tamilnadu

img

லால்குடியில் விவசாயத் தொழிலாளர்கள் தொடர் கூலிப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாவட்டம் லால்குடி நகர் கிராமத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிசுமார் 1000 ஏக்கரில் நெல் சாகுபடி துவங்கியுள்ளது. 500க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பங்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாய தொழிலாளர்களுக்கு நடவு வேலை, மற்றும் தினக்கூலி 4 வருட காலமாக உயர்த்தப்படவில்லை. இது குறித்து நகர்கிராமத்தின் விவசாயிகளிடமும், ஊராட்சிதலைவரிடமும் அஇவிதொச கிளை நிர்வாகிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் முறையிட்டனர். கூலி உயர்வு வழங்குவது குறித்து விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

ஆகவே கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விவசாய வேலைகளுக்குகூலி உயர்வு வழங்க கோரி ஜூன் 27 முதல் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நாற்றைப் பறித்து நடவு செய்யும் பணிக்கு ரூ2200 கூலியாக தற்போது வழங்கப்படுகிறது. இதை உயர்த்திநடவு பணிகளுக்கு சாதா நடவுக்கு ரூ.3000ம்கயிறு போட்டு நடவு செய்யும் வேலைக்கு ரூ.3500ம் ஒற்றை நாற்று (வரிசை) நடவு பணிக்குரூ.4000ம் ஏக்கர் ஒன்றுக்கு வழங்கக் கோரியும் களை எடுத்தல், எள்ளு, உளுந்து, பயறு அறுவடை செய்தல் பணிகளுக்கு தற்போது ரூ.120/ கூலி வழங்கப்படுவதை உயர்த்தி தினக்கூலி ரூ.200 வழங்க கோரியும் ஆண்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ 300 உயர்த்தி தினக்கூலி ரூ.400ம் வழங்கவும் வலியுறுத்திதொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் லால்குடி கோட்டாட்சியரையும், லால்குடி வருவாய் வட்டாட்சியரையும் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வை அமலாக்க வேண்டும் என்று கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன.அப்போது மிராசுதார்கள் எந்திரங்களையும் வெளியூர் ஆட்களையும் வைத்து சாகுபடிசெய்ய முயற்சிப்பதை தடை செய்ய வேண்டும்என்றும் கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திநடத்தப்படும் தொடர் போராட்டத்தையொட்டி வரும் 3 -ந் தேதி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திட அறி
விப்பு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் புதனன்று காலை நகர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வாளாடி பகுதி வரி ஆய்வாளர் , கிராமநிர்வாக அலுவலர் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆகவே இதனை கண்டித்து விஏஓ அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதற்கு மத்தியில் வெளியூர் ஆட்களை கொண்டு நடவு செய்யும் நடவடிக்கையில் மிராசுதார்கள் ஈடுபட்டனர்.விவசாய தொழிலாளர்கள் ஒன்று திரண்டுவயலுக்கு சென்று போராட்டத்தின் நியாயத்தைவிளக்கி அவர்களை வேலை செய்யாமல் அனுப்பி வைத்தார்கள். பதட்டமான சூழலில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையானது. தொடர் போராட்டம்நடைபெற்று வருகிறது. 

போராட்ட இயக்கங்களில் விதொச மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், சிபிஐ எம் ஒன்றிய செயலாளர் சி.ஜெகதீசன், சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் எம்.கே.தங்கராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.நாகராஜ், விதொச கிளை நிர்வாகிகள் ஜோதிவேல், கோவிந்தராஜ், கதிர்வேல், நீலமேகம் அங்குபொண்ணு, கலாராணி, மஞ்சுளா, லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

;