tamilnadu

img

கோவை: அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

கோவை அரசு மருத்துவமனையில் "காவசாகி" என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 3 மாத குழந்தைகள், மூன்று பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு சுமார் 10 நாட்களாகத் தொடர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த குழந்தைகளுக்குப் பலவிதமான ஆன்டிபயாட்டிக் மற்றும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் முன்னேற்றம் இல்லை.  இதனால் குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இங்குக் குழந்தைகள் நலப் பிரிவில் உள்ள  மருத்துவர்கள் கண்காணித்து, ரத்த மாதிரிகள் மற்றும் பல கட்ட பரிசோதனைகளைச் செய்தனர். அப்போது குழந்தைகளுக்கு "காவசாகி"  எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டது. இந்த நோய் தாக்கம் காரணமாகக் குழந்தைகளுக்கு கடும் தொடர் காய்ச்சல், கை கால் வீக்கம், தோல் உரிவது, நெறி கட்டுவது போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பித்து, பின்னர் இருதயத்தையும், இருதய ரத்த நாளங்களையும் பாதிக்கும் தன்மை உடையது. உரியச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகளுக்கு "காவசாகி" எனப்படும் நோய் கண்டறிந்தவுடன்,  உடனடியாக  "இம்யூனோ குளோபிலின்" எனப்படும் ஒரு லட்சம் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டது.

இந்த சிகிச்சைக்குப் பின் குழந்தைகள் காய்ச்சல் குறைந்து, நல்ல உடல் நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஒரு லட்சம் மதிப்பிலான இந்த மருந்தைத் தமிழக அரசு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 8 குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டு ரூ.8 லட்சம் மதிப்புள்ள "இம்யூனோ குளோபிலின்" மருந்து கொடுத்துக் காப்பாற்றப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

;