tamilnadu

img

தந்தை பெரியார் ஓர் உலகக் குடிமகன் - ச.வீரமணி

1879 செப்டம்பர் 17 அன்று  ஈரோட்டில் பிறந்த, தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24 அன்று சென்னையில் உயிர்நீத்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள். அதாவது 34 ஆயிரத்து 433 நாட்கள். இப்போதிருப்பது போல வசதியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே சுமார் 8600 நாட்கள் சுற்றுப்பயணத்திலேயே செலவு செய்தார். சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். அந்தப் பயணத்தில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பத்தா யிரத்து எழுநூறு ஆகும். அவற்றில் அவர் கருத்துரைகள் ஆற்றிய நேரம் சுமார் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும்.  இந்தச் சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்து,  அது ஒலிபரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டி ருக்கும். இவருக்கு முன்னர் வேறெந்தத் தத்துவ ஞானியும் இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களிடையே சொற்பொழிவு ஆற்றியதில்லை எனலாம். அதனால்தான் யுனெஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் உள்ள கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு மன்றம், ‘‘பெரியார் புதிய உலகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை! அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று 1970 ஜூன் 27 அன்று பட்டயம் வழங்கியது. 

‘‘மனிதன் எவனும் தானாகவே பிறக்கவில்லை, ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மனித வாழ்க்கை என்பது மக்கள் சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதே யாகும். தொண்டு செய்யாத மனித வாழ்வு என்பது மிருக வாழ்க்கைக்குச் சமமானதேயாகும்’’ என்று அறுதியிட்டு உறுதிபடக் கூறினார். தமிழ் மக்களிடையே சுயமரியாதை உணர்வுகளை விதைக்க வேண்டும், சுயமரியாதை உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்தில் ஈ.வெ.ரா. ‘குடிஅரசு’ என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கி னார். இவரது அச்சகத்துக்கு, ‘உண்மை விளக்க அச்சகம்’ எனப் பெயரிட்டார். ‘‘மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்து வமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு - தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்’’ என்ற நோக்கங்களை குடிஅரசு அடிப்ப டையாகக் கொண்டிருந்தது.

பெரியார் துவக்கி வைத்த சுயமரியாதை இயக்கம் சொல்வது என்ன? சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு - தாழ்வும் இருக்கக் கூடாது. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருத்தல் வேண்டும். மக்கள் சமூகத்தில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். மனித சமூகத்தில் சாதி - மதம் - தேசம் - வருணம் - கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமையே நிலவ வேண்டும். உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கு, சகல மனிதர்களும் பாடுபட்டு அவற்றின் பயனைச் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எவற்றுக் கும் எவ்விதத்துக்கும் அடிமையாகாமல் அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரம் இருக்க வேண்டும். பெரியாரின் இந்தக் கொள்கைகளே அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டத்து க்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அடிப்படையாகும்.

சுயமரியாதை இயக்கத்திற்காக தந்தை பெரியார், ‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். ரிவோல்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குக் கட்டுப்பாட்டைத் தகர்த்தல் என்று பொருள். மனித இயற்கைக்கும் அறி வுக்கும் முரணான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதும் உலகமும் அதன் இன்பமும் எல்லாருக்கும் பொது என்பதும் அதன் நோக்கங்களாக இருந்தன. மக்கள் யாவரும் சமம் என்ற கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே இப்பத்திரிகையின் நோக்கம் என்று பெரியார் பிரகடனம் செய்தார்.குடியரசு இதழை ஆங்கிலே யர் ஆட்சி 1933ஆம் ஆண்டில் தடை செய்தது. அப்போது அதற்கு மாற்றாக நவம்பர் 20ஆம் நாளன்று ‘புரட்சி’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கினார். 

அதன் முதல் இதழில் பெரியார், ‘‘குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியில் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாய் புரட்சி தோன்றி யேதான் ஆகவேண்டும். அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றி யிருப்பதால், புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் புரட்சியை வரவேற்பார்கள். பாடுபட்டு ஊரானுக்குப் போட்டு விட்டுப் பட்டினியாகவும், சமூக வாழ்வில் தாழ்மையாகவும் வாழும் மக்களின் ஆதரவையே ‘புரட்சி’ எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலா ளிகளைக் காக்கும் வேலைக்காக இன்று ‘புரட்சி’ வெளி வரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை. அதுபோ லவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றவில்லை. ‘சகல முதலாளி வர்க்கமும், சகல சமயங்களும் அடியோடு அழிந்து மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் - பெண் அடங்கலும் சர்வ சமத்துவ மாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ‘புரட்சி’ ஏடும் நிறுத்தப்பட்டு, ‘பகுத்தறிவு’ வார ஏட்டைத் துவக்கினார். இதன் முதல் இதழில், ‘‘மனித சமூ கத்தால் மவுடீகத்தால் ஏற்பட்ட துரபிமானங்களை கடவுள், சாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமா னங்களை அறவே ஒழித்து, மனித சமூக ஜீவாபிமானத்தை யும், ஒற்றுமையையும், பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும், ‘பகுத்தறிவு’ மனித ஜீவாபிமானத்திற்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும், மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது’’ என்றும் பெரியார் குறிப்பிட்டிருந்தார். 

பின்னர், 1935ஆம் ஆண்டு ஜூன் முதல்நாள் ‘விடுதலை’ தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இவ்விதழின் முதல் இதழில் பெரியார், ‘இப்பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும், பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலகமக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மேம்பாட்டிற்காகப் பல்வேறு இதழ்களையும், இயக்கங்க ளையும் கண்டவர் தந்தை பெரியார். 

ஓர் உன்னத மனிதாபிமானியாக, ஓர் உன்னத உலகக் குடிமகனாக மாபெரும் புரட்சியாளராக வாழ்ந்திட்ட தந்தை பெரியார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டும் அல்ல, உலகமே என்றென்றும் நினைவு கூரும்.

;