articles

img

முடிவுக்கு வரும் மோடியின் ஆட்டம் - டீஸ்டா செதல்வாத்

சென்னையில் “வாய்ஸ் ஆப் டிஎன்” அமைப்பின் சார்பில் “மோடி வித்தையின் முடி வு?” என்ற தலைப்பில் இடதுசாரி செயற் பாட்டாளர் மருதையன் தலைமையில் ஞாயிறன்று (ஏப்.28) கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் மனித உரிமை செயற் பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையின் ஒரு பகுதி வருமாறு:  கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் வேடிக்கையான சம்பவங்கள் பல நடை பெற்றுள்ளன. 2022 ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நாடு சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிக் கொண்டி ருந்தபோது நான் குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது சிறையில் இருந்த பெண் சிறைவாசிகள் பலர் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு தேசியக் கொடியை ஏற்ற தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும் சிறைச்சாலையின் அதிகாரியிடம் சென்று தேசியக் கொடியை எங்கு ஏற்றப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, தேசியக் கொடியா அது எல்லாம் இங்கு ஏற்றப் படாது என்று கோபத்துடன் அவர் கூறினார். நாங்கள் எவ்வளவோ போராடியபோதும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பா டுகளை அவர் செய்யவில்லை.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தான் கொடி யேற்றப்படும் சிறைச் சாலைகளில் அல்ல என்று அவர் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

சிறைச்சாலையில் போராட்டம் 

அதே நாள் சிறைச்சாலையில் பல பெண் சிறைவாசிகள் போராட்டத்தில் ஈடு பட்டிருந்தனர். அவர்கள் ஏன் போராடுகி றார்கள் என்று முதலில் எனக்கு புரிய வில்லை. விசாரித்தபோது நீண்டகாலமாக சிறையில் உள்ளவர்கள் சுதந்திரதினம் போன்ற நாட்களில் விடுதலை செய்யப்படு வது வழக்கம். ஆனால் 75ஆவது சுதந்திர விழாவை நாடு கொண்டாடும் நாளில் இந்தச் சிறையில், நன்னடத்தை கார ணத்தை காட்டி யாரும் விடுதலை செய்யப் படவில்லை. சபர்மதி சிறைச்சாலையில் சிறைவாசிகளை அடைத்து வைப்பதற்கு 5  மிகப்பெரிய கொட்டடிகள் இருந்தன. அவற்றில் இரண்டில் விசாரணைக் கைதி களும் மீதமுள்ளவற்றில் தண்டனை பெற்ற வர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்த னர். தண்டனை பெற்ற கைதிகள்  அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் பெண் சிறை வாசிகள் பலர்  கோபத்துடன் போராட் டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதில் 15 முதல் 20 பெண்கைதிகள் நம்பிக்கையிழந்து அழுது கொண்டிருந்தனர். அவர்கள் அரசு நிர்வாகத்தின் மீது கடும் கோபத்துடன் இருந்தனர். நான் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவள் என்பதால்  அவர்களிடம் குஜ ராத்தி மொழியில் பேசினேன். என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு அதில் 21 பேர் ரிமிஷனுக்காக (சிறையில் நல்ல பெயர் எடுத்ததற்காக விடுதலை செய்யப்படுப வர்கள்)  கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக  அதற்காக அவர்கள் காத்திருப்பவர்கள் என தெரியவந்தது.

ரிமிஷன் மறுத்த பாஜக அரசு

குஜராத் மாநிலத்தில் குடியரசு தின மான ஜனவரி 26,  குஜராத் தினம், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 என நான்கு நாட்களில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள்  முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள். எனவே நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தன்று கண்டிப்பாக விடுதலையாகிவிடுவோம் என அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அவர்களில் பல பெண்கள் தனிப்பட்ட குற்றத்திற்காக 15 ஆண்டுகள், 18 ஆண்டு கள், 16 ஆண்டுகள் என சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள். ஆனால் அவர்க ளுக்கு ரிமிஷன் கிடைக்கவில்லை.

குற்றவாளிகளை விடுவித்த பாஜக அரசு!

இந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கழித்து சிறையில் வழங்கப்பட்ட செய்தித்தாளை பார்த்தபோது பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர், நன்னடத்தை என்ற பெயரில் விடுதலை செய்யப்பட்ட செய்தியை பார்த்து மிகுந்த வேதனைய டைந்தோம்.  இந்த தகவல் அறிந்து மீண்டும் சிறை யில் பெண்கள் பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். சிலர் அச்சத்துடன் காணப்பட்டனர். காரணம் போராடினால் ரிமிஷன் ரத்து செய்யப்படும் என்பதாலும் சிறையில் சமையல், பாத்திரங்கள் கழுவு தல், சுத்தப்படுத்துதல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி தோட்டத்தை பராமரித்தல் என நாள் முழுவதும் உழைத்தாலும் மாதம் வழங்கப்படும் 3500 ரூபாய் பறிபோய் விடும்  என அவர்கள் தயங்கினார்கள். காரணம் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்த பணத்தை சார்ந்து இருந்தனர்.  போராட்டம் நடத்தினால் ஊதியம் ரத்து செய்யப்படும் என்று சிறை அதிகாரிகள் மிரட்டினார்கள். இது ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தின் கொடூரம். ஜனநாயகம் திட்டமிட்டு அங்கு சாகடிக்கப்பட்டிருந்தது. 2014க்கு முன்பு இதுபோன்ற நிலையை நான் பார்த்ததில்லை.

துணிச்சல் மிக்க தமிழர்கள்

 ஒருகாலத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலை இருந்தது. நாம் போராடி, போராடி ஜன நாயக முறையில் மக்களாட்சியை ஏற் படுத்தினோம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு அதாவது மோடி பிரதமராக பதவியேற்ப தற்கு முன்பு  பல பிரச்சனைகள் தீர்க்கப்படா மல் இருந்தன என்பது உண்மைதான். அவ சரகாலத்தின் போதும்  நாம் தெருவில் இறங்கிப் போராடினோம். ஆனால் அன் றைய சூழலுக்கும் இப்போது உள்ள சூழ லுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. அப்போது அரசுக்கும் நமக்கும் சித்தாந்த ரீதியில் மோதல் இல்லை. ஆனால் இப் போது மக்களை பிளவுபடுத்தும் ஆர்எஸ் எஸ் சித்தாந்தத்திற்கும், நாட்டுமக்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இப்போது நாம் அவசர கால ஆட்சியின் கீழ் இருப்பதாக உணர்கிறோம்.   இந்த தமிழக  மண் சுயமரியாதை பேசிய தந்தை பெரியார் மண். இந்த மண் மாநில சுயாட்சியை வலியுறுத்திய அண்ணாதுரை வாழ்ந்த மண். அதனால் தான் கடந்த  பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி பலமுறை இந்த மாநிலத்திற்கு வந்தபோ தும் கோ பேக் மோடி “(Go Back Modi)” என்று மிகவும் துணிச்சலாக தமிழக மக்கள் முழக்கமிட்டனர். பாசிச சக்திக ளுக்கு எதிரான உணர்வுகளை கொண்ட மண் என்பதால் அந்த எதிர்ப்பு தானா கவே உங்களிடம் இருக்கிறது. 

வட இந்தியா  விழித்துக் கொண்டது 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, தமிழகம் கடந்த பல ஆண்டுகளில் கற்றுக் கொண்ட பாடத்தில் இருந்து தயாராகியுள் ளது என்பதை அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இறுதியாக வடஇந்தியா விழித்துக் கொண்டது. எனவே தான் மோடி அதிகாரத்தின் ஆட்டம் முடி யப்போகிறது என்று சொல்கிறோம். தனது பயணத்தின் கடைசிக் கட்டத்தில் அவர் இருக்கிறார். பாஜக அரசு அதிகாரத்தை விட்டுச் செல்லப்போகிறது என்ற நம் பிக்கை வலுப்பெற்றுள்ள போதிலும் நமது போராட்டம்  இன்றுடன் நின்று விடக்கூடாது.  இன்னும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஐந்து கட்டத்தேர்தல்கள் நடைபெறவுள் ளது. எனவே மோடி அரசு வீழ்த்தப்படும் வரை தொடர்ந்து போராடவேண்டும்.

ஊடகத்தின் செயல்பாடுகள்

நண்பர்களே, இந்த நிகழ்ச்சிக்கும் அதிகமான அளவில் ஊடக நண்பர்கள் வந்துள்ளனர். தற்போது ஊடகத்தினரை கோடி மீடியா என்று அழைக்கிறார்கள். ஆனால் அந்த ஊடகத்தில் உள்ளவர்க ளும் நமக்கு நண்பர்கள்தான். கடந்த பத் தாண்டுகால வரலாறு குறித்து எழுத வேண்டும் என்றால் ஊடகத்தினரின்  பங்கு  குறித்தும் எழுதவேண்டும். நான் 2016-ம் ஆண்டு மதுரையில் கே.ஜி. கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு ஆற்ற வந்த போது அதற்காக முன் தயாரிப்புகளில் ஈடு பட்டிருந்தேன். அப்போது இந்த அரசு (மோடி தலைமையிலான பாஜக அரசு) நாட்டில் உள்ள அனைத்துதரப்பு மக்கள் மீதும் போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று குற்றம்சாட்டினேன். இங்கு உரை யாற்ற வருவதற்கு முன்பும் விரிவான முன் தயாரிப்புடன் வந்துள்ளேன். காரணம் கடந்த பத்தாண்டுகளை மறக்கமுடியாது. நாட்டில்  எண்ணற்ற கொடுமைகள் நடந்து விட்டன.   கடந்த சில ஆண்டுகளாக வெறுப்புப் பிரச்சாரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இது ஏதோ கடந்த பத்தாண்டுகால திட்ட மிடல் அல்ல. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தின் ஒருபகுதியே அது.  கடந்த 99 ஆண்டுகளாக இதற்கா கவே அந்த அமைப்பு இயங்கி வந்தது. இந்தியாவில் உருவாகியுள்ள பாசிச முறை மிகவும் மோசமானது. காரணம் இந்த பாசிச முறைக்கு பின்னால் ஆயிரம் ஆண்டுகால ஆதிக்க மனப்பான்மை கொண்ட சக்திக ளின் வலுவான ஆதரவு அதற்கு இருக்கி றது என்பதுதான்.

பொய்கள் குறித்த புள்ளிவிவரங்கள்

வருங்காலத்தில் இளைய தலைமுறை யினர் நம்மைப் பார்த்து உங்களது தலை முறை எப்படி இருந்தது என்று கேட்டால் என்ன சொல்வது? வேலையின்மை குறித்து நான் என்ன சொல்லமுடியும்? தற்போது நாட்டில் 65 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதற்கு பதில் சொல்லாமல் இந்த அரசு எந்த தைரி யத்தில் தேர்தலை சந்திக்கச் சென்றது? காரணம் அரசுக்கு பெரும்பாலான ஊடகங் கள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. அரசின் புள்ளி விவரங்கள் அனைத்திலும் பொய்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. வேலையின்மை குறித்து ஊடகங்கள் அரசிடம் கேள்வி எழுப்பவில்லை. பீகார் மாநிலத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்பு கிறேன். ஒருசில ஆயிரம் அரசு பணியிடங்க ளுக்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  

விரக்தியில் இளைஞர் பட்டாளம் 

பீகாரில்  கோபமுற்ற இளைஞர் பட்டா ளம் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கும்  நிலைக்குச் சென்றது. காரணம் ரயில்வே யில் 45 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருகோ டியே 25 லட்சம் பீகாரிகள் விண்ணப்பித்தி ருந்தனர். ஆனால் ரயில்வேயில் உண்மை யில் 25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மோடி அரசு அந்த காலிப்பணியி டங்களை நிரப்பத் தயாராக இல்லை. ஏனென்றால் நமது வரிப்பணத்தில் உரு வாக்கப்பட்ட ரயில்வே போன்ற பொதுத் துறை நிறுவனங்களைப் படிப்படியாக தனியார்மயமாக்க முயற்சித்துக்கொண்டி ருக்கிறது. இதனால் விரக்தியடைந்த இளை ஞர் பட்டாளத்தைத் தான் இந்த அரசு  உருவாக்கிக்கொண்டிருக்கிறது.  எனவே தான் அரசின் மீது கோபமாக உள்ள இளை ஞர்கள் இன்று தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏதோ ஒரு அமைப்பின் செயற்பாட்டாளர் கள் அல்ல. சாமானிய மனிதர்கள்.  உத்தரப்பிரதேச மாநிலத்தலைநகர் லக்னோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்றால் உத்தரப்பிர தேச மாநில அரசு பணியாளர் தேர்வா ணைய (யு.பி.எஸ்.சி) தேர்வு வினாத்தாள் கள் முன்கூட்டியே கசிந்துவிட்டது. 16,244 காலியிடங்களுக்கு 48 லட்சம் பேர் தேர்வு எழுதக் காத்திருந்தனர். காலையில் தேர்வு மையங்களுக்கு இளைஞர்கள் சென்ற போது வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டது. எனவே தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது என்று அரசுப்பணியாளர் தேர்வா ணையம் அறிவித்தது. இதனால் கடும் கோபமுற்ற இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை மாநில அரசு ஒடுக்கியது. வினாத்தாள் கசிவுக்கு யார் காரணம்? அரசுதானே. தேர்வுஎழுத ஏற்கெனவே 48 லட்சம் இளைஞர்கள் 400 ரூபாய் செலுத்தியிருக்கிறார்கள். இந்த கேள்விகளுக்கு எல்லாம் யார் பதில் சொல்லப்போகிறார்கள்?

பிரதமரின் உளறல்கள்

மாநில சுயாட்சிக்காக தமிழகத்திலி ருந்து முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கேரளாவிலும்  கர்நா டகத்திலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இது உண்மையான பிரச்சனையா? ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தை விவாதிப் பது உண்மையான பிரச்சனையா?. சமீபத்தில் பிரதமர் மோடி, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது முகலாய மன்னர்கள் குறித்து பேசியிருக்கி றார். பெண்கள் கழுத்தில் அணியும் தாலி குறித்து பேசியிருக்கிறார்? பெண்கள் பலர் தாலியை புனிதமாக கருதுகிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பல பெண்களின் தாலி அறுக்கப்பட்டதே அப்போது இந்த பிரதமர் எங்கே போயி ருந்தார்? அதைபற்றி ஏன் பேசமறுக்கி றார்? அப்போது பெண்கள் மட்டுமா, விவ சாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கினார் கள். வேளாண் இடுபொருட்களை வாங்க வங்கிகளில் உள்ள தங்களது பணத்தை  ரொக்கமாக எடுக்க முடியாமல் அவதிப் பட்டனர். சாமானிய மக்கள் பலர் அவசரத் தேவைகளுக்காக பணத்தை எடுக்க முடியாமல் நெருக்கடியில் தள்ளப்பட்ட னர்.

வெறுப்புப்  பிரச்சாரத்தை வெறுக்கும் மக்கள்

பெருந்தொற்று காலகட்டத்தில்  பட்டினி அதிகரித்தது. உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அரசின்  மோச மான நடவடிக்கை காரணமாக லட்சக்க ணக்கான புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றார்கள்.  நாட்டு மக்களை இப்படி வாட்டி வதைத்திருக்கிறோமே  என்ப தற்காக மோடி அரசு கொஞ்சம் கூட வெட்கப் படவில்லை. வருத்தப்படவில்லை. பொது முடக்கம் அறிவிக்கப்படும் முன்பு மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலந்தா லோசிக்கவில்லை. காரணம் கூட்டாட்சித் தத்துவம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மாநிலங்களோடு நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசு விரும்ப வில்லை.  முதல் 5 ஆண்டுகால ஆட்சியின்போது பசுவதை தடைச்சட்டத்தை மோடிஅரசு நிறைவேற்றியது. மாநில அரசின் அதிகா ரத்திற்கு உட்பட்ட பிரச்சனைகளில் தலையிட்டு சட்டமியற்றுகிறது. எனவே பத்தாண்டு கால  மோடி அரசின்  மோச மான செயல்பாடுகளை பற்றி பேசுவதற்கு காலம் போதாது. எனவே அடுத்த நான்கு வாரங்களில் தேர்தல் நடைபெறவுள்ள மாநில மக்களிடம்  மோடி அரசின் தோல்விகளை வலுவாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களிடம் பேச வேண்டும். வெறுப்புப் பேச்சுக்களின் ஆபத்துக்களை உணர்த்த வேண்டும். முன்பை விட தற்போது வெறுப்புப் பேச்சுக ளுக்கு எதிரான கருத்து மக்களிடம் அதிக ரித்துள்ளது. மதவாத மோதல்களுக்கு எதி ரான மனநிலையை கொண்ட வாக்காளர்க ளை நாம் உருவாக்கவேண்டியது அவசிய மாகும். 

சட்டவிரோத குடியேற்றம்

கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்தி ற்கும் அதிகமான இந்தியர்கள் சட்ட விரோ தமாக அமெரிக்காவில் குடியேற புலம்பெயர்ந்துள்ளனர்.  இவர்களை சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்கள் என்று அந்நாட்டு அரசு அழைக்கிறது. 7 லட்சம் இந்தியர்கள் இந்தியாவில் இருக்க முடியாது என்றுகூறி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டனர். இதைப் பற்றி எல்லாம்  தேர்தலில் பாஜக பேச வேண்டாமா? மோடி அரசின் தவறான கொள்கைகளால் நாம் திறமையான இந்தியர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் நல்ல சூழலில் வளருவதற்கான சூழல் தற்போது இந்திய நாட்டில் இல்லை என்று வெளிநாடு சென்றவர்கள் கூறு கிறார்கள். அப்படிச் சென்றவர்கள் வெறும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. பெரும்பான்மை சமூகத்தில் இருந்துதான் அதிகமானோர் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் இந்த அரசை எதிர்த்து போரா டத் தயாராக இல்லை. எதிர்த்துப் பேசத் தயாராக இல்லை. எங்களுக்கு வெளிநாடு களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறிச் சென்று விட்டனர். 

மோடியின்  வெறுப்புப் பிரச்சாரம் 

2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் எந்தளவுக்கு வெறுப்புப் பிரச்சாரம் செய்தார் என்பதை நாடு மறந்துவிடவில்லை. குஜராத் கலவரத்திற்கு பின்னர் 2002ஆம் ஆண்டு செப்டம்பர் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மேசா னா மாவட்டத்தில் பேசிய அப்போதைய முதலமைச்சர் மோடி நிவாரண முகாம்கள் குறித்து மோசமான கருத்துக்களை தெரி வித்தார். எனவே இந்த வெறுப்புப் பிரச்சா ரத்திற்கு நீண்ட கால வரலாறு உள்ளது.  இது நீண்டகாலமாக வெறுப்புப் பிரச்சா ரத்தை அடிப்படையான கொண்டு செயல் படும் சித்தாந்தத்தை கொண்ட அமைப்பின் வெளிப்பாடு. அடுத்தடுத்து வெறுப்புப் பிரச்சாரம் செய்து மக்களை பலவீனப் படுத்தியதோடு ஜனநாயகத்தையும் அவர் பலவீனப்படுத்தினார். இது பாசிசத்திற்கு எதிரான முற்போக்கு சக்திகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்றபோது, எனது மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள புனேயில்  மோஷின் ஷேக் என்பவர் வன்முறைக் கும்பலால்  அடித்து கொல்லப்பட்டார்.  பின்னர் அக்லக், அதற்கடுத்து ஜூபைர், பின்னர் தப்ரேஸ், அதற்கடுத்து பேலு கான் என கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிக நீளமானது; ஆனால் நமது நாட்டு மக்களுக்கு இந்த கும்பல் படுகொலைக ளுக்கு எதிராக கோபம் வரவில்லை. ஊடகங்களும் மக்கள் அந்த சம்பவங்க ளை மறப்பதற்கு என்னென்ன செய்ய முடி யுமோ அதை செய்து கொண்டிருந்தன.  2016 குஜராத் தெருக்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கம் தொடங்கியது. தலித் சமூகத்தை சேர்ந்த இளம் தலைமுறை யினர் செத்துப் போகும் மாடுகளை அடக்கம் செய்யும் பணியை இனி செய்யமாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். காலம் கால மாக சாதிய ஒடுக்குமுறை அந்த பணியை  அவர்கள் மீது திணித்திருந்தது.  இளைய தலைமுறை விழித்துக்கொண்டது. இரண்டு மாதங்கள் நீடித்த அந்தப் போ ராட்டம் காரணமாக குஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து ஆனந்திபென் பட்டேல் விலக வேண்டியிருந்தது. அந்த இயக்கம் அதோடு நின்றுவிடவில்லை. நரோடா  பாட்டியாவில் உள்ள  இஸ்லாமியர்களை யும் சென்றடைந்தது.  இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் எனது வாழ்நாளில்கூட நினைத்துப்பார்க்கவில்லை.  நரோடா பாட்டியாவில் 2002 குஜராத் கலவரத்தின் போது பட்டப்பகலில்  ஏராள மான பெண்கள் பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கப்பட்டனர். 125க்கும் மேற் பட்டோர் அப்போது கொல்லப்பட்டனர்.  அந்த நகருக்கு தலித் இளைஞர்கள் சென்று பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களு டன் கலந்துரையாடினர். வேதனையைப் பகிர்ந்துகொண்டனர். இதுபோன்று அணிச் சேர்க்கைதான் நமக்கு தேவை. எனவே மக்களவைக்கு இன்னும் 5 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. நமது ஆற்றலை முழுமையாகப் பயன் படுத்தி சமூக வலைதளங்கள் மூலமாக மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு வெறுப்புப் பிரச்சாரத்தின் ஆபத்துக்களை உணர்த்தவேண்டும். உண்மையான பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

9140 இளைஞர்கள் தற்கொலை!

வேலையின்மையின் கொடூரமான விளைவுகள் குறித்து மேலும் ஒரு உதார ணத்தை குறிப்பிட விரும்புகிறேன். உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்த போது வேலை கிடைக்காத விரக்தியில் 9140 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். இந்தப் பிரச்சனை தேர்தல் பிரச்சனையாக  ஏன் பேசப்படவில்லை. எத்தனைபேருக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை. 2016 ஜனவரியில் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா என்ற  ஆய்வு மாணவர் கல்வி நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டார். இதற்கு இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் தான் காரணம். அம்பேத்கர் வாசகர் வட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுவேலை பார்த்தனர். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தி லும் மாணவர்களையும் மோடி ஆட்சி விட்டுவைக்கவில்லை. அவர்களோடு மோதல் போக்கை கடைப்பிடித்தது. பல்க லைக் கழக நிர்வாகத்தின் துணையோடு மாணவர்களின் ஜனநாயகச் செயல்பாடு களை முடக்கியது. மத்திய பல்கலைக் கழகம் என்ற கல்வி நிறுவன முறையை நேரு தனது ஆட்சிக்காலத்தில் தொடங்கி னார். இதுபோன்ற பல்கலைக் கழகங்க ளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்வேறு மொழிகளை பேசும் மாணவர் கள் கல்வி கற்கும்போது வேற்றுமையில் ஒற்றுமை ஏற்படுகிறது. பன்முகத்தன்மை வலுப்பெறுகிறது.

திட்டமிட்ட சீர்குலைப்பு 

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னையாகுமார். தில்லி ஜாமியா நகரை சேர்ந்த உமர்கா லித் ஆகியோர் ஒன்றாக படித்தனர். மத்திய பல்கலைக் கழகங்கள் தொடங்கப் படுவதற்கு முன்பு அதாவது 1960க்கு முன்பு முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே அரசு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் நிலை இருந்தது. இடதுசாரிகளின் தொடர்ச்சியான  போராட்டம்  மற்றும்  உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரி யர்களாக நிர்வாகிகளாக பிபின் சந்திரா, ரொமிலா தாப்பர் போன்றவர்கள் வந்த பின்னர்தான் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பல்வேறு மாநிலங்களின் மாண வர்கள் ஒன்றாக  கல்வி கற்கும் வாய்ப்பு களைப் பெற்றனர். இப்படிச் செய்தால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்று சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் நீண்ட போராட்டங்களுக்கு  பிறகு இதுசாத்தியமானது.  2014 ஆம் ஆண்டு வரை இந்த மத்திய பல்கலைக்கழகங்களில் ஜனநாய கம் இருந்தது.  விவாதங்களும் நடை பெற்றன. அதற்கு பின்னர் என்ன நடந்தது?  ஜனநாயக நடைமுறைகள் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டன. இந்த அரசை வழிநடத்தும் சித்தாந்தம் மிகவும் விஷத் தன்மை வாய்ந்தது. அது நாடு பிரிவினை யின் போது பல உயிர்களை காவு வாங்கி யது. ஒரே நாட்டு மக்களை ஒரே இரவில் எதிரி களாக மாற்றி அடித்துக்கொண்டு சாவுவ தற்குக் காரணமாக இருந்தது. எனவே இந்த விஷத்தனமான ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வீழ்த்துவது காலம் நமக்கு தந்துள்ள மிகப்பெரிய கடமையாகும். இவ்வாறு டீஸ்டா செதல்வாத் பேசி னார். இந்நிகழ்வில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், திமுக மாணவர் அணித் தலைவர் இரா. ராஜீவ் காந்தி, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், மூத்த பத்திரி கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு : அ.விஜயகுமார்





 


 

;