காசாவில் இஸ்ரேல் தாக்குதல் கார் மீது குண்டு வீசி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் படுகொலை
காசா, அக். 18- காசாவில் இஸ்ரேல் ராணுவம் பொது மக்கள் பயணித்த வாகனத்தின் மீது பீரங்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று நடந்த இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளனர். இடைக்காலப் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து ஒரு வாரகாலம் ஆகியுள்ள நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா நகரத்தின் ஜைதூன் பகுதியில் அபு ஷாபான் என்பவரது குடும்பம் பயணித்து சென்ற ஒரு வாகனத்தின் மீது பீரங்கி மூலம் குண்டு வீசி இந்த கொலையை இஸ்ரேல் ராணுவம் அரங்கேற்றியதாக காசா சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் குழந்தைகள், மூன்று பேர் பெண்கள் ஆவர். போர் நிறுத்தம் அமலாகியுள்ள நிலையில் தங்கள் வீடு இருந்த பகுதியை பார்ப்பதற்காக இவர்கள் செல்ல முயன்ற போது இத்தாக்குதல் நடந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஒரு “படுகொலை” என்று கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை சரியாக பின்பற்றுவதற்காக ஐ.நா, அவையும் டிரம்பும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடப்பட்டுள்ளது.