tamilnadu

img

மார்க்சிய மகாத்மா காரல் மார்க்ஸ் - கணராமபுத்திரன்

மே மாதத்தில் அவதரித்த மேன்மையானவரே 
மே தின கொண்டாட்ட காரணகர்த்த மாமேதையே
பாட்டாளி மேம்பாட்டுக்கு உழைத்த பண்பாளரே
பாட்டாளி நாட்டை யாளும் பாதையைப் பறைசாற்றியவரே

உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவரே
மனிதகுல வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்த பெருந்தகையே
உலகப் புரட்சி இயக்கத்தின் மெய்ப்பொருளான
விஞ்ஞானப் பொதுவுடமையை விதைத்த வித்தகரே

தத்துவ ஞானத்தில் முனைவர்  பட்டம் பெற்ற மூலவரே
தத்துவத்தை நடைமுறைப்படுத்த முனைந்த தீர்க்கதரிசியே
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றவரே
இழப்பதற்கு எதுவுமில்லை என பொன்னுலகைக் காட்டியவரே

பெருஞ்செறிவு அறிவு பொதிந்த பேரறிஞரே
பொதுவுடமை அறிக்கை தயாரித்த பேராசானே
பொதுவுடமைப் பைபிள் மூலதனம் உருவாக்கிய முதல்வரே
பொதுவுடமையை சமுதாய மாற்றத்தின் ஆயுதமாக்கியவரே

தத்துவத்திற்கும் செயல்பாட்டிற்கும் இடையே தார்மீகப் பேரொளியைத் தந்தவரே
விஞ்ஞானத்தை மக்கள் வசப்படுத்தும் கருவியாக உணர்த்தியவரே
எளியவர்க்கும் அரசியலைத் தாய்ப்பாலாய் ஊட்டியவரே
அறிவார்ந்த தெளிவில் மக்கள் மனதில் புரட்சியை விதைத்தவரே

விஞ்ஞான சோசலிச தத்துவத்தை சித்தாந்தமாய் செதுக்கிய
சிற்பியே
மெய்ஞ்ஞான பொருள்முதல்வாதத்தை உயிர்ப்பித்த உத்தமரே
முதலாளித்துவ சுரண்டலை மிகுதி மதிப்புக் கொள்கையால் வீழ்த்தியவரே
வரலாற்றுப் பொருள்முதல்வாத கருத்தமைப்பை வரைந்தவரே

அன்பு அறிவு ஆற்றலை குடும்ப வலிமையாக உணர்த்தியவரே
ஜென்னியுடன் காதல் உறவுக்கு ஜென்ம இலக்கணமானவரே
ஏங்கல்சுடன் இணைபிரியா நட்புக்கு இணையற்ற உதாரணமானவரே
பிள்ளைகளுடன் மகிழ்ந்தாடும் ஈடில்லாப் பிரியமானவரே

கடும் வறுமையினால் பிள்ளைகளைப் பறிகொடுத்த தியாக சீலரே
ரொட்டி வாங்க அங்கியை அடகு வைத்த அன்பானவரே
தத்துவ நினைப்பால் பசிக்கொடுமையை வென்ற தார்மீகமானவரே
உத்தமராய் பெருந்தவ வாழ்வு வாழ்ந்த வழிகாட்டியே

மனித குல வரலாற்று வளர்ச்சி விதிகளை கண்டறிந்த சிந்தனையாளரே
உலகம் மாற்றம் காண வழிமுறைகள் வகுத்த வல்லவரே
சமுதாய பொருளாதார உறவு நுட்பங்களை விளக்கிய தத்துவஞானியே
சமூக முன்னேற்றப் பாதை வகுத்த சமூக விஞ்ஞானியே

மனிதன் வாழும் வழிகளைக் காட்டிய மாமனிதரே
மனிதனை மனிதன் நேசிக்கும் மந்திரம் கற்றுத்தந்த மாமேதையே
பொதுவுடமை மனித குலத்தின் கலங்கரை விளக்கம்
பொதுவுடமை சித்தாந்தம் என்றும் உயிர்ப்புடன் துளிர்க்கும்.

மே 5 - காரல் மார்க்ஸ் பிறந்ததினம்

;