articles

img

இன்றும் என்றும் மார்க்சியமே நவீன தத்துவம்!-எஸ்.வி.வேணுகோபாலன்.

கட்சி அமைப்பில் நிறைய முடிவுகளை எடுத்துக் கொண்டே இருக்கிறீர்களே, இவையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக இருந்த தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட்டிடம்  ஒரு முறை கேட்கப்பட்டது. மார்க்சிய தத்துவ இயல்   அறிஞரான  இ எம் எஸ் அதற்குச் சொன்ன பதில் முக்கியமானது.  இந்த முடிவுகளைக் கட்சி உறுப்பினர்களது உணர்வுகளாக மாறினால் அவை நிச்சயம் நிறைவேறும் என்று அவர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி.

மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பில் ஞாயிறன்று (மே.5) மாமேதை மார்க்ஸ் பிறந்த நாள் தொடர்பாக நடைபெற்ற முழு நாள் பயிலரங்கில், ‘மார்க்சிய செல்நெறியில் இந்தியப் புரட்சி’ என்ற தலைப்பில் நிறை வுரை ஆற்றிய அவர், 1964இல் உருவாக்கப்பட்டு 2000ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சி திட்டத்தை உய்த்துணர வேண்டும் எனில் அதன் வடிவாக்கத்திற்கான மூலாதாரமான மார்க்சிய மூலவர்கள் கார்ல் மார்க்ஸ் - ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் இருவரும் வழங்கியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மீண்டும் மீண்டும் எடுத்து வாசித்து அறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புரட்சிக்கான 3 முக்கிய காரணிகள்
மக்கள் ஜனநாயக புரட்சியில் இணைய அறைகூவல் விடுத்து மக்களுக்கு வழங்கும் அழைப்பிதழ் தான் கட்சி திட்டம் என்று சொன்ன பத்ரி,  திட்டத்தை முன்னெடுக்க முன்னெப் போதையும்விட உகந்த காலச் சூழல்  என்று தான் கட்சி தலைமை எடுத்துரைக் கிறது என்றார்.  ஒரு நாட்டில் புரட்சியை  முன்னெடுக்க என்ன தேவை என்ற  ஒற்றைக் கேள்விக்கு மூன்று முக்கிய  காரணிகளை முன் வைத்தார் மாமேதை  லெனின், இனியும் ஆட்சி அதிகாரத் தில் காலம் தள்ள முடியாதென்ற நெருக்கடி ஆளும் வர்க்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும், இனியும் இவர் களை ஆட்சிப் பொறுப்பில் அனுமதிக்க  முடியாதென்ற கொந்தளிப்பு மக்களிடத்தே உருவாக வேண்டும். மூன்றாவதும் முக்கியமானதுமான அம்சம், அந்த எதிர்ப்பைப் புரட்சியாக வழிநடத்த புரட்சிகர கட்சி வேண்டும் என்று சொன்னதைச் சுட்டிக்காட்டிய அவர் (பத்ரி), கட்சி அமைப்பை அரசியல் தத்துவார்த்த வலுமிக்கதாக விளங்க வைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வியப்புக்குரிய பங்களிப்பு 
கார்ல் மார்க்ஸ் குறித்த திரைப்படக்  காட்சிப்படுத்தலோடு தொடங்கிய பயிலரங்கில் முதல் அமர்வில் இந்தியா  பற்றிய மார்க்ஸ் குறிப்புகளை அறிமு கப்படுத்தி உரையாற்றிய எழுத்தாள ரும் மொழிபெயர்ப்பாளருமான அப்பணசாமி, காலனிய ஆதிக்கச் சுரண்டல் குறித்து நுட்பமான பதிவு களை மார்க்ஸ் செய்துள்ளதை வாசித்தும் காட்டினார்.  பெரிய நவீன  தொழில் நுட்ப வசதிகள் அற்ற காலத்தில், பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதங்கள், ஆட்சியாளர்கள் பரிவர்த்தனை செய்துகொண்ட ஆவணங்கள், பத்திரிகை செய்திகள்  இவற்றின் ஊடாகக் கிடைத்த தரவு களைக் கொண்டே தக்க பார்வையில் நிலைமைகளை அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறார் என்று மார்க்சின் வியப்புக்குரிய பங்களிப்பை எடுத்துச் சொன்ன அவர், தெய்வங்களை முன்னிறுத்தும் மதங்களின் பிடியில் மக்கள் உழன்று கொண்டிருந்த சாதீயச் சூழல், அரசின் ஒடுக்குமுறை இவற்றையெல்லாம் அவதானித்து எழுதப்பட்டுள்ளதே அந்த குறிப்புகள் என்றார்.

பொய்களும், போலிக் கதைகளும்  எடுத்துப் போட்டு ஆட்டம் காட்டும் பாசிச  சக்திகளுக்கு எதிராகக் கருத்தியல் தளத்தில் நின்று மக்களுக்கு உண்மை களை எடுத்துச் சொல்ல வலுவான அடிப்படை தத்துவக் கல்வி அவசியம் என்று குறிப்பிட்ட அப்பணசாமி, புராண கட்டுக்கதைகளைப் புறந்தள்ளி சிந்து சமவெளி ஆய்வுகள் தொடங்கி கீழடி வரை உறுதிமிக்க தரவுகளையும், தீர்க்கமான வரலாறு களையும் முன்னெடுத்து வைக்கின்றன என்றார். கிறிஸ்துவுக்கு முந்தைய காலந்தொட்டு நிலவிய நகர நாகரிகம் வரையிலான சான்றாதாரங்கள் புதிய வெளிச்சம் காட்டுபவை என்றார்.

உன்னதமான சிந்தனையை  முன்னெடுத்தவர்கள்

‘நவீன தமிழ் சிந்தனை உலகில்  மார்க்சியம்’ எனும் தலைப்பிலான இரண்டாம் அமர்வில் உரையாற்றிய  பொன்னேரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் ஜெகஜீவன் ராம், மார்க்சிய சிந்தனைகளை தமிழ் சமூகத்திற்குக் கொடையளித்தவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூ னிஸ்ட் என்றழைக்கப்படும் ம.சிங்கார வேலர், அவரும் தந்தை பெரியாரும் அரசியல் தளத்தில் இந்த அரும்பணி களை முன்னெடுத்தவர்கள் என்று சொல்ல முடியும். பண்பாட்டுத் தளத்தில்  ஜீவா, தமிழ் ஒளி ஆற்றிய பங்கு மகத்தா னது என்றும் அவர் குறிப்பிட்டார்.  சமத்து வம் குறித்த உன்னத சிந்தனையை முன்னெடுத்தவர்கள் வரிசையில் முக்கியமானவர் மகாகவி பாரதி, அதற்கு முன்பாகவும் தமிழ் சமூகத்தில் இந்த சிந்தனை சங்க காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறது, ஆனால் அறிவியல் நோக்கில் சோசலிசம் எனும் புரட்சிகர தத்துவமாக அது வளர்த்தெடுக்கப்பட்ட காலம் என்பது சிங்காரவேலர் காலத்திலிருந்தே தொடங்குகிறது என்று கொள்ளலாம் என்றார்.

இன்றும் பொருத்தமான தத்துவம் 
காலனியாதிக்கத்தில் இந்தியா உழன்ற நிலைமைகளில் இருந்தே தனக்கு மூலதனம் குறித்த ஆராய்ச்சிக் கான சிந்தனை ஊற்றெடுத்ததாக மூலதன முதல் தொகுதியில் மார்க்ஸ்  குறிப்பிட்டிருப்பது உள்பட ஏராளமான இடங்களில் இந்தியா பற்றிய குறிப்புகளை மூலதனத்தில் பார்க்க முடியும் என்றார். சோவியத் தகர்வை அடுத்து உலகளாவிய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிர்வுகள், இந்தி யாவிலும் மார்க்சியத்தின் எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள், முடிந்ததே போனது என்று எழுதி வைக்கப்பட்ட அறிக்கைகளைத் தொட்டுக் காட்டிய அவர், நவீனம்  என்ற சொல்லின் முழுப் பொருளில் மார்க்சியமே இப்போதும் நவீனமா னது, பின் நவீனத்துவம் என்ற பெயரில் சொல்லப்பட்ட அனைத்தையும் தவிடுபொடியாக்கி இப்போதும் பொருத்தப்பாடு உள்ளதாகத் அது திகழ்கிறது என்றார்.

எது கை விளக்கு 
உழைப்பாளி மக்களை சமூக மாற்றத்திற்கான புரட்சிகர தத்துவம் நோக்கி அணிதிரள விடாது அடையாள  அரசியல் குறுக்கிடுகிறது, சாதீய பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான  குரலும், போராட்டங்களும் முழு  மொத்த விடுதலைக்கான போராட்டத் தின் முக்கிய அங்கம் பெறுபவை, ஆனால் தனித்து நின்று போராடுவது அல்ல என்று விளக்கிய ஜெகஜீவன் ராம், பகுதி பகுதியாகவும் பார்க்க வேண்டும்,  முழுமையான பார்வையும் முக்கியம், அப்போதுதான் அனைத்து வித சுரண்டலுமற்ற உன்னத சமூகத்திற்கான இலட்சிய பாதையின் பயணம் செம்மையாக நிறைவேறும் என்று சான்றுகளோடு விளக்கினார்.  அடிப்படை தத்துவார்த்த  நூல்களும், மார்க்சிய தத்துவமும் தான்  கை விளக்கு, அர்ப்பணிப்பு மிக்க களப்பணிக்கு ஈடாக வாசிப்பும் மிக  முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘சமகால முதலாளித்துவ சுரண்ட லுக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சியம்’ எனும் தலைப்பிலான மூன்றாவது அமர்வில் பெங்களூர் கிறிஸ்து பல்கலைக் கழக பேராசிரியர் வெங்கட் நாராயணன், 2010இல் தான் எழுதிய மார்க்ஸ் பிறந்த நாள் சிறப்புக் கவிதையை வாசித்துக் காட்டி  உற்சாகத்தோடு உரையைத் தொடங்கினார். நிலப்பிரபுத்துவ அமைப்பை வீழ்த்திப் புறப்பட்டு வந்த முதலாளித்துவம் அதனளவில் புரட்சிகர மாற்றத்தைக் கொணர்ந்தது, தாராளவாதம் (LIBERALISAM) எனும் கருத்தியல் போக்கை முன்னெடுத்தது, வெவ்வேறு காலகட்டங்களில் நெருக்கடியை சந்தித்து வந்தாலும் ஏகாதிபத்திய ஆதிக்கம் மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டி எப்படி முதலாளித்துவ அமைப்பைத் தக்க வைத்துக்கொள்கிறது என்பதை விளக்கினார்.

மாற்றுக்காண குரல்கள்
சந்தையை விரிவுபடுத்துவது, உழைப்பை மலிவான விலைக்கு வாங்கி லாபத்தை எப்படி பெருக்கிக் கொள்வது என்பது மார்க்ஸ் விளக்கிய  அதே அடிப்படையில் தான் இன்றும் தொடர்கிறது என்று சுட்டிக் காட்டிய வெங்கட் நாராயணன், அதற்கு ஏற்ப  வலுவான போராட்டங்களும் வெவ்வேறு வடிவங்களில் முன்வரு வதையும் எடுத்துக் கூறினார். 2018இல் வால் ஸ்ட்ரீட் முற்றுகை என்று 1 விழுக்காடு செல்வந்தர்களுக்கு எதிராக 99 விழுக்காடு சாதாரண மக்கள் என்று அமெரிக்காவில் வலுத்த  கிளர்ச்சியைக் குறிப்பிட்ட அவர், மாற்றுக்கான குரல்கள் தொடர்ந்து முன்னெழுந்தே தீரும்,  அதற்கான உந்துவிசையாக மார்க்சிய தத்துவம் தொடர்ந்து இயங்கும் என்று வரலாற்றுப்போக்கை  முன்வைத்து விளக்கினார்.

நான்கு அமர்வுகளிலும் முன்னெ ழுந்த கருத்துகள், கேள்விகளுக்குக் கருத்துரையாளர்கள் உரிய விளக்கங் கள் வழங்கினார்.  கார்ல் மார்க்ஸ் பிறந்த  நாள் முன்னிட்டுத் தத்துவப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருக்கும் பின்னணியை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா எடுத்துரைத்தார்.

நிகழ்வின் நிறைவில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன் நன்றி கூறினார்.

தொகுப்பு: 
எஸ்.வி.வேணுகோபாலன்.

;