பகுத்தறிவே உன்னைக் காக்கும்
பேய்பூதம் பிசாசென் பார் -அந்தப் பேச்சை நீயும் நம்பாதே. வாய்ந்த அறிவே துணையாகும் - மூட வலையில் நீயும் சிக்காதே. கொழுந்தாய் நீயும் இருக்கையிலே-உனக்குக் கொடுப்பார் மூடக் கருத்துகளை எழுந்தே வாடா இளங்கன்றே -உன்னை என்றும் காக்கும் பகுத்தறிவு. சாதி தானே பேயிங்கு - மதச் சார்பே மருட்டும் பெரும்பூதம். வீதி உலவும் பிசா செல்லாம் -மூடம் விதைப்பவர் என்றே உணரிங்கு . உன்றன் அறிவாம் விளக்கேற்று - உலகம் உருள நிலைத்த வழிகாட்டு. என்றும் இருளே படியாது - உனை இன்றி உலகம் விடியாது. கன்றாய் உன்னை நினைப்பார்கள்-நாளை காளை நீ தான் கலங்காதே. என்றும் துணிந்தே நடைபோடு -அறிவால் இந்த உலகை எடைபோடு. மூடத் திற்கு வாயகலம் - உலகை முழுதாய் விழுங்கத் துடிதுடிக்கும். பாடம் அதற்கு நீ புகட்டு - உலகப் பந்தே உன்னுள் அடங்கிவிடும்.