articles

img

‘நம்மைத் தவிர அவர்களுக்கு வேறு யாருமில்லை’

தமது வீட்டை இஸ்ரேலிய இராணுவம் இடிப்பதற்கு வந்த போது நிகழ்ந்த அசாதாரண சம்பவத்தை 14 வயதுச் சிறுமி விவரிக்கிறார். இந்தக் கட்டுரையை அரபி மொழியில் லுஜய்ன் என்ற 14 வயது காசா சிறுமி எழுதியுள்ளார்.  அது முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, இப்போது தமிழில் வெளியாகிறது.  தனது அம்மாவுக்காக முதலில் இந்தக் கட்டுரையை எழுதிய அந்தச் சிறுமி பிறகு அதனை உலகுடன் பகிர முடிவு செய்தாள்.  கான் யூனிசில் அவரது குடும்பம் தங்கியிருந்த இடத்திலிருந்து அவர்களை நிர்ப்பந்தமாக வெளியேற்றிய நிகழ்வை இது விவரிக்கிறது.  காசாவை இஸ்ரேலிய இராணுவம் தாக்கத் தொடங்கியதிலிருந்து அவளது குடும்பம் நான்காவது முறையாக புகலிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. லுஜய்ன் தனது விவரிப்பில் இஸ்ரேலிய இராணுவம் கடைப்பிடிக்கும் ஒரு பொதுவான வழிமுறையை விளக்குகிறாள்.  மக்கள் உள்ளே இருக்கும்போதே புல்டோசர்களைக் கொண்டு கட்டிடங்களை இடிப்பது.   ரஃபா மீது இஸ்ரேல் படையெடுக்கப் போவதாக மிரட்டியிருக்கும் நிலையில் அதன் ஆபத்துக்கள் குறித்து லுஜய்னின் கட்டுரை எச்சரிக்கை செய்கிறது.   அவள் மீண்டும் வெளியேற்றப்பட்டால் அவளது குடும்பம் புகலடைய இடமே இருக்காது. 

லுஜய்ன் ஒரு புத்திசாலி மாணவி.  அவள் கணக்கியல் பயில்வதற்காக பல்கலைக்கழகம் செல்லத் திட்டமிட்டிருந்தாள்.  ஆனால் இப்போது காசாவில் பல்கலைக்கழகமே இல்லை. லுஜய்னுக்கு ஒரு நிரந்தர வீடும் இல்லை.  அவள் செய்யக் கூடியதெல்லாம் உயிர் பிழைத்துத் தனது கதையைச் சொல்வது மட்டுமே.  பல பாலஸ்தீனர்களைப் போலவே லுஜய்னுக்கு கதை சொல்வதும் எதிர்ப்பின் ஒரு வடிவமாகும்.  இஸ்ரேலிய இராணுவம் அவளது நண்பர்களைக் கொல்வதையும், அவளது அம்மா, குடும்பம் மற்றும் அவளையும் கொல்வதையும் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகத்தை நடவடிக்கை எடுக்குமாறு அவள் கேட்கிறாள்.  இஸ்ரேலின் இன அழிப்புக்கு அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிதி அளிப்பதைத் தடுத்து நிறுத்துமாறு அவள் குறிப்பாக அமெரிக்க மக்களைக் கோருகிறாள்.

2024 மார்ச் 2 அன்று என் தந்தை சாலை யில் இருக்கும் ஆபத்துக்களை யும் மீறி ரஃபாவிலிருந்து எங்க ளுக்கு உணவுப் பொருட்களை வாங்கச் சென்றார்.  இரவில் போக்குவரத்து இல்லாததால் அவர் அன்றி ரவு அங்கேயே தங்கினார். திடீரென நிலைமை மாறியது. எங்கும் ஏவுகணை வீச்சும், குண்டு வெடிப்பும் நிகழ்ந்தன. எனது அம்மா, நான், எங்களது நீட்டிக்கப்பட்ட குடும்பம் ஆகியோர் மேலும் நான்கு குடும்பங்களு டனும், எட்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் கான் யூனிசில் ஒரு வீட்டில் தஞ்சமடைந்திருந்தோம்.  நாங்கள் வெளியே வந்து மாடிப்படிகளின் கீழ் ஒளிந்திருந்தோம்.  எங்கும் துப்பாக்கிக் குண்டு சத்தமும், வினோதமான ஓசை யும் வந்து கொண்டிருந்தது.   “கவலைப்படாதே, எல்லாம் சரியாகி விடும்” என்று அம்மா என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள்.  ஆனால் அவள் எவ்வளவு பதற்றமாக இருந்தாள் என்பதை என்னால் காண முடிந்தது.   நாங்கள் வேகமாகக் கீழே இறங்கினோம்.  அம்மா எங்களிடம் சொன்னாள், “நம் முன்னால் இருக்கும் வீட்டை புல்டோசர் இடித்துக் கொண்டிருக்கிறது.  நம்மை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பீரங்கி கள் சூழ்ந்துள்ளன.   அவர்கள் நம்மை நோக்கி வருவ தற்குள் நாம் இங்கிருந்து வேகமாக வெளியேற வேண் டும்.”  வெளியே செல்வது நல்ல யோசனை என்று யாருக் கும் தோன்றவில்லை.  அவள் வெளியேற அவர்கள் அனு மதித்தால் அவள் எங்களுக்கு வெளியே வருமாறு சைகை செய்வாள்.  அவள் வெளியே போகக் கூடா தென்று எல்லோரும் ஆலோசனை கூறினார்கள்.  வெளியே மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ரத்தம் சொட்டச் சொட்ட...

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, இரண்டு வளரிளம் சிறுமிகளும், மூன்று குழந்தைகளும் முன் வாசலுக்கு வந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவனின் உடல் முழுவதும் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.  அவன் அழுது கொண்டும் அலறிக் கொண்டும் இருந் தான். அவர்கள் இடிபட்டுக் கொண்டிருந்த வீடுகளைச் சேர்ந்த குழந்தைகள்.  அவர்களது தந்தையும் என் தந்தையுடன் ரஃபா சென்றிருந்தார்.  ஆனால் அவர்க ளது அன்னை, சகோதரி, மற்றும் குடும்பத்தினர் அவர் கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வீடு இடிக்கப் பட்டதால் அதில் சிக்கி அப்படியே உயிரிழந்தனர். ஒவ் வொருவரும் ஸ்தம்பித்துப் போனோம். திடீரென எங்களுக்குப் பெரிய சத்தம் கேட்டது.  புல் டோசர் நாங்கள் இருந்த வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தது.  அம்மா நிறுத்தி விட்டு என்னிடம் சொன்னாள்; “நான் வெளியே சென்று அவர்களை நிறுத்த வேண் டும்.  ஏனென்றால் நாம் புல்டோசரின் கீழ் சிக்கி மடிந்து விடுவோம்.  ”நான் வெளியே சென்று நாங்கள் பொது மக்கள் என்று சொல்ல முயல்கிறேன்.  என்னை அவர்கள் அடித்து விட்டுப் பிறகு உங்களை வெளியே செல்ல அனுமதித்தால் எனக்குப் பின்னால் நீங்கள் வாருங்கள்.  அவர்கள் என்னைக் கொன்று விட்டு வீட்டை இடிக்கத் தொடங்கினால், நான் நீங்கள் பாது காப்பாக இருப்பதற்காக என்னுடைய கடைசி நம்பிக் கையுடன் அனைத்தையும் முயன்று விட்டேன் என்ப தைத் தெரிந்து கொள்ளுங்கள்.”

அம்மாவைக் கொல்லப் போகிறார்கள்...

நான் அழத் தொடங்கினேன்.  இராணுவம் கொன்று விடுமென்று கூறி அம்மாவை நிற்குமாறு எல்லோரும் கூறினார்கள்.  அதே சமயம் புல்டோசர் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் சத்தம் எங்களுக்குக் கேட்டது.  அம்மா வேகமாக வெளியே சென்று அதன் முன்னால், அதன் பாதையில் எதிரில் நின்று கொண்டு, தாம் பொது மக்கள், பெண்கள், முதியவர்கள் என்றும், வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் சொல்லத் தொடங்கினாள்;  புல்டோசர் தொடர்ந்து நெருங்கி வந்தது. திடீரென ஒரு பீரங்கி தன் விளக்கு வெளிச் சத்தைக் காட்ட, புல்டோசர் பின்வாங்கியது.  நான் வீட்டி லிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது, என் அம்மா நகர மறுத்து பீரங்கிக்கு அருகே நிற்பதைக் கண்டேன்.  திடீரென அம்மாவின் தலையிலிருந்து கால் வரை  உடல் முழுவதும் பச்சை நிறப் வெளிச்சப் புள்ளி கள் தோன்றின.  அவள் மீது பீரங்கித் துப்பாக்கிகள் குறி வைத்திருந்தன என்பது எனக்குத் தெரிந்தது. அவளை அவர்கள் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.  நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.  திடீரென பச்சை நிற வெளிச் சம் நின்றது.  பீரங்கி சைகை கொடுக்க, இரண்டு பேர் வீட்டிலிருந்து வெள்ளைக் கொடியைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தனர். அம்மா என்ன சொல்லிக் கொண்டிருந்தாள் என் பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முயன்றார்கள்.  இராணுவம் எங்களை வெளியேறச் சொல்லி சைகை செய்தது.  அது பச்சை வெளிச்சத்தை வைத்து சைகை செய்த போது நாங்கள் பக்கத்திலிருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்பது எங்களுக்குப் புரிந்தது.  அம்மா வேகமாக எங்களை வெளியேற நிர்ப்பந்தித்தாள்.  ஒவ்வொருவரும் வெளியேற முயன்று கொண்டிருந்தார்கள். பயப்பட வேண்டாம் என்று என்னிடம் சொல்லி விட்டு அம்மா காயமடைந்த அந்தச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு, சிறுமியைக் கையில் பிடித்துக் கொண் டாள்.  நாங்கள் மற்றவர்கள் பின்னால் நடக்கத் தொடங்கி னோம்.  அம்மா மூச்சிறைத்துக் கொண்டிருந்தாள்.  அவ ளுக்கு ஆஸ்துமா இன்ஹேலர் தேவை என்பது எனக்குத் தெரிந்தது.  நான் அதை அவளிடம் கொடுக்க முயல, அவளோ இப்போது நேரமில்லை, வேகமாகச் செல்லுங் கள், நிற்காதீர்கள்.  நின்றால் குண்டுகள் நம்மைத் தாக்கக் கூடும் என்றாள்.

துரத்திக் கொண்டே இருந்தார்கள்...

எப்படி பள்ளிக்கு வந்து சேர்ந்தோம் என்பது தெரிய வில்லை, ஆனால் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம். அம்மா பையனைத் தூங்க வைத்து விட்டு, அவன் நன்றாக இருக்கிறான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.  பிறகு என்னை ஒரு நாற்காலியில் அமர வைத்தாள்.  அப்போது அதிகாலை இரண்டு மணி. அம்மா நான் கவலைப்படக் கூடாதென்று சொல்லிக் கொண்டே இருந்தாள். சில மணி நேரங்களில், இராணுவத்தினர் அரபியில்  நாங்கள் இந்த இடத்தைக் காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டுமெனக் கத்தினார் கள்.  எனவே நாங்கள் வெளியே சென்றோம். சாலை யின் இரண்டு பக்கத்திலும் பீரங்கிகள், இராணுவத்தி னர், புல்டோசர்கள் நிறைந்திருந்தன. ஒரு சிப்பாய் அரபியில் பேசிக் கொண்டே பெண்கள் உட்பட சிலரை கைது செய்து இஸ்ரேலுக்குக் கொண்டு செல்வதற்கா கத் தேர்வு செய்து கொண்டிருந்தான்.  மீதமிருந்தவர் கள் பள்ளியிலிருந்து பகுதியளவு இடிக்கப்பட்டிருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டோம்.  காலை சுமார் ஒன்பது, பத்து மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை கட்டிடத்தின் முன்னாலேயே காத்தி ருந்தோம்.

அந்த தண்ணீர் வேண்டாம்!

ஒவ்வொருவருக்கும் பசியும் தாகமும் எடுத்தது. குறிப்பாகக் குழந்தைகள்.  திடீரென சிப்பாய்கள் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுக்கத் தொடங்கினர். அம்மா என்னிடம் ஆக்கிரமிப்பு இராணுவத்திடமிருந்து நாம் தண்ணீர் பெறக் கூடாதென்றும் விரைவில் அங்கி ருந்து செல்ல வேண்டுமென்றும் சொன்னாள்.  அவள் ஒவ்வொருவரிடமும் பொறுமையாக இருக்குமாறு சொல்லி விட்டு, தாங்க முடியாவிட்டால் தண்ணீரை அருந்துமாறு சொன்னாள்.   எங்களுடன் இருந்த சிறுவன் ஏன் என்று கேட்டான். அவனிடம் அவள் இந்த இராணுவத்தினர் எங்களிடம் கருணையோடு இருப்பது போல் காட்டி புகைப்படம் எடுத்து உலகிடம் தாம் எப்படி மக்களை நடத்து கிறோம் என்று காட்ட விரும்புவதாகக் கூறினாள்.  உண் மையில் அவர்கள் வீடுகளை இடித்து அதிகாலையில் புல்டோசர்களைக் கொண்டு அவர்களை நசுக்குகிறார் கள்.  அவள் சொன்னது சரி.  ஒரு சிப்பாய் புகைப்படங் கள் எடுத்துக் கொண்டிருந்தான்.  நாங்கள் தண்ணீரை அவர்களிடமிருந்து பெற மறுத்தோம். நான் கட்டிடத்தின் வாசலில் நின்றேன்.  என்னை நோக்கித் துப்பாக்கியை நீட்டி ஒரு சிப்பாய் என்னை, அமரச் சொன்ன போது என்னால் உட்காரக் கூட முடிய வில்லை.  அம்மா என் முன்னால் வந்து நின்று கொண்டு ஆங்கிலத்திலும், அரபியிலும் அவனிடம் தன் மகளை பயமுறுத்த வேண்டாம், அங்கு இடமே இல்லை என்று ஆவேசமாகக் கூறினாள். எனக்கு அருகில் வயதானவர் கள் இருந்தனர். நான் அவர்களுடன் நெருக்கமாக உட் கார்ந்தால், அவர்கள் காயமடையக் கூடும். ஒரு கணம் அவன் துப்பாக்கியை அம்மாவை நோக்கித் திருப்பி னான்.  அம்மா எனக்கும் அவனுக்கும் இடையில், சுமார் ஒன்றரை மீட்டர் இடைவெளியில் நின்றாள்.

அம்மாவின் வலிமை

நான் பயந்து போனேன்.  ஆனால் அதை விட,  அம்மாவுக்கு எங்கிருந்து இவ்வளவு வலிமை வந்தது என்று வியந்து போனேன். ஒவ்வொருவரும் பயந்து போயிருந்தனர். சிலர் அழு தனர்.  ஆனால் அவள் பேசிக் கொண்டும் என்னை ஆற்றுப் படுத்திக் கொண்டும் அப்படியே நின்றாள்.  சிப்பாய் விலகிச் சென்றதும் அம்மா என்னை உட்கார வைத் தாள்.  அப்போது இரவு சுமார் 8 மணி.  அவள் என்னை யும், பிறரையும் நடுவில் உட்கார வைத்து விட்டு, அவள் சிப்பாய்களுக்கு அருகில் முனையில் நின்றாள்.  அவள் என்னிடம் கூறினாள்: “அவர்கள் நம்மைச் சேர்ந்து செல்ல அனுமதித்தால், அது நல்லது.  ஆனால் அவர்கள் என்னை உன்னுடன் செல்ல அனுமதிக்கா விட்டால், நீ பணத்தையும், செல்பேசியையும் எடுத்துச் செல்.  அப்பாவை நீ நிச்சயமாக வெளியில் பார்ப்பாய்”. எங்கு செல்ல வேண்டுமென்று மற்றவர்களிடம் அவள் சொன்னாள். அவர்கள் எங்களைத் தனியாகப் பிரித்து விசார ணைக்குக் கொண்டு சென்றனர்.  வினோதமாக, எந்த சோதனையும் செய்யாமல் எங்களை விட்டு விட்டனர். நாங்கள் கடைசி பீரங்கியை அடையும் வரை தொடர்ந்து நடந்தோம்.  அம்மா என்னை ஒரு கையிலும், இரு சிறு  குழந்தைகளின் கைகளை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டிருந்தாள்.  திடீரென இராணுவம் சென்று விட்டது.  எங்கும் இருள்.  அம்மா பிலாஷ் விளக்கை ஏற்ற, எதிரே அப்பா எங்களை நோக்கி தூரத்தில் ஓடி வந்து கொண்டிருந்தார்.    இடிக்கப்பட்ட வீட்டைச் சேர்ந்த குழந்தைகளும் எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர்.  அப்பா என்னை இறுக அணைத்துக் கொண்டார்.  பிறகு அம்மா இந்தக் கணத் துக்காகத்தான் தன் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தாள் என்று எனக்குத் தோன்றியது. நாங்கள் உயிருடன் மீண்டு விட்டோம் என்பதையே நம்ப முடியவில்லை.

ஆயுதங்களை விட  பலமான ஒன்று...

இந்த அனுபவத்துக்குப் பிறகு, அம்மா, உன்னி டம் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்.  நான் கற்றுக் கொண்ட இரு விஷயங்களை நான் மறக்க மாட்டேன். முதலில், நாம் வலிமை, துணிவு, கடவுளின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை நாம் எந்தக் கணத்திலும் விட்டுவிடக் கூடாது.  இரண்டாவது, தேவை இருப்பவரை எந்தக் காரணம் கொண்டும் கைவிட்டு விடக் கூடாது.  நீ அந்தச் சிறுவனையோ, அவனது சகோதரிகளையோ தனியாக விட்டு விடவிடவில்லை.  அவர்களையும், அவனுடன் அழைத்து வந்தாய்.  நீ அவர்களுடன் நின்று என்னிடம் சொன்னாய்: “நம்மைத் தவிர அவர்களுக்கு வேறு யாருமில்லை.” நான் இதை மறக்கவே மாட்டேன்.  இந்த ஆக்கிரமிப்பு நம் நம்பிக்கையை, வலிமையை, நமது துணிவை, நமது நற்குணங்களை, நமது கருணையை ஒரு போதும் அழித்து விட முடியாது என்பது நிச்சயம். போர் நிற்குமா, நாம் அதுவரை உயிருடன் இருப்போமா என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் விஷயம் என்னவென்றால், ஆயுதங்களை விட முக்கிய மான ஒன்றுடன் பலர் எதிர்த்து நிற்கிறார்கள்.  ஒவ்வொரு நாளும், ஒரு தந்தை எங்களுக்கு உணவளிக்க குண்டு வீச்சுக்கு நடுவில் செல்கிறார்.  ஒரு அம்மா புல்டோசர்க ளுக்கும், பீரங்கிகளுக்கும் எதிரில் தன் மகளைப் பாது காப்பதற்காக எதிர்த்து நிற்கிறாள்.  அவள் இறந்தால் கூட, தன் மகள் வாழுவாள் என்பது அவளுக்கு நன்கு தெரியும்.   ஒரு பேரன் தன் பாட்டியைத் தூக்கிச் செல் கிறான்.  ஒரு கணம் கூட அவளை விட்டு விட்டுச் செல்ல  நினைக்கவில்லை.  ஒரு சகோதரி இடிபாடுகளுக்கு இடையிலிருந்து பிடித்திழுத்து தன் சகோதரனை மரணத்திலிருந்து காப்பாற்ற முயல்கிறாள். அம்மா, இது என் நாடு, இவர்கள் என் மக்கள்.  பாலஸ் தீனர்களின் ஒவ்வொரு தலைமுறையினரும் இந்தப் பாடத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வார்கள்.

தமிழில்: கி.ரமேஷ்


 

;