districts

அதிகார மமதையில் உடுமலைப்பேட்டை வனச்சரகர்

திருப்பூர், ஏப். 29 - தமிழ்நாடு அரசு அரசாணையை அம லாக்கிட போராடுகிற மலைவாழ் சங்க தலைவர்கள் மீது உடுமலைப்பேட்டை வனத்துறையினர் திட்டமிட்டு ஜோடித்து பொய் வழக்கு போடுவதையும், அப்பா விகளை கைது செய்து சிறையில் அடைப்பதையும் தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மது சூதனன், மலைவாழ் மக்கள் சங்க  மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன், மலை கமிட்டி உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.  

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதை  வசதி இல்லாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மலைவாழ் குடியிருப்பு களுக்கு பாதை வசதி கோரி 10 ஆண்டு களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

அதன் பின் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சு வார்த்தைக்குப்பின் 2006-ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி குறுமலைக்கு சாலை அமைப்பதற்கு கிராம சபா விலும், கோட்ட அளவிலான வன உரிமை குழுவிலும், மாவட்ட அள விலான வன உரிமை குழுவிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இத்தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசுக்கு சாலை வசதி செய்து தர பரிந்துரை செய்தார் கள்.

இந்த பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசாங்கம், அரசாணை நிலை எண்: 171-ன் படி 08/12/2023ல், ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. திருமூர்த்தி மலை முதல் குறுமலை வரை 3,150  மீட்டர் மண்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து ஆணை யிட்டுள்ளார்.

அதன்படி தளி பேரூராட்சியால் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, பூசாரிபட்டி எம்.எஸ். விநாயகர் & கோ ஒப்பந்ததாரர் என்பவருக்கு பணி ஆணை வழங்கப் பட்டுள்ளது.  இந்த ஆணையின்படி திருமூர்த்தி மலை முதல் குறுமலை வரை பாதை  அமைப்பதற்கான பணி நடந்து வந்தது.  இப்பணிகளில் இயந்திரங் களை பயன்படுத்த வனத் துறையினர் தடுத்து வந்தனர். ஆகவே மலைவாழ் மக்கள் ஏற்கனவே இருந்த கூப்பு ரோடுகளை செப்பனிட்டு பாதை அமைத்தும் வந்தனர். மேற்கண்ட பாதை அமைப்பதற்கான பணிகளை மலைவாழ் மக்கள் சங்கத் தலை வரும், தளி பேரூராட்சி துணைத் தலைவருமான செல்வன் பார்வை யிட்டு பணிகள் நடைபெற உதவி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் 18 அன்று அவர் மீது பொய் வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 24 அன்று காலை திருமூர்த்திநகர் சாம்பல் மேடு பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்ற தொழிலாளியை அவர் வீட்டிலிருந்து பிடித்து வந்து அவரை மிரட்டி மலையில் பாறைகளை உடைத்து இருப்பதாகவும், தளி பேரூராட்சி துணைத் தலைவர் செல்வன் தான் உடைக்கச் சொன்னார் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் உண்மைக்கு மாறாக பெற்று, அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.  மேலும் இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை வைத்து துணைத்தலைவர் செல்வன் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்கள் மீது 10க்கு மேற்பட்ட பிரிவுகளில் ஜோடிக்கப்பட்ட பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 தொடர்ந்து 27 ஆம் தேதி அன்று  காலையில் சாம்பல்மேடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் விஷ்ணு ராஜ் கைகளை கட்டி வனத்துறை அதி காரிகள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு 9/6, செக்போஸ்ட் அருகில் வனத்துறை சோதனை சாவடியில் வைத்து மிரட்டி, செல்வன் மீது வழக்கு போடுவதற்கு ஒப்புதல் வாக்குமூலம்  கேட்டு மிரட்டி  உள்ளனர். உடுமலைப்பேட்டை வனத்துறை யினர் மலைவாழ் மக்களின் மீதும், சங்க தலைவர்கள் மீதும் பொய் வழக்கு களை போடுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில்  அரசின் எவ்வித அனுமதி இன்றி ஆட்டு மலைக்கு மரங்களை வெட்டியும், பாறைகளை உடைத்தும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை வசதி செய்து கொடுத்துள்ளனர்.  மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் இந்த எட்டு கிலோமீட்டர் பாதையினை வனசரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் செய்துள்ளனர். உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக் குமார் என்பவர், தன்னுடன் இருக்கும் வனக் காவலர்களை வைத்துக் கொண்டு அப்பாவி மக்களை மிரட்டி  வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டு பொய்யான வழக்குகளை மலைவாழ் மக்கள் மீது போடுவதற்கான ஏற்பாடு களை தொடர்ச்சியாக செய்து வரு கின்றார்.

வறுமையின் விளிம்பில் உள்ள ஏழை, எளிய சாமானிய மலைவாழ் மக்கள் மீது அராஜக முறையில் வழக்கு போடுவதை நிறுத்திடவும், மேற்கண்ட சாலைப் பணிக்கு சென்ற நாகராஜை சிறையில் அடைத்தும், மற்றவர்களை சிறையில் அடைத்தும், சாம்பல் மேடு பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் மீது வழக்கு போட்டு கைது நடவடிக்கை எடுத்து கட்டிட தொழிலாளர்கள் மத்தியில், மலை வாழ் மக்கள் மீது கடுமையான கொந்த ளிப்பை ஏற்படுத்தி வருகிறார்.  இதனால் இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலையை மேற்கண்ட வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார் உருவாக்கி வருகிறார்.

 எனவே மேற்கண்ட வனத்துறை யினரின் சட்ட விரோத செயல்களை  தடுத்திடவும், பொய் வழக்குகளி லிருந்து மலைவாழ் மக்களை, சாமானிய மக்களை காத்திடுமாறும், தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்ச னையை உருவாக்க நினைக்கும் வனச்சரகர் சிவக்குமார் மீது உரிய துறை வாரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;