tamilnadu

img

ப. சிதம்பரத்தை சிபிஐ தூங்கக்கூட விடவில்லை? வளைத்து வளைத்துக் கேட்கப்பட்ட 20 கேள்விகள்

புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா, சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், அவரை வியாழனன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்காக தற்போது 5 நாட்கள் சொந்தக் காவலில் எடுத்துள்ளனர்.

இதனிடையே, விசாரணையின்போது, சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்திடம் அடுக்கடுக்காக 20 கேள்விகள் வரை எழுப்பி, பதிலளிக்குமாறு கூறியதாகவும், ஆனால், அவற்றில் பல கேள்விகளுக்கு தெரியவில்லை என்றே சிதம்பரம் பதில் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், சிதம்பரத்திடம் எழுப்பப்பட்ட கேள்விகளின் விவரமும் வெளியாகியுள்ளது. அவை வருமாறு:

உங்களது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டிய பின்னரும் ஏன் ஆஜராகவில்லை?  உங்களது மற்றும் உங்களது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்த ஷெல் நிறுவனங்கள் எவை? உங்கள் மகன் கார்த்தி சிதம்பரம், ஏன் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் இருந்து பணம் பெற்றார்? ஸ்பெயின், பிரிட்டன், மலேசியாவில் சொத்துக்கள் வாங்க எங்கிருந்து பணம் வந்தது? நிதியமைச்சராக இருந்து கொண்டு விதிகளை மீறி அந்நியச் செலாவணி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியது ஏன்? தில்லி நார்த் ப்ளாக்கில் இந்திராணி முகர்ஜியை சந்தித்தது ஏன்? இந்திராணியை தொடர்பு கொள்ளுமாறு மகன் கார்த்தியிடம் கூறியது உண்மைதானா? கைதுக்குத் தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்த பின் எங்கே இருந்தீர்கள்? மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது ஏன்? வெளிநாட்டு சொத்துக்களுக்கு வருவாய் ஆதாரம் என்ன? ஐஎன்எக்ஸ் மூலம் கிடைத்த வருமானத்தை எங்கு முதலீடு செய்தீர்கள்? - இவ்வாறு சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

;