tamilnadu

img

காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்றுக! டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ரகுபதி, தனக்கு சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது. விசாரணையின் போது, காவலர்களுக்கு வீடுஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட வர்களும் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், ஒதுக்கீடு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.


ஆனால், இந்தக் குற்றச் சாட்டுகளை டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார். உரியவிதிமுறைகளைப் பின்பற்றியே வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும், சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு நடப்பதாகவும் தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விதிகளை மீறி வேண்டப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி, வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு வாரங்களில் இணையதளம் உருவாக்கி, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டார்.


மேலும், குடியிருப்பு களில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அடையாளம் காணும் வகையில் உயரதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த அதிகாரிகள் குழு ஆய்வில் சட்டவிரோதமாகக் குடியிருப்போர் பற்றி தெரியவந்தால், 60 நாட்களில் குடியிருப்பை காலி செய்ய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்ய மறுத்தால் அவர்களை அப்புறப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.சட்டவிரோதமாகக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு எதிராக புகார்கள் வந்தால், அவற்றின் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விதிமீறலில் ஈடுபடு வோருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

;