headlines

img

இன்னும் வலுவாக குரல் எழுப்புக!

மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை தங்களது எடுபிடிகளைப்போல எண்ணுகிறது. மத்திய, மாநில உறவுகள் பற்றிய பல்வேறு கமிஷன் களின் பரிந்துரைகளை சிறிதும் லட்சியம் செய்வ தில்லை. மாநிலங்கள் அதனதன் தனி சிறப்பி யல்புகளுடன் விளங்குவது ஆர்எஸ்எஸ்சின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போவதில்லை.

அதன் விளைவாகவே மத்திய அரசு ஆணை யிடுவது என்றும், மாநில அரசுகள் அவற்றை கடைப்பிடிப்பவை என்றும் மோடி அரசாங்கம் நினைக்கிறது. அதனால்தான் மாநில முதல்வர்க ளுடன் கலந்து ஆலோசிக்காமலேயே பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

கொரோனா மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் மத்திய நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டடார். ஆனால் அவை பல்வேறு மாநிலங்களாலும், பாராட்டும் விதத்தில் அமையவில்லை என்பதும், எதிர்ப்புக்குள்ளாகி யிருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பொதுவாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தமிழக அதிமுக அரசு கூட இந்த முறை தனது எதிர்ப்புக்குரலை கொஞ்சம் உரக்கவே பதிவு செய்திருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே ஒரு மித்த கருத்து எழுவதற்கு முன்பு ஒரு சீர்திருத்தத் திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு உகந்ததல்ல என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள சீர் திருத்தத் திட்டத்தை மாநிலங்களுடன் விரிவாக கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் கூறி யுள்ளார். அரசியல் சாசனத்தின் 293(3) ஆம் பிரிவு டன் மத்திய அரசின் அதிகாரத்தை இணைத்து கூடுதல் கடன் வாங்க மாநிலங்களுக்கு கட்டுப் பாடுகளை விதிப்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றும் தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட நிதியை இன்னமும் மத்திய அரசு வழங்கவில்லை. வழங்காதது மட்டுமல்ல, மாநில அரசு கடன் வாங்குவதற்கும் கடுமையான நிபந்த னைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள் ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கு வதை நிறுத்தினால்தான் கடன் வாங்கும் சத வீதத்தை அதிகரிப்போம் என்று கூறியிருப்பது தமிழக விவசாய பெருமக்களின் வாழ்வாதா ரத்தை, விவசாயத்தை பாதிக்கும். அதனால்தான் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது போன்ற திட்டங்களை அமல்படுத்துவதை மாநி லங்களின் அதிகாரத்திற்கு விட்டுவிட வேண்டு மென்று தமிழக முதல்வர் வலுவாகவே கூறி யுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மின்சார திருத்த சட்டத்தை தமிழகம் ஏற்காது என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவரது வழியில் இன்றைய தமிழக முதல்வரும் இந்தச் சட்டத்தை ஏற்காது என்று அறிவிக்க வேண்டும். அதுவே மாநில உரிமைகளை காப்பதற்கான வழியுமாகும். எனவே தமிழகத்தின் உரிமையை காப்பதற்காக மத்திய அரசிடம் தனது குரலை இன்னும் வலுவாக எழுப்பிட வேண்டும்.

;