tamilnadu

img

புத்தகக் காட்சி தொடரட்டும், அறிவுத் தீ பரவட்டும்

“புத்தகக் காட்சிகள் தொடர்ந்து நடைபெறட்டும், மாநிலமெங்கும் அறிவுத் தீ பரவட்டும்’’ என சென்னை புத்தகக்காட்சியை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 45ஆவது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று (பிப். 16) துவக்கி வைத்தார். பின்னர் கலைஞர் கருவூலத்தையும் பொருனை ஆற்றங்கரை நாகரீகம் தொல் பொருட்கள் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கையும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ அரங்கையும் அவர் திறந்துவைத்தார்.

விருதுகள்

உரைநடைக்கு சமசுக்கும், நாடகத்திற்காக பிரசன்னா ராமசாமிக்கும், கவிதைக்காக ஆசைத்தம்பிக்கும் (ஆசை), புதினத்திற்காக அ. வெண்ணிலாவிற்கும், பிறமொழிக்காகப் பால் சக்கரியாவுக்கும், ஆங்கிலத்திற்கு மீனா கந்தசாமிக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது மீனாட்சி சோமசுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்), சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது நாதம் கீதம் புக் செல்லர்ஸ் பொன்னழகு முருகன், பபாசி வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான விருது மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது திருவை பாபு, சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிரா, சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ்கர், சிறுவர் அறிவியல் நூலிற்கான நெல்லை சு.முத்து விருது கு.வை.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு முதல்வர் வழங்கி கவுரவித்தார்.

அரசு நிர்வாகம் உதவி

பின்னர் முதலமைச்சர் பேசுகையில், சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சி போலவே மதுரையில் 14 ஆண்டுகளாகவும், கோவையிலே 4 ஆண்டுகளாக புத்தகக் காட்சியை பபாசி நடத்தி வருகிறது. அதேபோல் பிற மாவட்டங்களிலும் நடத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுரை வழங்கும்.

அறிவுக்கோயில்கள்  

மதுரையில் கலைஞர் பெயரில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அறிவுக் கோயில்களைக் கட்டுவதில் அரசு ஆர்வமாக உள்ளது. ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடந்த மக்களுக்கு புத்தகம் அச்சடித்து சுயமரியாதை பரப்புரையை மேற்கொண்டு அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். என்னுடைய வாரிசுகள் என்பது எனது புத்தகம்தான் எனப் பெரியார் கூறினார். வீட்டுக்கு ஒரு நூலகம் அமையுங்கள் எனப் பேரறிஞர் அண்ணா, புத்தகத்தின் மூலமாக உலகை படியுங்கள் எனக் கூறினார் கலைஞர். அந்த வழித்தடத்தில் தான் இந்த அரசும் செயல்படுகிறது.

தமிழுக்கு முக்கியத்துவம்

  தமிழ்நாடு அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்குத் தமிழ் மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து தேர்வு முகமையிலும், அரசுப் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலும், தமிழ் வழி தகுதித் தேர்வாக ஆக்கியுள்ளது அரசு. ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்திலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு நிச்சயமாக நடத்தப்படும் என்றார்.  

இலக்கிய மாமணி விருது

மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் தமிழ் மொழியிலே கையொப்பம் இடுவது, கோப்புக்கள் முழுவதையும் தமிழில் தயாரித்திட அரசு ஊக்கமளித்து வருகிறது. தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்களைக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயல் இசை நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது வழங்குவது போல், தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருதும், ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

கனவு இல்லத்திட்டம்

கலைஞரின் 98ஆவது பிறந்த நாளையொட்டி உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் கனவு இல்ல திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உயர் வருவாய் பிரிவினருக்காக ஒதுக்கப்படும் வீடு ஒதுக்கப்படும் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 5 செண்ட் நிலத்தில் 1500 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

நான் எழுதியிருக்கக் கூடிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூலை இந்த மாத இறுதியில் வெளியிட உள்ளேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் பபாசிக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். மாநிலமெங்கும் அறிவுத் தீ பரவட்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பபாசி தலைவர் எஸ்.வைரவன் வரவேற்றார். செயலாளர் எஸ்.கே.முருகேசன் நன்றி கூறினார். இந்த புத்தக காட்சி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

;