அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரிவிதிப்பு செய்த அமெரிக்கா, ரஷ்யா விடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததாகக் கூறி கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது.
ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு அமைந்துள்ளதாக அமெரிக்கா கூறி யுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடை யிலான மோதலை தொடர்ந்து ஊக்குவித்து வருவது அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும்தான்.
உலகம் முழுவதும் போர்ப் பதற்றத்தை நீடிக்கச் செய்வதன் மூலம் தன்னுடைய ஆயுத வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பதே அமெ ரிக்காவின் உத்தியாகும். இப்போது டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு வரிக் கொள்கையையும் உலக மக்களுக்கு எதிரான ஒரு போர்ப் பிரகடனமாக கையாளத் துவங்கி யுள்ளார்.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவின் அணி சேராக் கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவி, அமெரிக்க ஆதரவுக் கொள்கையை பின்பற்றத் துவங்கி யது ஒன்றிய அரசு. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா வுக்கு இணக்கமான அணுகுமுறையையே மோடி அரசு பின்பற்றுகிறது.
கருத்தியல்ரீதியாகவும், டொனால்டு டிரம்ப்பும், நரேந்திர மோடியும் தங்களை இணக்கமா னவர்களாக காட்டிக் கொள்கின்றனர். அமெ ரிக்காவின் பகிரங்க மிரட்டலுக்கு கூட உரிய பதிலடியை மோடி அரசு கொடுத்ததில்லை. இந்த பின்னணியில் காலம் கடந்த ஞானோதயமாக அமெரிக்காவின் மிரட்டலை எதிர்கொள்ள தயார் என்று மோடி அரசு கூறி வருகிறது. இப்போ தும் கூட டிரம்ப்பின் பெயரைக்கூறி பதில் தர பிரதமர் மோடி தயாராகயில்லை.
இந்தியா தன்னுடைய ஏற்றுமதிக்கு அமெரிக்காவை சார்ந்திருப்பதை கைவிட்டு பிற நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட சாத்தியங்களை அதிகப்படுத்த வேண்டும். உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும். இது இந்தியாவினுடைய சுயசார்பு பிரச்சனை மட்டுமல்ல, சுயமரியாதை பிரச்சனை யும் ஆகும். இந்த நிலையில் அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்புக்கெதிராக செப்.5ஆம் தேதி தமிழகம் முழுவதும் இடது சாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்திற்கு தேச பக்தர்கள் அனைவரும் ஆதரவளித்து அணி திரள வேண்டும்.