tamilnadu

img

“பாலியல் வன்கொடுமையும் பாரதப் பண்பாடும்?” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடந்தகால நிகழ்வு கள்; சாட்சியங்கள்; நேர்காணல்கள்; இவற்றை ஒருங்கி ணைத்து, காட்சிப்பதிவுகளாக மாற்றுவதே ஆவண சினிமா. பெரும்பாலான இப்படிப்பட்ட படங்கள், கடந்த காலத்தையே சொல்லும்.  ஆனால், நிகழ்கால சம்பவத்தை, குரூரமான உண்மையை, புதிய பாணியில் (Non-fiction storytelling), திரைப்படத்திற்கு இணையான படைப்பாக உருவாகி, வெளி வந்துள்ளது, “To Kill a Tiger”என்ற ஆவணப் படம். ஆணாதிக்கச் சிந்தனை வேரூன்றியுள்ள இந்தியாவின், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிறு கிராமத்தில்,பதின்மூன்று வயது சிறுமி  கிரண்,மூன்று காமவெறி பிடித்த இளைஞர்களால், கும்பல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.ஒட்டு மொத்த கிராமமே,பாலியல் வன்கொடுமை செய்த மூவரின் இழிசெயலை நியாயப்படுத்துகிறது. கிரணின் தந்தை ரஞ்ஜித், தாய் ஜகந்தி,உடன்பிறந்த இளைய சகோதர,சகோதரி ஆகியோர் மட்டுமே கிரணுக்கு ஆதரவாக நிற்கின்ற னர்.ஆறுதலாக,நகரில் உள்ள தொண்டு நிறுவனமும் உதவிக்கரம் நீட்டுகிறது.

தந்தை ரஞ்ஜித், தொண்டு நிறுவன உதவியோடு காவல் நிலை யத்தில் புகாரளிக்கிறார். ஊரே எதிர்க்கிறது.வன்கொடுமை செய்த மூவரில் ஒருவரை கிரணுக்கு திருமணம் செய்து,புகாரை வாபஸ் பெற்று, பிரச்சனையை தீர்க்க ரஞ்ஜித்தை வலியுறுத்துகிறது ஊர். இதனை தைரியமாக நிராகரிக்கிறார் ரஞ்ஜித். கொலை மிரட்டல் வருகிறது. தொண்டு நிறுவனத்தினர் பக்க பலமாக நிற்கின்றனர்.  வழக்கு விசாரணை ஆரம்பிக்கிறது.குற்றவாளிகள் மூவரும் குற்றத்தை மறுக்கின்றனர். கிராமக் கவுன்சிலர் வேண்டா வெறுப்பாக  சாட்சியளிக்கிறார். விசாரணை அலுவலரான காவல் ஆய்வாளர் முறையாக சாட்சி அளிக்காமல் நழுவுகிறார். இத்தகைய சூழலில், கிர ணுக்கு தைரியமளித்து, நடந்ததை நீதிமன்றத்தில் எடுத்துக் கூற, தொடர் பயிற்சி அளிக்கிறார் தந்தை. நேர்மையான அரசு வழக்கறிஞரின் வழிகாட்டலோடு, கிரண் நீதிமன்றத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை விளக்குகிறார். உறவினர் வீட்டுத் திருமணத்தில் இரவில் தோழிகளோடு நடன மாடிக் கொண்டிருக்கையில், மூன்று காமுகர்கள்,தன்னை பலவந்த மாக இழுத்துச் சென்று, ஆற்றோர மரத்தடியில் ஒருவர் பின் ஒரு வராக வன்கொடுமை செய்ததை நீதிபதியிடம் தைரியமாக எடுத்து ரைக்கிறார். மூவருக்கும் போக்ஸோ சட்டப் பிரிவில், 25வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.

“புலியை தனியாளாக கொல்ல முடியாது என ஊர் மக்கள் கூறினர்.என்னால் கொல்ல முடியும் எனக் கூறினேன்.தற்போது கொன்று விட்டேன்”என்று ஆணாதிக்க அகந்தையை புலியோடு உருவகப்படுத்தி, ரஞ்ஜித் சந்தோச திளைப்பில் கூறுவதோடு படம் நிறைவடைகிறது. படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், 2017 ஏப்ரல், 9 ஆம் தேதி இந்தக் கொடுமை நடக்கிறது. இதன் பின்னர், நீதி கிடைக்கும் வரை  படக்குழுவினர் கேமராவோடு ரஞ்ஜித் குடும்பத்தை பின்தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளனர். ஒரு சமயம் கிராமத்தில் உள்ள பிற்போக்காளர்கள் திரண்டு, கோப வெறியோடு ரஞ்ஜித் வீட்டை முற்றுகையிடுகின்றனர். பட மெடுத்துகொண்டிருக்கும் கேமரா உள்ளிட்ட இதர சாதனங்களை அணைத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேற படக்குழுவினரை மிரட்டு கிறார்கள். கேமராவும் அணைக்கப்படுகிறது. சிறிது நேரம் இருட்டு. வெறிக்கூட்டத்தின் கூச்சல் மட்டும் கேட்கும்.... படமெடுக்கும் குழு வினரை தாக்கி விடுவார்களோ? என்ற அச்சம், இந்தக் காட்சியில் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. கிரண், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதை படமெடுக்க அனுமதி இல்லாததால்; கிரண் அளிக்கும் வாக்குமூலக் குரலின் பின்னணியில், முதலில் இருட்டையும்; பின்,கரும் மேகங்கள் திரள்வதையும் காட்சிப்படுத்துவார்கள். இருட்டிலிருக்கும் நீதி, பேரொளியாக வெளி வர ஏங்கும் பார்வையாளர்களுக்கு; மழை போல் நியாயம் வார்க்கப்படும் என்பதன் குறியீடாக, இந்த இரண்டு  காட்சிகள் அமைந்துள்ளன.

நீதி கிடைக்கும் வரை சிகப்பு நிற ரிப்பனை தனது தலைமுடி யில் பின்னியிருக்கும் கிரண், நீதி கிடைத்தபின் மகிழ்ச்சியில் வெள்ளை நிற ரிப்பனை தானும் பின்னி,தனது தங்கைக்கும் பின்னி  விடுவாள். இதில் தனக்கு நேர்ந்த வன்கொடுமையை உலகுக்கு வெளிப்படுத்திய கிரணின் மனத்துணிவை, வெள்ளைநிற ரிப்பன் வடிவில் படிமமாகக் காட்டியுள்ளனர். ஏழு வருடங்கள் ஜார்க்கண்ட் கிராமத்தில் பயணித்து, பல இன்னல்களுக்கிடையே, கனடா நாட்டு இந்தியரான நிஷா பஹீஜா இப்படத்தை அனைவரும் பாராட்டும் வகையில் இயக்கியுள்ளார். ரஞ்ஜித் குடும்பத்தினர், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நெஞ்சில் சுமந்துகொண்டே, சோகத்தோடு கேமரா முன் இயல்பாகத்  தோன்றி,அவர்களது தினசரி போராட்ட வாழ்க்கையை நகர்த்து கின்றனர். இது, ஓர் உண்மைச் சம்பவம் நம்முன் நடந்து கொண்டி ருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தி,புதிய திரையனுபவத்தை தருகிறது. தேவ கஸலா மற்றும் மைக் முன் பங்களிப்பில் தேர்ந்த படத்  தொகுப்பு. சிறப்பான ஒளிப்பதிவு. இசை சொல்லும்படி இல்லை.

96 ஆவது அகாடமி விருது போட்டியில் சிறந்த ஆவணப் படத்துக்  கான விருது பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் உக்ரைன் போர் தொடர்பான “20 Days in Mariupol”என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை பெற்று,நமது இந்தியக் கனவு,ஆஸ்கர் அரசியலால் சீர்குலைக்கப்பட்டுள்ளது. படத்தயாரிப்பாளர்கள் பலதரப்பட்ட இந்திய பெண்ணுரிமைப் போராளிகளுடன் தீர்க்கமாக ஆலோசித்து; அதன் பின்னரே, கிரணுக்கு நேர்ந்த வன்கொடுமையை அவர் மூலமாகவே வெளி யுலகுக்கு கொண்டு வந்துள்ளனர். பெண்களுக்கு நடக்கும் 90 சதவீத  வன்கொடுமைகள் வெளியே வருவதில்லை. ஆனால் கிரணின் போராட்ட வெற்றி, ஜார்க்கண்டில் பாதிக்கப் பட்ட பெண்கள்,காமுக கயவாளிகளை திருமணம் செய்யாமல், அவர்களைத் தண்டிப்பதற்கு, நீதிமன்றப் படிக்கட்டுகளை நாடு வதற்கான துணிவைத் தந்துள்ளதென, படத்தின் இறுதியில் காட்டப்படும் செய்திகள் கூறுகின்றன. உலகின் பல நாடுகளிலுள்ள திரையரங்குகளில்,கதைப்படங்கள் போல், இந்த ஆவணப்படமும் ஓடுகிறது. இதனை நெட்பிளிக்ஸ் ஒடிடி  தளத்தில் தமிழில் காணலாம்.

;