tamilnadu

நூறை ஐம்பதாக்கியவர்கள் - இப்போ இருநூறு ஆக்கப் போகிறார்களாம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளால் முன்மொழியப்பட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட திட்டமாகும். தேசத்தில் சுமார் இருபது கோடி மக்களுக்கு வேலை அளிக்கக் கூடிய மிகப் பிரமாண்டமான திட்டமாகும்.உலகின் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட திட்டம் செயல்படவில்லை. பெண் விவசாயத் தொழிலாளர்களை தங்கள் சொந்தக் காலில் நிற்க வைத்த திட்டமாகும். கடந்த ஐந்தாண்டு காலமாக மோடியும், எடப்பாடியும் இத்திட்டத்தை ஒழித்துக் கட்டவே முயற்சி செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 420 ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் 3,77,000 விவசாயத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 100 நாள் வேலைத் திட்ட வேலை அட்டை (ஜாப் கார்டு) பெற்றவர்கள் 2,91,000 பேர். 2018-19 பிப்ரவரி மாதம் வரை சராசரியாக 45 நாட்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. 2017-18 ல் கூலியாக கொடுக்கப்பட்ட தொகை 246 கோடியே 5 லட்சமாகும். இதுவரை மூன்று முறை கூலி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய கூலி 224 ரூபாய் ஆகும். ஆனால் ரூபாய் 100, 120-க்கு மேல் கூலி கொடுக்கப்படவில்லை. பல ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. சமூக தணிக்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டப்பணியாளர்களுக்கு தெரியாமலேயே சமூக தணிக்கை செய்யப்படுகிறது. வருடத்தில் 4 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தி அக்கூட்டங்களில் வேலை உறுதி செய்ய வேண்டும். பெருவாரியான ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கணக்கு காட்டப்படுகிறது.


கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் 328 ஊராட்சிகளில் 2,05,000 விவசாயத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். அவர்களில் 1,60,050 தொழிலாளர்கள் வேலைக்கான வேலை அட்டை (ஜாப் கார்டு) பெற்றுள்ளனர். 2017-18களில் சராசரியாக 100 நாள் 54 நாள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது 2018-19ல் 45 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. 2017-18ல் ரூ.86 கோடியே 58 லட்சம் கூலியாகவும், 2018-19ல் ரூ.97 கோடியே 35 லட்சம் கூலியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையை விட கோவை மாவட்டத்தில் மிக மோசமாக நடத்தப்பட்டு வருகிறது.100 நாள் வேலைத் திட்டத்தில் 10 வகையான வேலையே இருந்தது. ஆனால் அதை 245 வேலையாக மோடி அரசு மாற்றியுள்ளது. இது ஒரு மோசமான ஏற்பாடாகும். திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கைகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என கூறப்பட்டுள்ளது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் போகும் இடமெல்லாம் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்துவோம் என கூறி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக தான் ஆட்சியில் இருந்து வருகிறது. விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்கள் பலமுறை முதல்வரையும், அமைச்சர்களையும் நேரில் சந்தித்து 100 நாளை 200 நாட்களாக உயர்த்தவும் 400 ரூபாய் என கூலி உயர்வு செய்யவும் கேட்டும், இத்திட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரியும் முறையீடு செய்தும் எதையும் அமல்படுத்தாமல் இறுமாப்போடு இருந்தார்கள். இவர்கள் தான் இப்போது தோல்வி பயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். வேலையில்லாததால் வாழ்வாதாரமில்லாமல் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள் ஒரு நாளும் ஏமாற மாட்டார்கள்.


கே.பக்கிரிசாமி, ஜி.மணி

;