states

உயர்நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து நாயக்கனேரி ஊராட்சி தலைவருக்கு நீதி வழங்கிடுக!

சென்னை, ஏப்.26- நாயக்கனேரி (தனி) ஊராட்சி மன்ற தலைவருக்கு நீதி வழங்கிட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், நாயக்கனேரி (தனி) ஊராட்சி மன்றத்தின் தலைவராக அக்டோபர் 2021 இல் நடைபெற்ற தேர்தலில் பி.இந்துமதி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் கே.சிவகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ரிட்மனு எண் 19864 / 2021 என்கிற அவ்வழக்கை காரணம் காட்டி இந்துமதிக்கு தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.  இரண்டரை ஆண்டு கடந்துவிட்டது மாவட்ட நீதிமன்றத்தில் தேர்தல் வழக்காகத்தான் இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு மாறாக உயர்நீதிமன்றத்தில் ரிட்மனுவாக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.  உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்கு திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறது.   சமூக நீதிக்குப் புறம்பானது தேர்தல் நடந்து இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் அலட்சியப்படுத்துவது நீதிக்குப் புறம்பானது. தலித் பிரிவைச் சார்ந்த பி.இந்துமதி நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள முடியாமல் தடுப்பது சமூக நீதிக்குப் புறம்பானது.   இந்த வழக்கை விரைந்து முடிப்பதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உண்மையில் முயற்சி எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.   எனவே மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளாவது பி.இந்துமதி நாயக்கனேரி ஊராட்சித் தலைவராக செயல்படும் வகையில் உயர்நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்திட மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையும், தமிழ்நாடு அரசின் மாநில சட்டத்துறையும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;