states

img

மோடியின் வெறுப்புரையும் தமிழ் ‘இந்து’வின் பொழிப்புரையும் - மதுரை சொக்கன்

கருத்துரிமைக்கு ஒரு ஆபத்து என்றால் பொறுத்துக் கொள் ளாது தமிழ் இந்து ஏடு. தாவிக் குதித்து ஓடிவந்து, வாதிட்டு கருத்துரிமையை நிலைநாட்டியே தீரும். கருத்துக்களை முன்வைத்ததற்காகவே பாஜக ஆட்சி யில் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்களே. அவையெல்லாம் கருத்துரிமையில் சேராது. பீமா கோரே கான் நிகழ்விலே பங்கேற்றதற்காக, இந்திய நாட்டின் புகழ்பெற்ற அறிவு ஜீவிகள் காராக்கிரகத்தில் அடைக்கப் பட்டு கிடந்தார்களே. அவையெல்லாம் கருத்துரிமையில் சேராது. 

கரசேவை

இப்போது யாருடைய கருத்துரி மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது தெரி யுமா? பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அலறுகிறது தமிழ் இந்து ஏடு. ராஜஸ்தானில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்து மக்களின் சொத்துக்களை பறித்து, ஊடுருவல்காரர்களும் அதிக பிள்ளைகளை பெற்றுக் கொள்வோரு மான முஸ்லிம்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடுவார்கள் என்று வெறுப்பு அரசியலை வீசி எறிந்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தவுடன், ஆஹா! அப்பாவியான மோடியின் பேச்சுரிமையை பறிப்பதா? என வரிந்து கட்டிக் கொண்டு ஒரு தலையங்கத்தை தீட்டியதோடு, மக்களவைத் தேர்தல் களத்தில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறதா என்று தலைப்பிட்டு, அநாமதேயமாக ஒரு கட்டுரையையும் வெளியிட்டு கருத் துரிமைக்கு கரசேவை செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிக்கு எதிரான மோடியின் பரப்புரை குறித்து புகார் செய்யப்பட்டவுடன், தேர்தல் ஆணையம் ஒன்றும் மோடியின் பரப்புரையை தடை செய்துவிடவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவருக்கு நேரடி யாக விளக்கம் கேட்டு நோட்டீஸ்கூட அனுப்பவில்லை. பிரதமர் நட்சத்திரப் பேச்சாளராம். எனவே, அவர் பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு பாஜகவின் தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓனர் கோபித்துக் கொள்ளக் கூடாதே என்று நினைத்து அப்படியே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சொத்துக்களை பிரித்துக் கொடுப்ப தாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு  நோட்டீஸ் ஆணையத்தால் அனுப்பப் பட்டுள்ளது. வடிவேல் காமெடியில் வருவது போல, தென்னை மரத்தில் ஒரு குத்து, ஏணியில் ஒரு குத்து என தேர்தல் ஆணையம் ‘நடுநிலை’யோடு செயல்பட்டுள்ளது.

மோடியே பேச முடியாதது!

‘அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்று’ என்று தலையங்கத்திற்கு தலைப்பிட்டு, மோடியின் பேச்சு தேர்தல் நேரத்தில் வாக்கு அரசியலுக்கான புதிய நகர்வு என்கிறது தமிழ் இந்து ஏடு. சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை கைப்பற்றினால், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போட முடியும் என்றுதான் மோடி பேசினாரே தவிர, போடுகிறேன் என்று சொன்னாரா? என்று கேட்கிறது தமிழ் இந்து ஏடு. பிரதமர் மோடியே சமாளிக்க முடியாத ஒரு விசயத்தை எப்படி முட்டுக்கொடுக்கிறது பார்த்தீர்களா இந்த ஏடு.

இதுவா இந்துக்களின் கட்சி

இந்தியா அணியினர் மதச்சார் பின்மை என்று பேசுவதுகூட சிறு பான்மை வாக்குகளை பெறுவதற் காகத்தான். இந்திய நாட்டின் அர சியல் சாசனத்தின் முகவுரையில் மதச்சார்பின்மை என்று கூறப்பட்டுள் ளது. அந்த மதச்சார்பின்மையை பாது காக்க வேண்டும் என்று கூறுவது, இந்திய மக்கள் அனைவருக்குமானது. ஆனால், மதச்சார்பின்மை என்பது போலியானது என்று கூறிய அத்வானி யின் அகராதிதான், தமிழ் இந்து அலுவலகத்தில் இருக்கிறது போல. இந்துக்களின் கட்சி என்று ஆணித் தரமாக காட்டினால் மட்டுமே, பாஜக வால் அரசியல் செய்ய முடியும். அதன் வெளிப்பாடே பிரதமரின் இந்தப் பேச்சு என்கிறது அந்த ஏடு. பாஜக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி. ஆனால்  பட்டியலின மற்றும் பழங்குடி மக்க ளின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம் களுக்கு காங்கிரஸ் வழங்கிவிடும் என்று பொய்யுரைக்கிறது. பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் பிடுங்கப் பட்ட ஆணிகளெல்லாம், நாட்டு மக்க ளுக்கு தேவையில்லாத ஆணிதான். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதர வாக மக்கள் தலையில் ஆணி அடித்தது அந்தக் கட்சி. பாவம். பாஜக இந்துக் களின் கட்சி, வேறென்ன செய்யும் என வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறது தமிழ் இந்து ஏடு. தலையங்கத்தை முடிக்கும் போது, தூக்கத்திலிருந்து விழித்தது போல தேர்தல் ஆணையம் தலையிட்டு ஜன நாயகத்தை காப்பதில் தவறில்லை என்று எழுதியுள்ளது அந்த ஏடு.

பாஜகவின் தேர்தல் பிரிவு

தேர்தல் ஆணையமே பாஜகவின் தேர்தல் பிரிவாக மாறிவிட்ட நிலை யில், அது எப்படி தலையிடும்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர் நியமனத்தின் போது, ஆலோசிக்க வேண்டிய அவசிய மில்லை என மாற்றி ஆணையத்தின் கடைவாய்ப் பல்லையும் பிடுங்கி விட்டது மோடி அரசு. இந்த நிலையில், பக்கோடா சாப்பிட்டால் தப்பில்லை என ஆணையத்திற்கு ஆலோசனை கூறுவதில் அர்த்தம் உண்டா? கடைசிப் பக்க கட்டுரையில், சிலர்  ஜாடை மாடையாகப் பேசி வருகின்ற னர். சிலர்தான் துணிச்சலாக நேர்படப் பேசி வருகின்றனர். அவர்களது பேச்சுரிமையை பறிக்க முயற்சி செய்வது எந்த வகையில் நியாயம் என மோடியின் வன்மம் கலந்த வார்த்தை களை, விஷம் கக்கும் வெறுப்பை நேர்பட துணிச்சலாகப் பேசி வருகிறார் என்று பாராட்டிதழ் வாசித்து பரவசம் அடைகிறது தமிழ் இந்து ஏடு.  சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே காழ்ப்புணர்வுடனும் பேசுவது நேர்படப் பேசுவதாம். நல்ல வேளை, புதிய ஆத்திச்சூடியில் இந்த வார்த்தையைச் சொன்ன பாரதி, இப்போது உயிருடன் இல்லை. இருந்திருந்தால், மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில்... என்று கோபப் பட்டிருப்பார்.

பொய்ப் பிரச்சாரம்

வெறுப்புணர்வை தூண்டக் கூடாது என்று கூறும் தேர்தல் ஆணையம், எது எல்லாம் வெறுப்பு என்று சொல்ல வில்லை என்று பொறுப்போடு பருப்புக் கடைகிறது இந்த ஏடு. அமெரிக்கா வில் அகதிகள் பிரச்சனை பேசப்படுவ தில்லையா? டொனால்டு டிரம்பே இதை வைத்து டிரம்ஸ் அடிக்கவில்லையா என்றெல்லாம், மோடியின் முஸ்லிம் களுக்கு எதிரான பேச்சுக்கு சப்பைக் கட்டு கட்டி சப்பரம் ஓட்டுகிறது அந்த ஏடு. ஊடுருவல்காரர்கள், அதிகப் பிள்ளை பெறுபவர்கள் என்று மோடி பேசியதும் பேச்சுரிமையின் ஒரு பகுதிதானாம். கேரளா, அசாம் போன்ற மாநிலங் களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஆனால் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யப் பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் எண்ணிக்கை 80.5 சதவீதமாகவும், முஸ்லிம்கள் எண்ணிக்கை 13.4 சத வீதமாகவும் இருந்தது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்துக் களின் எண்ணிக்கை 79.8 சதவீதமாக வும், முஸ்லிம்கள் எண்ணிக்கை 14.23  சதவீதமாகவும் இருந்ததாக, இதே தமிழ் இந்து ஏடுதான் செய்தி வெளியிட்டுள்ளது. உயர்வும், குறைவும் ஒரு சதவீதம்தான். மொத்தத்தில் அந்தக் கட்டுரை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர் கனைசர் ஏடு பாணியில் எழுதப்பட்டுள் ளது. தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் அணுகுவதே அழும் குழந்தைகளுக்கு சமமானது என்று ஏகடியம் பேசி, அந்தக் கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.  இப்படியும்கூட மட்டமாக சிந்தித்து எழுத முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. என்ன செய்ய...? எதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் தான் அணுக வேண்டியுள்ளது. இன்னும் என்ன  வகையில் இந்த ஏடு முட்டுக் கொடுக்குமோ என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. 

விளம்பரம் செய்யுங்கள்

பிரதமரின் பேச்சுரிமையை யாரும் பறிக்கவில்லை. அவர்தான் தேசத்தின் பேச்சுரிமையை பறித்து வரு கிறார். தமிழ் இந்து ஏடு தனது மனச் சாட்சியை காணவில்லை என்று, தனது பத்திரிகையிலேயே ஒரு விளம்பரம் கொடுத்துவிட்டு, அதற்கான சன்மானத்தை பாஜகவிடம் பெற்றுக் கொள்ளட்டும்.






 

;