articles

img

கடல் வளங்களை அழித்து, மீனவர்களை வெளியேற்ற ஒன்றிய அரசின் முயற்சி

கடல் வளங்களை அழித்து, மீனவர்களை வெளியேற்ற ஒன்றிய அரசின் முயற்சி

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு

நாகர்கோவில், அக்.18 - கடல் வளங்களை அழித்து, மீனவர்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டம் நாகர்கோவில் சிஐடியு அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் அந்தோணி, மாநில பொருளாளர் ஜெயசங்கரன் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இதில், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு பிரிவால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணையில் மீனவர்களை பாதிக்கின்ற அம்சங்கள் உள்ளன.  அணுக்கனிமங்கள் - சுரங்கங்கள் மேம்பாடு- ஒழுங்குமுறை சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி டி-யில் முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்க திட்டங்களும் பொதுமக்களின் கருத்து கேட்பு இனி தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  தமிழக கடலோர மாவட்டங்களில் படிந்துள்ள அரிய வகை மண் மற்றும் கனிமக்கூறுகளின் படிவுகளை கொண்டுள்ளது. இங்கு சுரங்கம் கொண்டு வந்தால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படை யும். இராமநாதபுரம் மாவட்டத்தை மையப்படுத்தி சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் அதாவது மன்னார் வளைகுடா, பாக் வளை குடாவில் உள்ள கடற்கரை மணல்கள், அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறை கள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுக்களின் தாயகமாக உள்ளது. பேரிடர் இயற்கை  நிகழ்வுகளுக்கு எதிராக தடுப்பாகவும் செயல்படுகின்றன. கடல் அரிப்பு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்டவைகளை பாதுகாக்கும் அரணாகவும் உள்ளது.  எனவே இத்தகைய பகுதிகளில் ஒன்றிய அரசின் தன்னிச்சையான சுரங்கப் பணி திட்டம் என்பது உள்ளூர் சமூகத்தின் குறிப்பாக மீனவர் நலனை புறக்கணிப்பதாகும். புதிதாக கொண்டுவரும் திட்டங்கள் மக்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று 1997 இல் திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கையினை இந்த உத்தரவு தன்னிச்சை யாக மீறுவதாகும்.  சுரங்க திட்டம் மக்களின் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு அமல்படுத்தப்பட்டால் கடற்கரையை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் மீனவ மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவர். மேலும் அவர்களின் வாழ்வாதாரம் இழந்து தங்கள் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகள் மறுக்கப்பட்டு சொந்த நாட்டிலே அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்படும்.  பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது. இது போன்ற வளர்ச்சி திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆழமான விவாதத்திற்கு உட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட துறைகளே தன்னிச்சையான உத்தரவுகளை பிறப்பித்துக் கொள்வதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.  சுரங்க திட்டம் முழுவதையும் தனியார் வசம் ஒப்படை த்து இயற்கை நியதிகளை பற்றி எவ்வித கவலையும் இன்றி, லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டு கடற்கரை வளத்தை அழிப்பது மட்டுமல்லாமல் கடலின் இயற்கை வளத்தையும் மீன்வளத்தையும் அழிக்கும் முயற்சிக்கும் ஒன்றிய அரசு துணை போகக்கூடாது  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.