articles

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிடுக!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில்  மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிடுக

அரசுக்கு  ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, அக்.16- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளில் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர்  ஜி.பிரமிளா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய், சர்க்கரை, மாவு போன்றவற்றின் விலை மக்களின் வருமானத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளன. நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள், குறிப்பாக  கூலித் தொழிலாளர்கள் வாழ்வில் தீபாவளி கொண்டாட்டம் என்பது திண்டாட்டமாக மாறி உள்ளது. பண்டிகை நாட்கள் மக்களுக்கு மகிழ்ச்சி தர வேண்டியவை; ஆனால் தற்போதைய பொருளாதார சூழலில் அவை பெரும்பாலான குடும்பங்களுக்கு பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு ஆகியவை நேரடியாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் பண்டிகைத் தொகுப்புகள் வழங்க வேண்டும். அதேபோல், தீபாவளி பண்டிகை சிறப்பு நிதி அரசுப் பணியாளர்கள் மட்டுமல்ல, ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்,  மகளிர் உரிமைத்தொகை பெறும்  பெண்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.