிறப்பான சேவையைத் தரும் என்று நம்புகிற அமெரிக்காவில் வங்கிகள் திவால் என்பது வாடிக்கையான செய்தி என்பதைத்தான், கடை சியாக வெளியாகியுள்ள ரிபப்ளிக் ஃபர்ஸ்ட் பேங்க் கார்ப் வங்கியின் திவால் நிலை செய்தி வெளிப்படுத்துகிறது. 2008இன் நெருக்கடி, அதன் தொடர் விளைவுகள் ஆகி யவை அடங்கிய பின்னான காலம் என்ற அடிப்படை யில் எடுத்துக்கொண்டாலும்கூட, 2011-20 பத்து ஆண்டு களில் அமெரிக்காவில் திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 123. ஆனால், அங்கிருப்பதைப் போன்ற கடுமையான சட்டங்களும், உறுதியான நடவடிக்கை களும் இந்தியாவில் இல்லை என்பதைத்தான் ரிசர்வ் வங்கியின் மற்றொரு அறிவிப்பு காட்டுகிறது. அதுதான் டாக்சார்ஜ் டெக்னாலஜீஸ் நிறுவனம் பற்றிய அறிவிப்பு. அந்த நிறுவனத்திடம் மக்கள் எச்ச ரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவிக்கி றது. ரிசர்வ் வங்கியிடம் எந்த அனுமதியும் பெறாமல், வாலட் என்ற பெயரில் மக்களிடம் நிதி திரட்டியிருக்கி றது அந்த நிறுவனம். அந்த நிதியை 15 நாட்களுக்குள் திருப்பித் தர அறிவுறுத்தியது மட்டும்தான் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை. அதற்கும் அந்த நிறுவனம் கால அவகாசம் கேட்க, 45 நாள் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. அனுமதியின்றி நிதி திரட்டிய நிறுவனத்தின்மீதே நடவடிக்கை எடுக்க முடியாத இந்த ஒழுங்காற்று அமைப்பு, இதன் அனுமதியுடன் தொடங்கப்படுகிற வங்கிகளின்மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.

சேமிப்பின் மீது விளையாடுவதா?

அப்படிக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்து கொண்டு, புதிய புதிய வங்கிகளைத் தொடங்க அனுமதி யளிப்பதும், அவற்றிற்கு ஷெட்யூல்ட் வங்கி போன்ற தகுதிகளை அளிப்பதும், மக்களின் சேமிப்பின்மீது விளையாடுவதாகவே அமையும். மக்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதிகரிக்க வேண்டியது அந்த சரக்கைத்தானே தவிர, கடைகளை அல்ல. அப்ப டித்தான், இருக்கிற பொதுத்துறை வங்கிகளின் கிளை களை அதிகரித்து, பாதுகாப்பான வங்கிச் சேவை அளிப்பதற்கு பதிலாக, இவ்வாறு ரிசர்வ் வங்கி புதிய நிறு வனங்களை அளிப்பது விபரீத விளையாட்டே.




 

;