articles

img

தலைக்கு வந்தது - கோவி பால முருகு

தலைக்கு வந்தது - கோவி பால முருகு

வடலூருக்கு வரதராசன் வேலைக்காக வந்தபோது நெற்றி நிறைய திருநீறு,சந்தனப் பொட்டு,பொட்டின் இடையில் சிறிய குங்குமப் பொட்டு,கருகரு என்று வளர்ந்திருக்கும் சுருள் முடியுடன் நீண்ட தாடி பார்ப்பதற்கு சாமியார் போலவே இருப்பார்.காவி வேட்டி மட்டும் கட்டவில்லை.ஆனால் காவியை வெறுத்து வெள்ளாடை அணிந்து வள்ளலார் போல் தூய கதர் வெள்ளை வேட்டி, சட்டை மட்டுமே அணிவார். இவர் பேருந்தில் ஏறினால் அமர இடம் இல்லையென்றாலும் யாராவது ஒருவர் ஐயா…இங்கே வந்து உட்காருங்கள் என்று அழைக்கக் கூடிய தோற்றம்.

இந்த தோற்றமே அவருக்கு பல இடங்க ளில் மரியாதையையும், வேலைகளை எளி தாக்கியும் தந்தது. வடலூர் வந்தபோது பக்தி யில் மட்டுமல்ல ஒரு மதவெறி அமைப்பிலும்  இருந்தார்.அந்த அமைப்பின் பயிற்சி வகுப்புகள் மூன்று நாள்கள், அவர் பணி யாற்றிய பள்ளியின் தலைவர் அனுமதி யோடு அந்த வளாகத்தில் நடந்தது.அப்  போது மூன்று நாள்களிலும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். வரதராசன் வடலூருக்கு வந்த ஒரு வரு டத்தில் வள்ளலாரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் திருவருட்பாவைப் படிக்க ஆரம்பித்தார்.அதில் உள்ள பாடல்கள் அவர் மனத்தைத் தொட்டது.பல பாடல்களைப் படிக்கும்போது கண்ணீர் சிந்தினார். உண்மையில் திருவருட்பா என்ற பெயர் மிகமிகப் பொருத்தமானதே. அப்போதுதான் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மூர்த்தி நண்பரானார். அதன் விளைவு பகுத்தறிவுக் கொள்கையில் ஈடு பாடு ஏற்பட்டது. பின்னர் கால மாற்றத்தில்  இடதுசாரிச் சிந்தனையை ஏற்றுக் கொண்டார். அந்த நாள்களில்தான் வரதராசனின் மகன் தமிழ்வேந்தன் அடிக்கடி மூர்த்தி  வீட்டுக்கு செல்லலானான்.மூர்த்தி வசதி  படைத்தவர். ஏராளமான நிலம், புலம், தோட்டம், தொரவு என்று இருந்தது.தமிழ்  மூர்த்தியை மாமா என்றுதான் அழைப்பான்.  மூர்த்தியின் பிள்ளைகளும் வரதராசனை மாமா என்றுதான் அழைப்பார்கள். மூர்த்தி வீட்டிற்குப் போய்விட்டால் தோட் டத்திற்கு அழைத்துச் செல்வார்.அங்கிருக்கும் தென்னந் தோப்பில் இள நீர்க் குலையை வெட்டி சாய்த்து வயிறு முட்ட முட்ட இளநீரைச் சீவிக் கொடுப்பார்.  அதிலிருக்கும் வழுக்கையை வழித்துக்  கொடுப்பார். அங்கே இருக்கும் மாந்தோப் பில் தொங்கும் ஒட்டு மாங்காயைப் பறித்து  உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கொடுப்பார். உண்ணும்போது அவ்வளவு சுவையாக இருக்கும்.  அன்று மூர்த்தி வீட்டிற்குத் தமிழ் சென்றிருந்தான். மூர்த்தி தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கிளம்பினார்.தமிழும் “மாமா…நானும் வருகிறேன்”என்று சொல்லிவிட்டு அவரோடு தோட்டத்திற்குச் சென்றான்.மூர்த்தி மோட்டாரைப் போட்டார்.தண்ணீர் எடுக்கவில்லை.பெரிய அகலமான,இறங்குவதற்கு ஏற்ற  வகையில் படிகள் அமைத்திருந்த கிணற்றின் உள்ளே வலிமையான இரும்புக்  கயிறால் இணைக்கப் பட்டிருந்த மோட்டார் தொங்கிக் கொண்டிருந்தது..யோசித்துக் கொண்டிருந்த மூர்த்தியிடம்”என்ன..மாமா  தண்ணி வரல?”என்று கேட்டான். “கிணற்றில் தண்ணீர் கீழே போய் விட்டது.மோட்டாரைக் கீழே இறக்க வேண்டும் அதற்கு இன்னொரு ஆள்  வேண்டும்.அதான் யாரைக் கூப்பிடு வது என்று யோசித்துக் கொண்டிருக்கி றேன்”என்றார்.உடனே ”மாமா…என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நான்  செய்கிறேன்”என்றான். “உன்னால முடி யாது ரொம்ப ஆபத்தானது” என்றார். ”மாமா..பயப்படாதீங்க என்னன்னு சொல்லுங்க. நான் திறமையா செய்யிறேன்  பாருங்கள்”என்றான் தமிழ். அதை கேட்ட மூர்த்தி என்ன செய்ய  வேண்டும் என்பதைச் சொல்ல ஆரம்  பித்தார். ”இங்க பாரு”என்று சொல்லி விட்டு, மின் கம்பியைச் சுற்றி அனுப்பப் படும் உருளைபோன்ற வடிவத்தில் பெரிய  அளவில் இரும்பால் செய்யப்பட்ட உருளை யின் இடையில் இரும்புக் கயிறு சுற்றப் பட்டிருந்ததைக் காட்டினார். உருளையின் பக்கத்தில் இசர்ட் போல வளைந்திருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அதை லாக் செய்திருப்பதை எடுத்துவிட்டு மிக எச்சரிக்கையாக இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இறக்க வேண்டும். அப்போது இரும்புக்கம்பி உருளையிலிருந்து பிரிந்து கிணற்றில் இறங்கும்.அதோடு பிணைத்துள்ள பெரிய கனமான மோட்டார் கீழே இறங்கும்.இறக்கும் போது தவறியும் கையை விட்டு  விட்டால் வேகமாக மோட்டார் இறங்கித் தண்ணீரில் மூழ்கிவிடும். இப்ப புரியுதா? இத உன்னால செய்ய முடியுமா?”என்று கேட்டுவிட்டு தமிழைப் பார்த்தார். “மாமா..கொஞ்சம் கூட பயப்படாதீங்க. நீங்க சொன்னது போலவே செய்கிறேன்” என்றான்” சரி.. நான் கிணற்றில் இறங்கிக் கொள்கிறேன். மோட்டார் கீழே வந்த பிறகு  அதைச் சரி செய்ய வேண்டும்”என்று சொல்லிவிட்டு கிணற்றில் இறங்கினார். கீழிருந்து “தமிழு…இப்ப அந்த லாக்கை எடுத்துவிட்டு கைப்பிடியை இருக்கமாகப் பிடித்துத் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இறக்கு”என்றார் மூர்த்தி. தமிழ் நன்றாகக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு லாக்கை எடுத்தான்.இவ்வளவு கடினமாக இருக்குமென்று தமிழ்  நினைக்கவில்லை.மூச்சைப் பிடித்துக் கொண்டு கைப்பிடியைக் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றினான்.திடீரென்று கைப்  பிடி வழுக்கிவிட்டது.மோட்டாரின் கனத்  தால் சரசரவென்று சுற்ற ஆரம்பித்து விட்டது.அந்த நேரத்தில் கைப்பிடியைப் பிடிக்க முயன்றால் கை முறிந்து போகும்.என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்  கொண்டு நின்றான். கிணற்றின் உள்ளே நின்ற மூர்த்தி வேக மாக மோட்டார் இறங்குவதைப் பார்த்து கிணற்றோடு ஒட்டிக் கொண்டு நின்றார்.அவருக்கும் மோட்டாருக்கும் இடையில் அரையடி இடைவெளிதான் இருக்கும். கொஞ்சம் தலையை வெளியில் நீட்டியி ருந்தால் கூட தலையில் மோதி தலையே சிதறிப் போயிருக்கும். மோட்டார் அவரை ஒட்டியபடி சென்று கிணற்றுக்குள் விழுந்து முழுகியது.தமிழுக்குக் கவலையாகப் போய்விட்டது. மோட்டார் இறங்குவதைக் மூர்த்தி கவனிக்காமல் இருந்திருந்தால் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும். தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று என்பதுபோல எல்லாம் நொடிப்  பொழுதில் நடந்துவிட்டது. நடந்த சம்பவத்தை நினைத்து நடுங்கிப்  போய் நின்று கொண்டிருந்தான் தமிழ் வேந்தன். அப்போதும் கோபப்படாத மூர்த்தி “இதுக்காக வருத்தப்படாத தமிழு.. நான்  செய்ததுதான் தவறு. முன்பின் அனுபவ மில்லாத உன்னைச் செய்யச் சொல்லி யிருக்கக் கூடாது. அதுபோல நீயும் உனக்கு  அனுபவமில்லாத செயலில் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது” என்று சொல்லி விட்டு. தண்ணீர் பாய்ச்சும் வேலை இல்லா மல் போக, தமிழை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். இந்த செய்தியைத் தமிழின் அப்பா  வரதராசனிடம் நீண்ட நாள்கள் மூர்த்தி சொல்லவே இல்லை.ஒரு நாள் பேசிக்  கொண்டிருக்கும் போதுதான் நடந்த செய்தி யைச் சொன்னார். இப்போதெல்லாம் தமிழ்வேந்தன் துணிச்சல் என்ற பெயரில்  அசட்டுத் துணிச்சலை வெளிக்காட்டு வதில்லை.அனுபவமில்லாத செயல்களில் இறங்குவதே இல்லை.