articles

உழவையும் தொழிலையும் வஞ்சிக்கும் ஊதாரிக் கூட்டத்தை விரட்டுவோம்!- தஞ்சை கே. அபிமன்னன்

 

பொழுது புலரும் முன்
ஆலைக்குள் செல்லும் தொழிலாளி
அந்திப் பொழுது மறைந்த பின்
ஆலையை விட்டு வெளியேறும் அவலம்

கிள்ளும் பசியால் அழுது மயங்கிய
பிள்ளையை அள்ளி அரவணைக்கும்
தாய்க்கு நேர்ந்த கொடுமை அன்று
காலநேரக் கணக்கில்லாமல்
ஓய்வின்றி உறக்கமின்றி மனிதன்
அடிமை விலங்காய்
வாழ்க்கை சக்கரம் உருண்டது

அடிமை விலங்கொடிக்க - மாமேதை
மார்க்ஸின் வரிகள் அன்று
ஒளிக்கீற்றாய் வீசியது
உழைப்பைச் சுரண்டும் கூட்டம் அதிர
கோடிக்கரங்கள் கூடியது

உலகை அடக்கி ஆளும்
வல்லரசாம் அமெரிக்காவின்
சிக்காக்கோ வீதி சிவந்தது அன்று
ஒரு நாள் பொழுதின் மணித்துளிகளை

எட்டு எட்டாய்ப் பிரித்து அதில்
ஒன்றாம் எட்டு உழைப்பு
இரண்டாம் எட்டு ஓய்வு
மூன்றாம் எட்டு உறக்கம் என - உரக்க முழங்கியது
துப்பாக்கித் தோட்டக்களுக்கு சிந்திய
குருதியின் சாட்சியமாய் ஏற்றது
உலக முதலாளித்துவம் நொறுங்கியது
அடிமை விலங்கு அன்று
இந்தியத் திருநாட்டில் இந்துத்துவா ஆட்சியில்
வேலையில்லா திண்டாட்டம் நாட்டில்
நாளும் நாளும் நர்த்தனமாடுகிறது - பெற்ற
உரிமையை தொழிலாளி எங்கு பேணுவது?

தேசத்தின்  பொதுத்துறையையும்
கனிம வளத்தையும் இரண்டாய்ப் பிரித்து
அம்பானி - அதானி கார்ப்பரேட்டுகளுக்கு
அடமானம் வைத்த கூட்டம் - இந்தியாவை
ஓயாமாரியாக்கி ஒப்பாரி வைக்குது
உழவுக்கும் தொழிலுக்கும் வஞ்சனை செய்யும்
ஊதாரிக் கூட்டம் தொழிலாளர் தினத்தில்
காவடி தூக்கி ஹரேராம் பசனை பாடிடும்
கோடான கோடி இளைஞர்களுக்கு
இந்தியாவில் எதிர்காலம் உண்டு என
ஜோதிடம் சொல்லிடும் கூட்டத்தை
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி முச்சந்தியில் வைத்து
மொட்டை அடித்து விரட்டிட சபதம் ஏற்போம்.
- தஞ்சை கே. அபிமன்னன்

;