tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நசுக்கப்படும் மக்களின் வாழ்க்கை

நாட்டில் கடந்த 11 நாட்களாக - ஜூன் 7 முதல் 17 வரை - பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் நாள்தோறும் தொடர்ந்து ஏற்றப்பட்டிருக்கின்றன. இவ்விலை உயர்வுகளின்மூலம் பெட்ரோல் சில்லரை விலை லிட்டருக்கு 6 ரூபாய் 02 காசுகளும், டீசல்  6 ரூபாய் 40 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்க, எண்ணெய் நிறுவனங்களினால் நாள்தோறும் உயர்த்தப்பட்ட இந்த விலை உயர்வுகள், நாட்டில் பொருளாதார நிலைமை மிகவும் சுருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், வேலை யில்லாத் திண்டாட்டம் மற்றும் வருமானங்கள் இழப்பு, வாழ்வாதாரங்கள் இழப்பு முதலானவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டு, மக்களிடம் தேவைகள் மிகவும் சுருங்கியுள்ள நிலையில், வந்திருக்கிறது.

பெட்ரோலையும், டீசலையும் விலை அதிகமானதாக மாற்ற வேண்டும் என்கிற மோடி அரசாங்கத்தின் கொள்கை, உண்மையில் மக்களுக்குப் பணம் அத்தியா வசியமாகத் தேவைப்படும் சமயத்தில், அவர்களின் கைகளிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. தான் தோன்றித்தனமாக மனம்போனபோக்கில் மோடி அரசாங்கம்  பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதில் தலையிட்டிருப்பது, அது எப்படி கொரோனா வைரஸ் தொற்றிலும், சமூக முடக்கத்திலும் தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டதோ, அதே எதேச்சதிகாரத் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

மத்திய அரசாங்கம், மே 5 அன்று பெட்ரோலியப் பொருட்களின் மத்திய கலால் மற்றும் இதர வரிகளை மிக அதிகமான அளவில் உயர்த்திடத் தீர்மானித்தது. பெட்ரோலுக்கு, லிட்டருக்கு 10 ரூபாயாகவும், டீசலுக்கு 13 ரூபாயாகவும் வரியை உயர்த்தியது. இதில் பெரும்பகுதி அளவு, சாலை வரியில் உயர்வு (increase in road cess) என்கிற வடிவத்தில் அமைந்திருந்தது. முன்னதாக, மார்ச் 14 அன்று, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 3 ரூபாயும், டீசலுக்கு  3 ரூபாயும் கலால் வரி மற்றும் சாலை வரி என உயர்த்தப்பட்டிருந்தது. இந்த உயர்வுகள் அனைத்தும் சேர்ந்து, மத்திய அரசுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாயைத் திரட்டிக் கொடுத்தது. இப்போது இந்த அரசாங்கம் இரண்டாவது முறையாக கலால் வரி மற்றும் இதர வரிகளில் உயர்வினை ஏற்படுத்தி இருப்பதன் மூலம், அரசாங்கம் பெட்ரோல் விலை யின் அடிப்படை விலையில் 260 சதவீதம் வரி விதித்தும், டீசலின் அடிப்படை விலையில் 256 சதவீதம் வரி விதித்தும் மக்களிடமிருந்து பணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலைகள் மிகவும் குறைந்துள்ள சமயத்தில்தான், மத்திய அரசாங்கம் இவ்வாறு, வரிகளை உயர்த்தி இருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல்,  ஏப்ரலில் 20 டாலர் அளவுக்கு இறங்கியிருந்தது, மே மாதத்தின் முற்பகுதியில் 28 அமெரிக்க டாலர் அளவிற்கு மாறியிருந்தது.  விலை குறைந்ததன் பயன் மக்களுக்குச் சென்று அடையாது தடுக்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசாங்கம், வரிகளை உயர்த்தி இருக்கிறது.

இந்த சமயத்தில், மத்திய அரசு, தன் கைத்திறனை இப்படிக் காட்டியிருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தாலும், அதன் பலனை மக்களிடம் கொண்டுசெல்வதற்குப் பதிலாக, எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும், அதனைத் தடுப்பதற்காகவே இவ்வாறு வரி உயர்வு செய்திருப்பதாகவும் கூறுகிறது. சமூக முடக்கம் ஜூன் மாதத்தில் விலக்கிக்கொள்ளப்பட்ட அந்தக் கணமே, கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துகொண்டிருப்பதாகக் கூறி, நாள்தோறும் எண்ணெய் விலைகளை ஏற்றுவதும் தொடங்கிவிட்டன. இப்போது, நம் நாட்டில் எரிபொருள்களின் விலைகள் 2018 அக்டோபரிலிருந்து உச்சத்தில் இருக்கின்றன. அந்த சமயத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை சராசரியாக பேரலுக்கு 80 அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது அது பேரலுக்கு 35 இலிருந்து 36 டாலராக இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் எண்ணெய் விலைகளிலிருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய அரசின் கொள்கையைக் கேலிக் கூத்தாக்கி இருக்கிறது.

உலக எண்ணெய் விலைகள் மிகவும் குறைந்துள்ள பொழுது, அதன் பயன்களை மக்களுக்கு அளிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம், மேலும் மேலும் வரிகளை உயர்த்திடும் வேலையில் இறங்கியிருக்கிறது. எரிபொருள்க ளின் விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருப்பது, மக்கள் செலவிடும் பணத்தின் அளவையும் குறைப்பதற்கு இட்டுச் செல்லும். சாலை வரி உயர்வு மற்றும் சிறப்பு கலால் வரி முதலான வற்றிலிருந்து மாநில அரசாங்கங்களுக்கு எவ்விதப் பங்கும் கிடையாது. மாநில அரசாங்கங்கள் தங்களுக்குப் போதிய நிதியின்றி திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில்தான் இவ்வாறு வரி உயர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சில மாநில அரசாங்கங்கள், பெட்ரோல் மற்றும் டீசல்களின் மீது தங்கள் மதிப்புக்கூட்டுவரியை (VAT)யும், இதர வரிகளையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றன. இதுவும் சேர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களின்மீது மேலும் சுமைகளை ஏற்றிடும்.

மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊக்குவிப்பு நிதித்தொகுப்பு வெறுமையான ஒன்றே என்பதும், இதனால் மக்களின் கைகளுக்குக் கணிசமான அளவிற்குப் பணம் எதுவும் வந்து சேரப்போவதில்லை என்பதும் அவர்களின் தேவைகளை ஊக்குவிக்கப் போவதில்லை என்பதும் நிரூபணமாகி இருக்கிறது. மத்திய அரசு,  சர்வதேச நிதி மூலதனத்திற்குப் பாதகம் ஏற்படும் விதத்தில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்னும் கொள்கையைப் பிடிவாதமாகப் பின்பற்றுவதால், மக்கள் கைகளில் பணப்புழக்கம் ஏற்படும் விதத்தில் மாற்றுக் கொள்கை எதுவும் இல்லாத நிலையில் இத்தகைய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வுகள், மக்கள் மீது நாசகரமான முறையில் சுமைகளை ஏற்படுத்திடும்.

எரிபொருள்களின் விலை உயர்வு, பொதுவாக, பண்டங்களின் விலை உயர்வுகளுக்கும் இட்டுச் செல்லும். டிரக்குகள் மற்றும் லாரிகளில் எடுத்துச்செல்லப்படும் பொருள்களின் விலைகள் உயரும். விவசாயிகள், தாங்கள் வாங்க வேண்டிய இடுபொருட்களின் விலை உயர்வு களால் தங்கள் வருமானத்தில் மேலும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளில் உள்ளவர்களும் தங்கள் பொரு ளாதாரத்தைப் புதுப்பிப்பதில் சிரமத்திற்கு ஆளாகி, கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். பொதுப் போக்குவரத்துக் கட்ட ணங்களும் உயரும். எரிபொருளின் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்தாலே, ஓர் ஆட்டோ ஓட்டுநர் தன் ஒருநாள் வருமானத்தில் 30 முதல் 40 ரூபாய் வரை இழக்கிறார்.

மத்திய அரசாங்கம், தனக்கு வரவேண்டிய வருவாயில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடிய சமயத்தில், தன் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காக, இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கையானது பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதைப் பலவீனப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக, அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருவாய்கள் புதுப்பிக்கப் படுவதற்கும் இடையூறாக அமைந்திடும். இந்த அரசாங்கம்,  தன்னுடைய வருவாயை உடனடியாக மேம்படுத்திட விரும்பி னால், அது பெரும் பணக்காரர்கள் மீது 2 சதவீதம் செல்வ வரியும்,  அவர்கள் வம்சாவழியாகப் பெறுகின்ற செல்வத்தின் மீது 33 சதவீதம் வாரிசுரிமை வரியும் (inheritance tax) விதித்திட வேண்டும்.  மக்களிடமிருந்து பணத்தைப் பறித்திடாமல் வருவாயைப் பெருக்குவதற்கு இது நன்கு வகை செய்திடும்.

மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக அவசியமான மற்றும் உடனடியான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று வரவிருக்கும் காலங்களில் நடத்த இருக்கும் போராட்டத்தில், பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி மற்றும் இதர பல வரிகள் உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கியமான இடத்தை வகித்திட வேண்டும்.

(ஜூன் 17, 2020), 
தமிழில் : ச.வீரமணி

 

;