articles

img

செல்வந்தர்கள் மீது வரி என்றால் மோடி ஆத்திரப்படுவது ஏன்?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21 அன்று நரேந்திர மோடி ஆற்றிய அருவருக்கத்தக்க உரையானது, முஸ்லிம்கள் மீது அவர்கள் ஏவியுள்ள மிகவும் கொடூரமான தாக்குதலில் குறிப்பிடத்தக்கதாகும். இந்துக்களின் தங்கம் மற்றும் சொத்துக்களை “ஊடுருவல்காரர்களிடம்” மீண்டும் ஒப்படைத்துவிடுவார்கள் என்ற ரீதியில் அவரு டைய உரை இருந்தது. இவருடைய உரையிலிருந்த மதவெறி நஞ்சானது விரிவான அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியது என்பது புரிந்துகொள்ளக்கூடியதேயாகும்.

ஏற்றத்தாழ்வு அதிகரிக்க காரணம் என்ன?

ஆயினும், இவருடைய உரையில் மற்றோர் அம்சமும்  உள்ளடங்கியிருக்கிறது. அது, நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே மிகவும் மோசமான அளவில் உள்ள ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் அவற்றின்மீதும் வெறுப்பை கக்கியிருக் கின்ற அதிதீவிர வலதுசாரி பார்வையும் மோடியின் பேச்சில் அடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதர வாளரான சாம் பிட்ரோடா, அமெரிக்காவில் இருப்பது போன்று இந்தியாவிலும் வாரிசுரிமை வரி (inheritance tax) விதிப்பது குறித்தும் பரிசீலித்திடலாம் என கூறிய கருத்துக்கள் மீதும் மோடிக்கும், பாஜகவிற்கும் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டு களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்குவது, செல்வ  வரியை (wealth tax) ஒழித்துக்கட்டியது, உயர் பணக் காரர்களின் வருமானவரி விகிதத்தைக் குறைத்திருப்பது மற்றும் தன்னுடைய கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு சாதகமான அணுகுமுறையைப் பின்பற்றுவது போன்று கடந்த பத்தாண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த கொள்கை களின் விளைவாகவே, இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயிருந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகமாகி, உலகில் சமத்துவமற்று இருந்திடும் மிக மோசமான சமூகங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றி அமைத்திருக்கிறது.  

1% பேரிடம் 40% செல்வம் குவிப்பு

இந்தியாவில் சமத்துவமின்மை அதிகரித்திருப்பதைக் காட்டக்கூடிய விதத்தில் ஏராளமான தரவுகள் வெளி வந்துள்ளன. உலக சமத்துவமின்மை ஆய்வகம் (World Inequality Lab)வெளியிட்டுள்ள தரவின்படி, நம் நாட்டிலுள்ள மக்கள் தொகையில் உச்சத்தில் உள்ள 10 விழுக்காட்டினர் நாட்டின் செல்வ வளத்தில் 65 விழுக்காட்டையும், 2022-23ஆம் ஆண்டில் வரு மானத்தில் 57 விழுக்காட்டையும்  பகிர்ந்துகொண்டுள்ள னர். ஆக்ஸ்ஃபாம் (Oxfam) வெளியிட்டுள்ள தரவின் படி, மக்கள் தொகையில் உச்சத்தில் உள்ள 1 விழுக்கா ட்டினர் நாட்டின் செல்வத்தில் 40 விழுக்காடு அளவிற்கு  சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். அதே சமயத்தில் இதற்கு முற்றிலும் முரணான விதத்தில், அடித்தட்டில் உள்ள 60 விழுக்காட்டினர் வெறும் 4.7 விழுக்காடு அள விற்கே செல்வ வளத்தைப் பெற்றிருக்கிறார்கள். உச்சத்தில் உள்ள 1 விழுக்காட்டினர் வைத்துள்ள கறுப்புப் பணத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டோமானால் சமச்சீரின்மை மேலும் மோசமாக மாறிடும். 

அரசியலமைப்புச் சட்ட வழிகாட்டுதல்

நாட்டில் பெரும்பான்மை மக்கள் தங்கள் செல்வ வளங்களை இழந்து, கேடுகெட்ட சமூக மற்றும் பொருளாதார அமைப்பிற்குப் பலியாகி இருக்கின்றனர் என்பதை நன்குணர்ந்து, அதை அங்கீகரித்தே இந்திய அரசமைப்புச்சட்டமானது, தன்னுடைய IV-ஆவது பிரிவில் வழிகாட்டும் கோட்பாடுகள் (Directive Principles) என்னும் பகுதியில் கீழ்க்கண்டவாறு சில நெறிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறது. “நாட்டின் செல்வ வளங்களின் உரிமையும் கட்டுப்பா டும் சாமானிய மக்களைப் பேணக்கூடிய விதத்தில் விநியோ கிக்கப்பட வேண்டும்” என்று 39(b) குறிப்பிடுகிறது.  “பொருளாதார அமைப்பின் செயல்முறைகள் செல்வம் மற்றும் உற்பத்திச் சாதனங்கள் ஒருபக்கத்தி லேயே குவிவதற்கு இட்டுச்சென்று, பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது” என்று 39(c) கட்டளை பிறப்பித்திருக்கிறது.   ஆனாலும் கடந்த முப்பதாண்டு காலமாக நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நவீன தாராளமயக் கொள்கைகள் இத்தகைய நம் அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு விரோதமாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன. நாட்டின் செல்வம் மிக வும் சுருங்கிய நிலையில் உள்ள பில்லியனர்களின் கைகளில் (ஒரு பில்லியனர் என்றால் ஆயிரம் கோடி  ரூபாய்க்கும் மேல் சொத்துள்ளவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்) குவிந்திடவும், 90 விழுக்காட்டு மக்கள் நாகரிகமான முறையில் வாழ்வாதாரங்களை ஈட்டு வதற்கும், சிறந்த வாழ்க்கையை நடத்துவதற்கும்  முடி யாத நிலையில் வாழ்ந்துவரும் நிலையிலும் இருந்து வருகிறார்கள்.

கடலில் மூழ்கியுள்ள இந்தியா

நவீன தாராளமயம் சமத்துவமின்மையை உலகம் முழுவதுமே அதிகரித்திருக்கிறது. இவ்வாறு சமத்துவ மின்மை என்னும் கடலில், இந்தியா அதலபாதாளத் திற்குள் மூழ்கியிருக்கிறது. சமத்துவமின்மை என்னும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நாடுகளுக்குள்ளேயும், பணக்கார தொழில்வளம் மிக்க நாடுகளுக்கும், வளர்முக நாடுகளுக்கும் இடையேயும் விவாதங்கள் தீவிரமானமுறையில் மீண்டும் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.

செல்வந்தர்கள் மீது வரி விதித்திடுக!

வறுமையைப் போக்கிட சமத்துவமின்மையைச் சரிக்கட்டிட, செல்வாதாரங்களை மறுவிநியோகம் செய்திட உதவக்கூடியவிதத்தில் வரிவிதிப்புக் கொள்கை யை உருவாக்குவதே அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும். செல்வ வரி (wealth tax) விதிப்பது, அதாவது பெரும் பண க்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது, வாரிசுரிமை வரி (inheritance tax) மற்றும் நன்கொடை வரி (gift tax) ஆகியவை இவற்றில் சில நடவடிக்கைகளாகும். இவற்றை மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்திட வேண்டி யிருக்கிறது.   

வாரிசுரிமை சொத்து மீதான வரி

வளர்ந்த  முதலாளித்துவ நாடுகளில்கூட ஆரம்பத்தி லிருந்தே இருந்துவரும் கொள்கை என்பது வாரிசுரிமை வரி விதிப்பது என்பதுமாகும். இவ்வாறு வசூலிக்கும் தொகையை பொது நல நோக்கங்களுக்கு செலவிடுவது என்பது அரசின் கொள்கைகளில் ஓர் அங்கமாக அங்கே  நிறுவப்பட்டிருக்கிறது. வாரிசுரிமை வரியிலும் இரு விதங்கள் இருக்கின்றன. ஒன்று, எஸ்டேட் வரி, மற்றொ ன்று வாரிசுரிமை வரி. இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்னவென்றால் எஸ்டேட் வரி என்பது இறந்தவரின் சொத்துக்கள் (எஸ்டேட்டுகள்) அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்போது, அவ்வாறு பெறும் வாரிசுதாரர்கள் (அவர்கள் இறந்தவரின் கண வராகவோ அல்லது மனைவியாகவோ இருக்கலாம், அல்லது குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம்) அவர் களுக்குக் கிடைக்கும் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தின் மதிப்பிற்கேற்ப வரி விதிக்கப்படுவார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 19 நாடுகளில், வாரி சுரிமை வரி, நன்கொடை வரி அல்லது எஸ்டேட் வரிகள் அமலில் இருந்து வருகின்றன. உதாரணமாக, இங்கி லாந்தில் வாரிசுரிமை வரி என்பது 50 விழுக்காடு வரைக்கும், பிரான்சில் 45 விழுக்காடு வரைக்கும், நெதர் லாந்தில் 40 விழுக்காடு வரைக்கும் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே, ஜப்பானில் வாரி சுரிமை வரி 55 விழுக்காடு வரைக்கும், அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களிலும் 20 முதல் 55  விழுக்காடு வரையிலும் வாரிசுரிமை வரிகள் இருக்கின் றன. இந்தியாவில் இருந்துவந்த வாரிசுரிமை வரி 1985இலும், செல்வ வரி 2015இலும் ஒழித்துக்கட்டப்பட்டன. இதற்கு அந்த சமயங்களிலிருந்த ஆட்சியாளர்களால் கூறிய காரணங்கள், இந்த வரிகளின் மூலமாக மிகவும் அற்பமாகவே வருமானங்கள் வருகின்றன என்றும், ஆனால் இவ்வரிகளைப் பெறுவதற்காக ஏற்படும் நிர்வாகச் செலவினமோ மிகவும் அதிகமாக இருக்கின்றனஎன்பதுமாகும்.

யார் மீது செல்வ வரி?

நாட்டில் சிலருடைய செல்வம் என்பது மிகவும் அதிர்ச்சி யளிக்கும் அளவிற்கு பாய்ச்சல்வேகத்தில் அதிகரித்து ள்ள நிலையில் அவர்களது செல்வத்தின் மீது வரி  விதிக்கப்படுவது நியாயமானதாகும். இது நாட்டில் சமச்சீரின்மையை ஓரளவுக்குக் குறைக்கவும் வழிவகுத்தி டும். 2023இல் ஹருண் உலக பில்லியனர்களின் பட்டி யலில் (Hurun Global Billionaires List) இடம் பெற்றி ருந்த 187 டாலர் பில்லியனர்கள் மீது செல்வ வரி விதிக்கப் பட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர் பேரா.  ஜெயதி கோஷ் அவர்கள், தலைவர்களில் ஒருவராக இருந்த சர்வதேச கார்ப்பரேட் வரிகளின் சீர்திருத்த த்திற்கான சுதந்திரமான ஆணையம் (Independent Commission for the Reform of International Corporate Taxation)  பரிந்துரைத்திருந்தது.  இதன் பொருள், உலகில் உள்ள மக்கள்தொகையில் 99.99 விழுக்காட்டினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். பணக்காரர்கள் மீதான 4 விழுக்காடு வரிகூட கணிசமான அளவிற்கு வருமானத்தை ஈட்டித்தந்தி டும். அவற்றின்மூலம் பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கு  அவற்றைப் பயன்படுத்தலாம்.

ரூ.100 கோடிக்கும் மேல்  சொத்து இருந்தால்…

அதேபோன்றே, வாரிசுரிமை வரி என்பது உச்ச நிலையில் உள்ளவர்களின் செல்வம் அதன் வாரிசு தாரர்களுக்கு அளிக்கப்படும்போதே விதிக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சொத்துக்கள் வைத்திருப்போருக்கு அது பொருந்தாது. உதாரணமாக, 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துள்ளவர்களுக்கும் அதுவும்கூட படிப்படியாகக் கொண்டுவரலாம். எனவே மோடி,  ‘இந்தியா கூட்டணி’ ஆட்சிக்கு வந்தால் தாலியைப் பறித்துக்கொள்வார்கள் என்றும், பிற சொத்துக்களையும் கையகப்படுத்திவிடுவார்கள் என்றும் வாக்காளர்கள் மத்தியில் கூறுவதெல்லாம் அவர்களை பயமுறுத்துவதற்காகவேயாகும்.

மோடி எரிச்சலடைவது ஏன்?

எனவேதான், பில்லியனர்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகளின் வரிகளைக் குறைத்தும், அவர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை யெல்லாம் தள்ளுபடி செய்தும், பல்வேறு வடிவங்களிலும் உதவிகள் செய்தும் வரும் மோடி அரசாங்கம்,  பணக்காரர்களுக்கு வரி விதித்திடும் முன்மொழிவுகள் எதுவாக இருந்தா லும் அதனை அநாகரிகமானதாகக் கருதுகிறது. மோடி  அதனை, “அர்பன் நக்சல் சிந்தனை” (“urgan naxal thinking”) என்று அழைத்திடுகிறார். மோடி அரசாங்கத்தின் இந்துத்துவா மதவெறி-கார்ப்பரேட் குணத்தின் அடிப்படையில் இவ்வாறு தாக்குதல் தொடுக்கப்படுகிறது. வாரிசுரிமை வரி என்று பேசினாலே அதன்மீது கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அந்த முன்மொழிவுமீது மதச்சாயம் பூசப்படுகிறது.  மறுவிநியோகக் கொள்கைகளில் காங்கிரஸ் கட்சித் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்திட, புதிதாகக் கொள்கைகள் எதையும் அது அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, அது தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்கப்படும் என்றும், வாரிசுரிமை வரி கொண்டுவரப்படும் என்றும், கார்ப்பரேட்டுகள் பெற்றிடும் லாபங்களின் மீது வரி விதிக்கப்படும் என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது.  பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும்பணக்காரர்களுக்கு சேவகம் செய்துவரும் மோடி ராஜ்ஜியம் ஒழித்துக்கட்டப்பட வேண்டுமானால் இவை முக்கியமான நடவடிக்கைகளாகும்.

(மே 1, 2024) / தமிழில்: ச.வீரமணி





 

;