world

img

விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண்டித்து பாகிஸ்தான் விவசாயிகள் போராட்டம்

இஸ்லாமாபாத்,மே 8 - பாகிஸ்தான் அரசு கோதுமை கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு விவசாயிகள்  நாடு தழுவிய போராட்டத்தைத் துவங்க உள்ளனர். மே 10 அன்று போராட்டத்திற்கான பிரச்சாரம் துவங்கும் என  விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான பாகிஸ்தான் கிசான் இத்தேஹாத் (பாகிஸ்தான் உழவர் இயக்கம்) தலைவர் காலித் கோகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான பாக். அரசு, கோதுமை  கொள்முதலை பெருமளவு  குறைக்க முடிவெடுத்துள்ளது.இந்த முடிவு விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும்  சீர்குலைக்கும் என்று  விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.   இந்த போராட்ட அறிவிப்பிற்கு முன்னதாகவே விவசாயிகள் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க முயன்றதாகவும். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாததால்  தற்போது நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஷெரீப் அரசு ஆண்டுக்கு வெறும் 20 லட்சம் டன் கோதுமையை வாங்கலாம் என்றும் 40 கிலோ கோதுமைக்கு ஆதரவு விலையாக 3,900 பாக்.,” ரூபாய் கொடுக்கலாம்  என முடிவெடுத்துள்ளது.  2023 ஆம் ஆண்டு  2.8 கோடி டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு  3.2 கோடி டன்னாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ள சூழலில் இவ்வாறு கொள்முதலை குறைப்பது விவசாயிகளுக்கு 140 கோடி  அமெரிக்க டாலர்களுக்கு மேல் இழப்பை ஏற்படுத்தும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அரசாங்கம்  சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதனை தொடர்ந்து நிதியத்தின் ஒப்பந்தம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக மின்சாரத்திற்கான மானியங்களை அரசு திரும்பப் பெற்று மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது.  கடுமையான பணவீக்கம், விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, வருமானம் வீழ்ச்சி  ஆகிய பிரச்சனைகளுக்கு இடையே  பாக். விவசாயிகள் விவசாயத்தைத் தொடரப் போராடுகிறார்கள். பாகிஸ்தானின் மொத்த தொழிலாளர் சக்தியில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   அந்நாட்டின் மொத்த ஏற்றுமதி  கிட்டத்தட்ட 70 சதவீதம் விவசாயத் துறையுடன் தொடர்புடையது. இந்நிலையில் விவசாயிகளின் வருமானத்தில் அரசு உருவாக்கும் ஒவ்வொரு பாதிப்பும் மிகப்பெரிய அளவு பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் என விவசாய சங்கங்கள்  எச்சரித்துள்ளன.

;