tamilnadu

img

மோடி ஆட்சியில் பெண்களின் நிலை

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்ற பொழுது, பெண்கள் முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு உறுதி மொழிகளை கூறினார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் வளர்ச்சியை நோக்கி பெண்களை கொண்டு செல்வதற்கு பதிலாக,பல்வேறு பிரச்சினைகளில் தள்ளிவிட்டு இருக்கிறது. மோடி ஆட்சியால்பொதுவாக பெண்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பெண்களின் கல்விக்கு நிதி குறைக்கப்பட்டது. மருத்துவ துறை வேகமாக தனியார் கைக்கு சென்ற நிலையில் சாதாரண பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சிறுபான்மை இன மக்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு அதிகமாக நடந்தது போன்ற காரணங்களால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். ஜுலை 2017 முதல் ஜுன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்ஓ) அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.5 கோடிமக்கள் தங்கள் வேலையை  இழந்துள்ளனர்.  இதனால் இந்த குடும்பங்களில் உள்ள சிறுவர் மற்றும் பெண்களின் நிலையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2017-2018-ம் ஆண்டில் மட்டும் பெண்களின் வேலை வாய்ப்பின்மை அதற்கு முந்திய வருடத்தை விட 13.6 சதவீதம் அதிகமாக காணப்பட்டது. 


 இதற்குமிக முக்கிய காரணமாக ஜி.எஸ்.டி.வரி முறையும், பண மதிப்பு நீக்கத்தால் நாட்டில் ஏற்பட்ட வேலை வாய்ப்பின்மையும் மிக முக்கிய  காரணமாகும்.  இதனால் நாட்டில் பெண்களின் வேலை வாய்ப்பு குறைந்தது. பெண்களின் சம்பள அளவு குறைந்தது.  இந்த  நிலை  தொடர்வதால் பெண்களின் கூட்டு பேர சக்தி குறைந்து கொண்டிருக்கிறது. இதனால் பெண்களின் சமூகப் பாதுகாப்பு பெரிய கேள்விகுறியாக மாறியுள்ளது.இந்த நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு சென்று கிராமப்புற பெண்கள் வேலைகேட்கிறார்கள். அரசோ இந்த திட்டத்திற்கு போதிய நிதியை ஒதுக்காமல் குறைக்கிறது.  கடந்த ஆண்டில் இந்த திட்டத்திற்கு தேவை 76,131 கோடி ரூபாய். ஆனால் அரசு ஒதுக்கியதோ 59,032 கோடி ரூபாய் மட்டுமே.2005-2006 -ம் ஆண்டில் இந்தியாவில்  36.3 சதவிகித பெண்கள் சம்பளம் வாங்கும் பணிகளில் வேலை செய்தனர். ஆனால் இது தற்பொழுது 24 சதவிகிதமாக குறைந்து உள்ளது.  இந்த 24 சதவிகித  பெண்களில் 97 சதவிகிதமானவர்கள் அமைப்பு சாரா பணிகளில் வேலை செய்பவர்களாகவே உள்ளனர். இந்தியாவில் 2018-19ம்ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 770 பில்லின் டாலர் ஆகும். இதில் 18 சதவிகிதம் மட்டுமே பெண்களின் பங்காக உள்ளது.


இந்த பங்கு கடந்த ஐந்து வருடத்திற்கு  முன்பு  19 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனை கவனிக்கும் சமூக நல துறையில் நிதியைகுறைத்ததால் அங்கன்வாடி திட்டத்தில் செயல்பட்ட மையங்கள் பல மூடப்பட்டது. இதில் பணியாற்றிய பெண்கள் மற்றும் இந்த திட்டத்தால் பலன் அடைந்த பெண் குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.2013-2014-ம் நிதி ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நிர்பயா பெண்கள் நிதிஉருவாக்கப்பட்டது.  இதற்காக ரூபாய்1,000 கோடியை காங்கிரஸ் அரசாங்கம் நிதி ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 2100கோடி நிதியை ஒதுக்கியது. ஆக மொத்தமாக ரூபாய் 3100 கோடி நிதியில் 825 கோடி ரூபாய் மட்டுமே மோடி அரசாங்கம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலத்திற்காக செலவு செய்தது.  மீதி தொகையை  மோடி அரசு மற்ற அரசுசெலவுகளுக்கு திசை திருப்பி உள்ளது.பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் என்றபெயரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற அர்த்தம் கொண்ட திட்டத்திற்கு மோடி அரசு ரூபாய் 684 கோடியை ஒதுக்கியது. இதில் 365கோடி ரூபாய் விளம்பரத்திற்கு மட்டுமே செலவு செய்யப்பட்டது.


மீதி 319 கோடிரூபாய்மட்டுமே மாநில அரசுகளுக்கு பிரித்து கொடுத்துதிட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவு இட்டது. ஒவ்வொரு மாநில அரசுகளுக்கு கிடைத்தது. நாட்டில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை இந்த தொகையால் வகுத்தால் ஒரு பெண் குழந்தைக்கு ரூபாய் 66 மட்டுமே கிடைக்கும். இந்த ரூபாய் 66ல் பெண் குழந்தையை படிக்க, பாதுகாக்க அரசு முற்பட்டது.கல்வித் துறையை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் ஆட்சியில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம்  கல்விக்காக நிதியை ஒதுக்கியது. தற்பொழுது கல்விக்காக 3.3 சதவீதம்  மட்டுமே  ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டுமே 2,469 அரசு பள்ளிகள் இந்தியாவில் மூடப்பட்டன. 13,546 பள்ளிகளுக்கு நோட்டிஸ் வழங்கியுள்ளது. மேலும் 4,482 பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்தியாவில் படிக்கும் மாணவர்களில் 65 சதவீதமான மாணவர்கள் அரசு பள்ளிகளிலேயே படிக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து அரசு பள்ளிகளை  மூடுவதாலும், நிதியை குறைப்பதாலும் மாணவர்கள் கல்வி, குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. நாட்டில் உள்ள பெண்களில் 50 சதவிகிதமானவர்கள் ரத்த சோகை மற்றும் ஊட்ட சத்து பற்றாக்குறையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.


 மேலும் 25 சதவிகிதமான பெண்கள் பதற்றமான  மனநிலையில் வாழ்வதாக அரசின் அறிக்கையில் இருந்து அறியப்படும் உண்மையாகும். மேலும் கீழ்கண்ட மாநிலங்கள் பீகார், அசாம், ஒரிசா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மருத்துவ வசதி மோசமாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மை மாநிலங்கள் பாஜகமற்றும் அதன் ஆதரவு பெற்ற ஆட்சியாளர்கள் கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.பொதுவாக மருத்துவ வசதி குறைவாக இருக்கும் போது குறிப்பாக பெண்கள் பல்வேறு மருத்துவப் பிரச் சனைகளை எதிர் நோக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பிரசவத்தில் தாய் இறப்பு, குழந்தைகள் இறப்பு அதிகமாக ஏற்படுகிறது. மோடி ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல்  துன்புறுத்தல்கள், பெண்கள் மீது ஆசிட் வீசுதல், கற்பழிப்பு, கூட்டமாக ஆண்கள் சேர்ந்துகற்பழிப்பு,  கடத்தல், கணவன் மனைவியை கைவிடல், வயதான, உடல் ஊனமுற்ற பெண்களை கருணை கொலைபோன்ற கொடுமைகள் முன்பை விட தற்பொழுது அதிகரித்து வருகிறது.சண்டிகரில் 50 ஆண்கள் சேர்ந்துஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.  அதேபோல் சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை வீட்டில் வேலை செய்யும் காவல்காரர்கள், தோட்டக்காரர்கள் என 17 நபர்கள் சேர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளனர்.


தற்பொழுது பொள்ளாச்சியில் நவீன முறையில் போலியாக பெண்களை காதலித்து பின் அவர்களோடு நெருங்கி இருக்கும் வீடியோ படங்களை எடுத்து பிறகு பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் பெரிய கூட்டமே செயல்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கும் பாலியல் வன்முறை வெறியாட்டம் ஆகும். இந்த நடவடிக்கைகளை  கூர்ந்து பார்க்கும் பொழுது இவர்களுக்கு சக்திமிக்க அரசியல்வாதிகள், காவல்துறையினர் ஆதரவாக இருக்கும் நிலையை நாடு பார்த்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உறுதி அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சி  தெரிவித்தது. ஆனால் ஐந்துஆண்டுகள் முடிந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவில்லை என்பது வெட்ககேடு ஆகும்.ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில்பால் சமத்துவமின்மை குறியீடு (புநனெநச iநெஙரயடவைல ஐனெநஒ) தர வரிசையை கடந்த ஆண்டு வெளியிட்டது. மொத்தம் உள்ள 189 நாடுகளில்இந்தியா 127 ஆவது இடம் மிகவும் கவலைப்பட வேண்டிய  செய்தியாகும்.ஆகவே, இந்திய நாட்டு பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்ககாரணமான பாஜக-அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமா? அல்லது மாற்றம் செய்ய வேண்டுமா? முடிவு செய்யுங்கள்.


-ஏ.ராதிகா,கோவை மாவட்டச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

;