tamilnadu

img

இரு மொழி கொள்கை தொடரும்.... ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவிப்பு...

சென்னை:
நிவர், புரெவி புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.5,324 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.2) அன்று கூடியது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கின்மூன்றாவது தளத்தில் கூட்டம் நடைபெற்றது.ஆளுநரை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், பேரவைத் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். 57 பக்கங்களை கொண்ட புத்தகத்தை காலை 11 மணிக்கு  தொடங்கி ஒரு மணி நேரம் வாசித்தார் ஆளுநர்.அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் ப. தனபால் தமிழில் மொழிப் பெயர்த்தார்.

ஆளுநர் பன்வாரிலால் தனது உரையில், “அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்கியதில் 435 மாணவர்கள் பயனடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிதியை விரைந்து வழங்க மத்திய அரசைவலியுறுத்துவோம் என்றும்  கூறினார்.கோவிட்-19 ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடிபெயர் தொழிலாளர்களுக்கு இலவசஉணவு, தங்குமிடம் வழங்கப் பட்டுள்ளது. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் இலவச ரயில் மூலம் சொந்தமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர பேருந்து போக்குவரத்தை இயக்குவதில் தீவிரக் கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போதுதான் போக்குவரத்து இயக்கம் இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பி வருகின்றன. தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்குப் பாராட்டு தெரிவித்த ஆளுநர், தமிழ்நாட்டில் மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் விளைவுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. எனவே, இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

ஐந்து உட்கூறுகள் அடங்கிய மூத்த குடிமக்களுக்கான மாநிலச் செயல்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.  

;