districts

img

தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தெக்கலூரில் 8 மாதங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தினர் போட்ட காங்கிரட் சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அவிநாசி ஒன்றியம், தெக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து விபிஜிஎப் திட்டத்தின் கீழ் 2022-23 வருடத்தில் காங்கிரட் சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, ஆர்எஸ்ஆர் கன்ஸ்ட்ரக்சன் சுகுமார் என்பவருக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் 8 மாதங்களுக்கு முன்பு காங்கிரட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இச்சாலை பல இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. அதேபோல, சாக்கடை கால்வாய் அமைக்காததால் கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதேபோல, சென்னிமலைபாளையத்தில் 9.96 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. அப்போதே அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகள் சாக்கடை கால்வாயில் விழாமல் இருக்க மூடி அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவரும் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார். ஆனால் சாக்கடை கால்வாய் மேலே மூடி அமைக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தரமற்ற முறையில் காங்கிரட் சாலை அமைத்துக் கொடுத்த ஊராட்சி நிர்வாகத்தின் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். மேலும் சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும். தெக்கலூர் ஊராட்சியில் சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதையும் சரி செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.

;