articles

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயம்

1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியர சின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக ஒரு கூட்டம் நடந்தது.  இந்தக் கூட்டத்தில் எம்.என். ராய், எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக், மண்டயம் பிரதிவாதி பயங்கரம் ஆச்சார்யா (எம்பிபிடி ஆச்சார்யா) ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார். துவக்க நிகழ்வு கூட்டத்தில், கம்யூனிஸ்ட் அகிலத்தால் பிரகடனம் செய்யப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுவது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் ‘இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருந்தக்கூடிய’  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டத்தை வகுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவில் இருந்த இந்தியர்கள் அனைவரும் இளைஞர்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். இந்தியா விலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிந்திட, ஒரு புரட்சிகர இயக்கத்தை அல்லது ஆயுதப் போராட்டத்தை மேற்கொள்வதற்கான வழிவகைகளைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்தவர்கள். எம்.என். ராய், அபானி முகர்ஜி மண்டயம் பிரதிவாதி பயங்கரம் ஆச்சார்யா (எம்பிபிடி ஆச்சார்யா) ஆகிய அனைவரும் இந்த வகையினர்தான். முகமது சஃபீக் மற்றும்  முகமது அலி ஆகியோர் ‘முஹாஜிர்கள்’ (Muhajirs) ஆவார்கள். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட உதவி கோரும் குறிக்கோளுடன் தாஷ்கண்ட் சென்றிருந்தார்கள்.  தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதன் பின்னணியில், உலகத் தொழிலாளர் வர்க்கப் புரட்சி மற்றும் இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் குணாம்சங்களும் பிரிக்கமுடியாத விதத்தில் பின்னிப் பிணைந்துள்ளன. 1920ஆம் ஆண்டு மேலும் ஒருவிதத்தில் முக்கியத்துவம் உள்ள ஓராண்டாகும். இந்த ஆண்டில்தான் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீர்திருத்தவாதச் சிந்தனைகளுடன் இது துவக்கப்பட்ட போதிலும், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புடன் ஒருசில ஆண்டுகளிலேயே இது உழைக்கும் வர்க்கத்தின் உருக்கு  போன்ற தொழிற்சங்க மையமாக வீறுகொண்டு எழுந்தது. எனவே, 1920இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்டில் அமைக்கப்பட்டது என்பதை, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படுவதற்கான முதல் அடி எனப் பார்க்க வேண்டும்.