articles

img

பொறுப்புக்களை கை கழுவும் தேர்தல் ஆணையம்

மே 7 அன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுடன் மக்களவைக்கான இடங்களில் பாதி இடங்களுக்கு தேர்தல் முடிவடைந்திருக்கிறது. ஒரு நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவதை மேற்பார்வை செய்திடும் பணியில் தேர்தல் ஆணை யம் எவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கு இது போதுமானதாகும். தேர்தல் ஆணையம் மிகவும் மோசமான முறையில் தோல்வி அடைந்திருக்கிறது.

சந்தேகங்கள் நிரூபணமாகின்றன

தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, தேர்தல் ஆணையத்திற்கு நியமிக்கப்பட்ட இரண்டு தேர்தல் ஆணையர்களின் பணிகள் குறித்து ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் அனைத் தும் உண்மையாகி இருப்பது மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   தேர்தல் நடத்தை விதிகளை அமலாக்குவது மற்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான முறையில் வாய்ப்புகளை அளிப்பது போன்ற அடிப்படைப் பொறுப் புகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை. மாறாக, மார்ச் 16 அன்று தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் மாதம் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் அளித்திட்ட சுய திருப்தி கொண்ட அறிக்கைக்கு மாறாக, தேர்தல்  ஆணையம் தன் பொறுப்புகளிலிருந்து நழுவிக் கொண்டதைப் பார்த்தோம்.

புலனாய்வு முகமைகளுக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்

முதலாவதாக, தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறித்து வாயே திறக்காமல் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருந்தது தேர்தல் ஆணையம். தேர்தல்கள் மற்றும் நடத்தை விதிகள் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் ஐந்து நாட்கள் கழித்து, மார்ச் 21 அன்று, தில்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கன்வீனருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம், தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் அரசியல் கட்சித் தலை வர்களுக்கு எதிராக வலுக்கட்டாய நடவடிக்கை எதை யும் எடுக்கக்கூடாது என்று ஒன்றிய அரசின் அனை த்துப் புலனாய்வு முகமைகளுக்கும் தாக்கீது அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் இதனை அது செய்திட வில்லை. வருமான வரித்துறையானது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கையும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழுவின் வங்கிக் கணக்கையும் முடக்கி வைத்திருக்கிறது. தேர்தல் பிரச் சாரத்தின்போது இக்கட்சிகளின் நிதி நிலைமைகளை முடக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.  

சிபிஎம் புகாரை கண்டுகொள்ளாத நிலை

தேர்தல் நடத்தை விதி அமலாக்கத்தைப் பொறுத்த வரை மிகவும் பட்டவர்த்தனமாகத் தெரியக்கூடிய செய லின்மை என்பது, பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்க ளுக்கு எதிராக மதவெறி நஞ்சைக் கக்கி பிரச்சாரம் செய்துவந்தபோதிலும் அவருக்கு எதிராக எவ்வித மான நடவடிக்கையும் எடுக்க மறுத்திருப்பதாகும். மோடி, ஆஜ்மீரில் ஏப்ரல் 6 அன்றும், பிலிபித்தில் ஏப்ரல் 9 அன்றும் எதிர்க்கட்சிகள் ராமனுக்கு எதி ராக இருப்பதாகவும், “ராமனை அவமதித்து”க் கொண்டிருப்பதாகவும், ராமர் கோவிலுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசிய பேச்சுக்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி புகார் செய்த போதிலும், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பின்னர் ஏப்ரல் 21 அன்று பன்ஸ்வாரா என்னு மிடத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தி மதவெறி நஞ்சைக் கக்கியபோது, பல்வேறு கட்சியினரும், புகழ்பெற்ற ஆளுமைகளும் புகார்கள் செய்தனர். இதற்கு தேர்தல் ஆணையத்தின் எதிர்வினை எப்படி இருந்தது என்றால், அது இவ்வாறு பேசிய நபருக்கு எதிராக நோட்டீஸ் எதையும் அனுப்பிடவில்லை. மாறாக பாஜக-வின் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை, அதா வது, இரண்டு வாரங்கள் கழிந்தபின்னரும், பாஜக தலைவரும் அதற்கு எவ்விதமான பதிலையும் அளித் திடவில்லை. மாறாக இதற்குப் பதிலளித்திட காலத்தை நீட்டித்துத்தர வேண்டும் என்றுதான் இருமுறை அவர் கேட்டிருக்கிறார்.

தேர்தல் முடிந்தவுடன் நீக்க உத்தரவு

அதே சமயத்தில், மோடி எதிர்க்கட்சியினருக்கு எதிராக மதவெறியைத் தூண்டும் விதத்தில் மதவெறி நஞ்சுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, கர்நாடக மாநில பாஜக முஸ்லிம்களுக்கு எதிராக ஆட்சேபகரமான வீடி யோக்களை ‘எக்ஸ்’ (‘X’) சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக முறையீடு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்படி ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தை அதனை நீக்கிவிட கட்டளை பிறப்பித்தது. எனினும், இந்தக் கட்ட ளை வெளிவந்த சமயத்தில், கர்நாடகாவில் இறுதிக் கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இன்னமும் அந்த வீடியோ  சமூக ஊடக வலைதளத்திலிருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், எதிர்க்கட்சி வேட்பா ளர்களுக்கு எதிராகவும் தனிநபர் தாக்குதல்கள் மேற்கொண்டார்கள் என்று ஏதேனும் பொய்ப் புகார்கள் வரும்பட்சத்தில் அவற்றின் மீது உடனடி யாக நடவடிக்கை எடுத்திடுவது போலவே தோன்று கிறது. ஆனால் மதவெறி நஞ்சை உமிழும் இந்துத்து வா பிரச்சாரத்திற்கு எதிராகவோ, வெறுப்புப் பேச்சுக ளுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க அது விரும்பவில்லை. 

செயல்திறன், தொழில்நுட்பத் திறனிலும் சரிவு

ஆணையத்தின் செயல்திறன் மற்றும் தொழில் நுட்பத் திறனிலும்கூட பெரிய அளவிற்கு சரிவு ஏற்பட்டி ருப்பதையும் காண முடிகிறது. தேர்தல் ஆணை யம், பத்தாண்டுகளுக்கு முன்னால் எல்லாம், தேர்தல் களை நடத்துவதிலும் அதன் புள்ளிவிவரங்களைத் தொகுப்பதிலும் மிகச் சிறந்த பதிவுகளைப் பெற்றி ருந்தது. இவ்வாறு அது பெற்றிருந்த நற்பெயர் கடந்த சில ஆண்டுகளில் அரிக்கப்பட்டுக்கொண்டே வந்தி ருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தல்களுக்குப் பின்னர், வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை தொகுதி வாரி யாகவும், மாநில வாரியாகவும் மற்றும் அகில இந்திய அளவிலும் முழுமையாக சரிவர உடனடியாக அதனால் வெளியிட முடியாமல், இரண்டு ஆண்டுகள் கழித்தே வெளியிட்டிருக்கிறது. இப்போதும் கூட, முதல் கட்ட வாக்குப் பதிவும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்த பின்னர், முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து அதன் இறுதி சதவீதத்தை அறிவித்திட 11 நாட்களும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து அதன் இறுதி சதவீதத்தை அறிவித்திட நான்கு நாட்களும் எடுத்துக் கொண்டிருக்கிறது.

விளக்கம் அளிக்கவில்லை

மேலும், முதலில் சொன்ன புள்ளிவிவரத்திற்கும் இறுதியில் சொன்ன புள்ளி விவரத்திற்கும் இடையே ஆறு விழுக்காடு உயர்வு இருந்திருக்கிறது. இவ்வாறு வழக்கத்திற்கு மீறிய காலதாமதத்திற்கோ அல்லது எப்படி ஆறு விழுக்காடு உயர்வு ஏற்பட்டது என்பதற்கோ அது எவ்விதமான விளக்கமும் அளிக்கவும் முன்வர வில்லை. மேலும், தொகுதி  வாரியாகவும், மாநிலம் அல்லது அகில இந்திய அளவிலும் வாக்களித்தவர்க ளின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இந்த எண்ணிக்கை தேர்தல் ஆணையத்திடம் இருந் தால்தான், எத்தனை விழுக்காடு வாக்குகள் பதிவாகியி ருக்கின்றன என்பதைச் சரியாகக் கணித்திட முடியும். இதில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை வாக்களித்தவர்களின் சரியான எண்ணிக்கையைக் கொண்டுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இவ்வாறு அனைத்து தரவுகளையும் அளிக்காததற்கு எவ்வித மான விளக்கத்தையும் அளித்திட தேர்தல் ஆணை யம் முன்வரவில்லை.

கடமையை நிறைவேற்ற முடியாத  அவலம்

ஆட்சியாளர்களுக்கு அஞ்சிடும் அல்லது அவர்க ளை எதிர்த்துநிற்க முடியாது ‘வளைந்துகொடுக்கும்’ ஒரு தேர்தல் ஆணையத்தால், அரசமைப்புச்சட்டத் தின்கீழ்  தனக்கு வழங்கப்பட்டுள்ள “தேர்தல் கண்கா ணிப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாடு” என்னும் அரசமைப்புச்சட்டக் கடமைகளை ஒருபோதும் நிறை வேற்றிட முடியாது.     2019 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத் தில் தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா விற்கு ஏற்பட்ட நிலைமை, தற்போதைய ஆணையர்க ளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் என்பது தேர்தல்களை நியாயமா கவும் நேர்மையாகவும் நடத்திடும் ஒரு முக்கியமான நிறுவனமாகும். 

உச்சநீதிமன்றம் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்

இப்போதைய தேர்தல்கள் முடிவடைந்தபின்னர், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும், ஒருமைப் பாட்டையும் மீட்டெடுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியமான தாகும். அதில், முதல் கட்டமாக, திருத்த வேண்டியது 2023இல் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் குறித்தான சட்டமாகும். தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக வேறு நடைமுறையைப் பரிந்து ரைத்திருந்த உச்ச நீதிமன்றம், இதனை உறுதி செய்திட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டும்.


மே 8, 2024, 
தமிழில் : ச.வீரமணி





 

;