tamilnadu

img

ஏழைகளை உறிஞ்சி குவிக்கப்பட்ட செல்வத்தை மறு விநியோகம் செய்ய உரத்த குரல் எழுப்புவோம்! - க.கனகராஜ்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முன்வைத்து, அந்தக் கட்சி சொல்லாத ஒன்றை உள்நோக்கத்தோடு நரேந்திரமோடி பேசி வருகிறார். இந்துக்களின் சொத்து, பணம், வெள்ளி, தங்கம் மற்றும் தாலிகளைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று கூறி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதே மோடியின் எண்ணம். ஆனால், அது நிறைவேறவில்லை.

இது ஒருபுறமிருக்க, ‘மறு விநியோகம்’ குறித்து முன்வைக்கப்படும் வாதங்களை சங் பரிவாரமும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆதரவாளர்களும் நிபுணர்களும் அணுகும் விதம் அபத்தமாக உள்ளது. உண்மையில், நாட்டின் செல்வ வளங்கள், குறிப்பாக பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள செல்வ வளங்கள், பெருவாரியாக உள்ள அனைத்து தரப்பு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மறு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதையும்; அந்த மறு விநியோகத்திலுள்ள - ஏழைகளுக்குப் பாதகமான கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான காட்டுமிராண்டித்தனம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் எந்த நாகரீக மனிதரும் ஏற்றுக்கொள்வார். ஆனால், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ -அந்நிய மூலதனத்திற்கு ஆதரவு அளித்து வரும் சங்பரிவார் கும்பல் மிகுந்த பதற்றத்தோடு இந்தப் பிரச்சனையை அணுகுகிறது. அதன் காரணமாகவே ஒரே நாளில் அனைவரிடமும் உள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்து அதை சமமாகப் பங்குவைத்துவிடுவார்கள் என்று பீதியைக் கிளப்புகிறார்கள். உண்மையில், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு வருமானங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனித்தாலே செல்வ வளங்கள் விநியோகத்திலும் மறு விநியோகத்திலும் உள்ள மிக மோசமான ஏற்றத் தாழ்வை உருவாக்கும் நிலைமைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு சரி செய்ய வேண்டுமென்ற வாதத்தை எவரும் உணர்ந்துகொள்ள முடியும்.

உறிஞ்சப்பட்ட ஏழைகளின் சொத்து

இந்த2ஆட்சிக்காலம் முழுவதும் ஏழைகளின் சொத்துக்களை உறிஞ்சும் வகையிலேயே மோடி அரசின் கொள்கைகள் இருந்திருக்கிறது. அதே சமயம், ஏழைகளிடம் பறிக்கப்பட்ட சொத்துக்களையும் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பொதுச் சொத்துக்களையும் பெரு முதலாளிகளுக்குக் கொடுப்பதன் மூலமும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பை பெருக்கி குவித்து, மையப்படுத்தும் வேலையும் நடந்திருக்கிறது. உதாரணமாக, வருவாய் மற்றும் சொத்துடைமையில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்வியை விளக்குவோம்.

ரூ.25.6 லட்சம் கோடிக்கு கணக்கு என்ன?

u    பெரு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, வரிக்குறைப்பு ஆகிய இரண்டில் மட்டும்  மிகப்பெரிய தொகை  அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளின் கடன் ரூ.14.56 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கார்ப்பரேட் வரி 2019-ஆம் ஆண்டு 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த ஆண்டில் மட்டும் கார்ப்பரேட் வரிகள் ரூ.1.84 லட்சம் கோடி விட்டுத்தரப்பட்டது.

u     இந்த ஆறு ஆண்டுகளில்  ரூ.11.04 லட்சம் கோடி பெரு முதலாளிகளுக்கு விட்டுத்தரப்பட்டது. பெருமுதலாளிகளுக்கு விட்டுத்தரப்பட்ட இதர சலுகைகளையெல்லாம் தள்ளிவிட்டுப் பார்த்தால் கூட இந்த இரண்டு அம்சத்தில் மட்டும் ரூ.25.6 லட்சம் கோடி இந்திய பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது.

அத்தனை பேரும் பத்தாயிரம் வருமானம் உள்ளவர்கள் அல்ல!

ஒன்றிய அரசு, முறைசாராத் தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் என்று ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் தற்போது 29 கோடிப் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளார்கள். 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கணக்கின்படி 27.69 கோடிப்பேர் இந்தத் தளத்தில் தங்களை பதிவுசெய்திருந்தனர். அப்போதைய கணக்குப்படி இவர்களில் 94.1 சதவீதம் பேர் அதாவது 26.03 கோடிப்பேர் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் கீழே வருமானம் பெற்றவர்கள். இப்படி ஒன்றை வாசிக்கிற போது பத்தாயிரம் என்பது தான் நினைவில் நிற்கும். ஆனால் இதில் வெறும் மூவாயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்களும் அடங்குவர். அந்த 27.69 கோடிப் பேரில் 74 சதவீதம் அதாவது, 20.49 கோடிப் பேர்  பட்டியல் இனத்தவர்-பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவ ர்கள். இவர்களில் 61.72 சதவீதம் பேர் 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். 

காச நான் போடுறேன்;  கம்பெனிய நீ வச்சுக்கோ!

அந்நிய நிறுவனங்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கடைசியாக நரேந்திரமோடி அமெரிக்கா சென்றுவந்தபோது மைக்ரோ சிப் தயாரிப்பதற்கான ஒரு கம்பெனியை இந்தியாவிற்கு கொண்டுவந்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டார். பிறகுதான் தெரிந்தது அது மைக்ரோ சிப் தயாரிக்கும் கம்பெனி அல்ல; மாறாக, மைக்ரோ சிப்பை  பொருத்துவது மற்றும் சோதனைக்கான நிறுவனம் மட்டுமே என்பது. ஆனால், இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த நிறுவனத்தின்  முதலீட்டில் 50 சதவீதத்தை ஒன்றிய அரசும் 20 சதவீதத்தை மாநில அரசும் அதாவது - குஜராத் அரசும் கொடுப்பார்கள். ஆனால், வெறும் 30 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யும் மைக்ரான் கம்பெனிக்கு 100 சதவீத உரிமை இருக்கும். 

எலான் மஸ்க்கிற்கு  எத்தனை பெரிய லாபம்!

தேர்தலுக்கு முந்தைய தினம் மோடி அரசு, இன்னொரு சலுகையையும் எக்ஸ்-தளத்தின் உரிமையாளர் எலான்மஸ்க்கின் மின்சார வாகன கம்பெனிக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இறக்குமதி வரி  விதிக்கப்பட்டிருந்தது. அதை வெறும் 15 சத வீதமாக மோடி அரசு குறைத்துவிட்டது. இதன் மூலம்  மட்டும் அந்த நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடி  விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. வேடிக்கை  என்னவென்றால் வெறும் ரூ.4 ஆயிரம் கோடி மூலதனத்தை இரண்டாண்டுகளில் கொடுக்கப்படும் இந்த சலுகையின் மூலம் மட்டுமே அந்த நிறுவனம் பெற்றுவிடும். இது தவிர மின்சார வாகனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கும். அது போக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 ஆயிரம் கோடி விட்டுக்கொடுக்கப்பட்ட வரியின் மூலம் லாபமடைவார்கள். இப்படி எண்ணிலடங்காத உதாரணங்கள் உள்ளன.

ஏழைகளிடம் பறித்தது ரூ.30 லட்சம் கோடி

அதே சமயம் ஏழை - எளிய - நடுத்தர மக்களிடமிருந்து இந்தக் காலத்தில் மோடி அரசு வலுக்கட்டாயமாக பறித்த தொகைகள் ஏராளம். பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலம் மட்டும் ரூ.30 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை ஒன்றிய அரசு ஏழைகளிடமிருந்து பறித்துக்கொண்டுள்ளது. அந்நியர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு எப்போதும் இந்தியாவில் அரிசி, கோதுமை ஆகிய உணவுப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை. ஆனால், இந்தக் காலத்தில் அதாவது மோடியின் ‘இராம இராஜ்ஜியத்தில்’ அரிசிக்கும், கோதுமைக்கும் ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருக்கைச் சோற்றுக்கும் இந்திய மக்கள் வரி கட்டும் கொடூர வரிக்கொள்கை யை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. பெரும் நிறுவனங்களின் அதிகபட்ச வரியை 22 சதவீதமாக குறைத்த ஒன்றிய அரசு, நடுத்தர வர்க்க மக்களுக்கு 30 சதவீதம் வரை வருமான வரி விதித்துள்ளது. வரி கட்டியது போக மீதமுள்ள பணத்தை வங்கியில்/ தபால் நிலையங்களில் நிரந்தர வைப்புத்தொகை, மாதாந்திர வைப்புத்தொகை, மாதாந்திர வருமான வைப்புத் தொகை ஆகியவற்றில் சேமித்தால் அந்த சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி ரூ.10 ஆயிரத்தை தாண்டினால் அந்த  பணத்திற்கும் வரி கட்ட வேண்டும். அதுவும் கூட, அந்தக் குறிப்பிட்ட நபர்  கட்டும் வருமானவரியில் உச்சபட்ச வரி அடுக்கு என்னவோ அந்த விகிதத்தையே கட்டவேண்டும்.

ஏழைகள் பரம ஏழைகளாவதும்  பணக்காரர் மெகா பணக்காரர்  ஆவதும் தற்செயலானதா?

 இந்தியாவில் நுகர்வு பொருளாதாரம் ‘360 சர்வே’ இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்கள் அளித்துள்ள விவரப்படி, 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்திய மக்கள் தொகையில் கீழ் மட்டத்திலுள்ள 20 சதவீதம் ஏழைகளின் வருமானம் 50 சதவீதம் குறைந்துள்ளது. 

  1.  அவர்களுக்கு சற்று  மேலே உள்ள கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 20 சதவீதம் பேரின் வருமானம் 30 சதவீதம் குறைந்துள்ளது.
  2.  அடுத்துள்ள 20 சதவீதம் மத்தியதர வர்க்கத்தின் வருமானம் 10 சதவீதம் குறைந்துள்ளது.  
  3.  அதற்கும் மேலேயுள்ள உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் வருமானம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பெரும் பணக்காரர்களாக உள்ள மேல்மட்ட 20 சதவீதத்தினரின் வருமானம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.      அதாவது ஏழைகளாக உள்ளவர்கள் மேலும் மேலும் ஏழைகளாக இந்த ஐந்தாண்டுகளில் மாற்றப்பட்டுள்ளார்கள்.  பெரும் பணக்காரர்கள்  மிகப்பெரும் பணக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.  
  4.     இந்தக் காலத்தில் ஒட்டுமொத்த வருமானத்தில் மேலே உள்ள ஒரு சதவீதம் பேரின் வருமானம் 22.6 சதவீதமாகவும், மேலே உள்ள 10 சதவீதம் பேரின் வருமானம் மொத்த வருமானத்தில் 57 சதவீதமாகவும் கீழே உள்ள 50 சதவீதம் பேரின் வருமானம் 13 சதவீதமாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. அதாவது, இந்த நாட்டில் மொத்த வருமானத்தில் 10-இல் 1.3 பகுதி மட்டுமே  கீழ் மட்டத்திலுள்ள 50 சதவீதம் பேரின் வருமானமாக இருக்கிறது. அதே சமயம் மேலே இருக்கும் 10 சதவீதம் பேரின் வருமானம் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கிற்கு அருகே வந்துள்ளது. இது தற்செயலானது அல்ல.      இதே போன்று சராசரி வருமானம் என்று எடுத்துக்கொண்டால், மேல்  மட்டத்தில் உள்ள 10 சதவீதம் பேரின் சராசரி வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.13,52,985 கோடி ஆகும். இதை கீழ் மட்டத்திலுள்ள 50 சதவீதம் பேரின் சராசரி ஆண்டு வருமானமான ரூ.71,163-வுடன் ஒப்பிட்டால் 19 மடங்காகும்.     இந்தியாவில் மொத்த சொத்து மதிப்பு மேல்மட்டத்திலுள்ள ஒரு சதவீதம் பேரிடம் 40 சதவீதமும் கீழ் மட்டத்திலுள்ள 50 சதவீதம் பேரிடம் வெறும் 6.4 சதவீதமே உள்ளது. மேல் மட்டத்திலுள்ள பத்தாயிரம் பணக்காரர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2,260 கோடி. இதுவே, மேலே உள்ள ஒரு சதவீதம் பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5,400 கோடி. தேசிய சராசரியான ரூ. 13,48,207 என்பதோடு ஒப்பிட்டால் 40,053 மடங்கு அதிகமாகும்.


இப்படி ஒரு பக்கம் செல்வந்தர்களுக்கு வரி குறைப்பு, வரி விலக்கு, முதலீட்டு மானியம் என அள்ளிக்கொடுத்து அவர்களிடம் செல்வம் குவிவதை, மையப்படுத்துவதை அரசே முன்னின்று செய்கிறது. மற்றொரு பக்கம் ஏழைகளிடம் புதிய வரி விதிப்புகளின் மூலம் ஒட்டச் சுரண்டுகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39-சி “செயல்பாட்டிலிருக்கும் பொருளாதார முறை சொத்துக்களும் உற்பத்திக் கருவிகளும் பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மையப்படுத்தப்படுவது கூடாது” என்று வலியுறுத்துகிறது. எனவே, இப்போதுள்ள பொருளாதார முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் மறு விநியோகத்தையும் அனைத்து மக்களுக்குமான நலனை உத்தரவாதப்படுத்தும்  பொருளாதார முறையையும் உருவாக்குவதும் அவசியமாகும்.  எனவே, வருமானம், சொத்து பங்கீடு மற்றும் மறு பங்கீடு குறித்த விவாதங்கள் சரியான திசையில் செல்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதை மடைமாற்றுவதற்காகவே ஏழைகள் -  பெரும் செல்வந்தர்கள் என்பதை இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று மோடி வகையறா  திசைதிருப்பி தடம்புரள வைக்கிறது. இந்த விவாதத்தை சரியான திசைவழியில் நடத்துவதும்  இந்தியாவில் பெருவாரியான மக்களின் உணர்வாகவும் போராட்ட முழக்கமாகவும் இதை மாற்றுவதும் முற்றிலும் அவசியமான ஒன்று மட்டுமல்ல; நியாயமானதும் ஆகும்.
 

;