tamilnadu

img

11 தொகுதி இடைத்தேர்தல்களிலும் பகுஜன் - சமாஜ்வாதி கூட்டணி

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிள் இணைந்து அமைத்த கூட்டணி, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 தொகுதிகளும், சமாஜ்வாதி கட்சிக்கு 5 தொகுதிகளும் மட்டுமே கிடைத்தன. அகிலேஷின் மனைவி டிம்பிள், அகிலேஷின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அக்ஷய், தர்மேந்தர் உள்ளிட்ட முன்னணி தலைவர்களே தோல்வியைத் தழுவினர்.

இதனால், அடுத்துவரும் தேர்தல்களில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்தனர். அவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உடனடியாக பதிலளித்தார். எங்களின் கூட்டணி தொடரும் என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்தார். எனினும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், மாயாவதி போல உறுதியான முடிவு எதையும் அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் விரைவில் அறிவிக்கப்பட உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணியைத் தொடர அகிலேஷ் முடிவு செய்திருப்பதாகவும், இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, அடுத்தடுத்து கூட்டணியை தொடருவதா? விலகிக் கொள்வதா? என்று தீர்மானித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ-க்கள் 8 பேரும், பகுஜன் எம்எல்ஏ-க்கள் 2 பேரும், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஒருவரும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் காரணமாக, அவர்களின் எம்எல்ஏ பதவி காலியாகி உள்ளது. இந்த 11 இடங்களுக்குத்தான் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

;