districts

வனவிலங்குகளை வேட்டையாடியதாக வழக்கு

உதகமண்டலம், ஏப். 23- நீலகிரி மாவட்டம், வனப்பகுதி மிகுந்த  மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதி களில் இந்தியாவிலேயே அதிகமான புலிகள், யானைகள், காட்டெருமைகள், சிறுத்தை புலி, கரடி, அரியவகை சிங்க வால் குரங்கு, மான் இனங்கள் உட்பட தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.  இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட சில்வர் கிளவுட் தோட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் வாசலில் புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும்  சஜீவன் தங்கு அறையில் மேலும் ஒரு துப்பாக்கி, 11 தோட்டாக்கள்,  கத்திகள், ரத்தக்கறை படிந்த கோடாரி, டார்ச் லைட்டுகள்  மற்றும் ஒரு காற்று சுழல் துப்பாக்கி ஆகியவை வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

 இது குறித்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவனின் எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை நடத்திய போது சஜீவன் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சுப்பையா மற்றும் அவரது நண்பர்கள் துப்பாக்கியுடன் எஸ்டேட்டுக்கு வந்து வேட்டையாடுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்பேரில் வனத்துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட பைசல்,  சாபுஜாக்கோப், பரமன், ஸ்ரீகுமார், சுபைர், அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  

இதை அறிந்த எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான சஜீவன் உட்பட மூன்று பேர் தலைமறைவு ஆகினர். பைசல், சாகுஜேக்கப், பரமன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் வனத்துறையினர் நேர்நிறுத்தினர்.  முக்கியக் குற்றவாளியாக செயல்பட்ட அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் உட்பட மேலும் இருவரை வனத்துறையினர் தனிக்குழு அமைத்து தேடி வருகின்றனர். சஜீவன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;