india

img

பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் குறைவு – நடவடிக்கை எடுக்க கோரி SCBA தீர்மானம்

உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறதாகவும், அதனை உயர்ந்த கொலீஜியம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு,

“உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பதும், சமீபத்தில் நடைபெற்ற உச்சநீதிமன்ற நியமனங்களில் பெண் நீதிபதிகள் யாரும் பதவி உயர்வு பெறவில்லை என்பது கவலை அளிக்கிறது.

தற்போது, உத்தரகாண்ட், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. நாடு முழுவதும் சுமார் 1,100 உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில், சுமார் 670 ஆண் நீதிபதிகள் உள்ளனர். பெண் நீதிபதிகள் வெறும் 103 பேர் மட்டுமே உள்ளனர். மீதியிடங்கள் காலியாக உள்ளன.

2021 முதல் இதுவரை ஒரு பெண் நீதிபதி கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. தற்போது, நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டுமே உச்சநீதிமன்றத்தில் இருக்கும் ஒரே பெண் நீதிபதி.

இதற்கு முன், பெண்களுக்கு குறைந்தபட்சம் விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விகாஸ் சிங், கடந்த மே 24 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

நீதித்துறையில் நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு மட்டுமல்லாமல், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், நீதித்துறை கண்ணோட்டங்களை வளப்படுத்துவதற்கும், நீதியின் மிக உயர்ந்த நிறுவனத்தில் நமது சமூகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதற்கும், நீதிமன்ற அமர்வில் அதிக பாலின சமநிலை அவசியம் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உறுதியாக நம்புகிறது.

மேலும், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி SCBA தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.